Pages

Tuesday 28 August 2018

பவளப்பாறைகளால் உருவான தனுஷ்கோடி மரபுநடை நிகழ்ச்சியில் தகவல்
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஏழாம் மரபுநடை நிகழ்வு 26.08.2018 அன்று தனுஷ்கோடியில் நடந்தது. இதில் தனுஷ்கோடியின் பெரும்பான்மையான கட்டடங்கள் பவளப்பாறைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும் வரவேற்றார். 

நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையான இராமேஸ்வரம் தீவில் பண்பாடும் இயற்கைத் தாவரங்களும் பரவி அழகுபடுத்துகின்றன. பறவைப் பார்வையில் இத்தீவு கைப்பிடியுள்ள ஒரு வாள் போன்ற அமைப்பில் உள்ளது


பாம்பு போன்று அமைந்துள்ளதால் பாம்பன் கால்வாய் என  அழைக்கப்படுகிறது. குதிரை தாண்டும் தூரத்தில் இருந்த இக்கால்வாய், கி.பி.1480ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் பெரிதானது. கி.பி.1639இல் திருமலை நாயக்கரின் தளபதி இராமபையன், பாம்பனில் ஒளிந்து கொண்ட தளவாய் சேதுபதியை பிடிக்க பாம்பன் கால்வாயில் முதன்முதலாக ஒரு பாலம் ஏற்படுத்தினார்


இராமேஸ்வரம் கோயிலுக்கு பாண்டியர், சோழர், இராஷ்டிரகூடர், இலங்கை மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள் ஆகியோர் திருப்பணி செய்துள்ளார்கள். இராமேஸ்வரம் அருகில் அரியாங்குண்டு பகுதியில் ஒரு பெரிய பௌத்தப் பள்ளி இருந்துள்ளது. இங்கு புத்தரின் கற்சிற்பமும் கிடைத்துள்ளது


தனுஷ்கோடியில் வங்காளவிரிகுடாவும், மன்னார் வளைகுடாவும் ஒன்றாகச் சங்கமிக்கும் அரிச்சல்முனை பகுதி,  அம்புமுனை போல உள்ளதால் தனுஷ்கோடி என பெயர் வந்துள்ளது. சங்க இலக்கியமான அகநானூறில்  மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எனும் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.

இரட்டைத்தாழை முனியசாமி கோயிலில் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. இது முன்னூற்றுவர், வளஞ்சியர், திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வணிகக் குழுவினர் இணைந்து இராமேஸ்வரத்தில் செய்த தர்மத்தைக் குறிப்பிடுகிறது


முஸ்லிம்களின் கல்லறையின் மேல் நீளமான ஒரு தூண் கட்டப்பட்டிருப்பதைகோரிஎன்கிறார்கள்.  இது குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்ற அமைப்பில் உள்ளது. கோரிகள் தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. குந்துகால் மற்றும் குருசடித் தீவிற்கு இடையில் கடலில் ஒரு கோரி உள்ளது.


கி.பி.1162இல் திருநெல்வேலியை ஆண்டு வந்த சடையவர்மன் குலசேகரபாண்டியன் மதுரையை ஆண்டுவந்த பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது உதவிக்கு வந்த இலங்கை படை, குந்துக்கால் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டதாக  மகாவம்சம் கூறுகிறது. குருசடித் தீவிற்கும், பாம்பனுக்கும் இடையில் உள்ளது குந்துக்கால்வாய். குந்து என்பவர் பெயரால் இக்கால்வாய் அழைக்கப்படுகிறது. சமண மதத்தின் 17வது தீர்த்தங்கரர் குந்துநாதரால் இப்பெயர் வந்திருக்கலாம்


இராமேசுவரம் தீவில் பாரம்பரியத் தாவரங்களாக மண்ணரிப்பைத் தடுக்கும் தாழை மரங்கள், அடும்புக்கொடி ஆகியவை காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன்புளி மரங்கள் தங்கச்சிமடம், இராமேசுவரத்தில் உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.


கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை முதுகுளத்தூர் கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சுபலட்சுமி பஜாஜ் உரிமையாளர் அரு.சுப்பிரமணியன், தாமோதரன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பாம்பன் பாலம், அழிந்துபோன தனுஷ்கோடி, பொந்தன்புளி,  தாழை மரங்கள், அடும்புக்கொடி ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்துகொண்டனர். தனுஷ்கோடி பற்றிய சிறு நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் முஹம்மது ராஃபி அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்.

 நாளிதழ் செய்திகள் 

 
 

Monday 20 August 2018

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தெய்வங்களின் கதை சொல்லும் மன்றம்ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் மக்கள் தெய்வங்கள் என்ற தலைப்பில் வரலாற்றுக்கதை சொல்லும் மன்றம் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவி து.நிஷா கோபிகா வரவேற்றார். ஓவிய ஆசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் பேசியபோது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் பகுதியில் வாழ்ந்து மறைந்தவர்கள் மக்களால் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்கள். இத்தெய்வங்களைப் பற்றிய வாய்மொழி வரலாறை மாணவர்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார்

மன்னர்களுக்கு மட்டுமல்ல சாதாரண மக்களுக்கும் வரலாறு உண்டு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஊருக்காகவும், நாட்டுக்காகவும் தங்கள் உயிரை இழந்த பலபேர் மக்களால் போற்றப்படுகிறார்கள். கிராமக் கோயில்களின் வழிபாடுகளில் பல வரலாறுகள் உள்ளன. அவற்றை மாணவர்கள் ஆவணப்படுத்தவேண்டும்  என மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு அறிமுக உரையின் போது கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேரும், 7ஆம் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் கலந்துகொண்டு வரலாற்றுக் கதைகளை சொன்னார்கள். உடன்கட்டை ஏறி இறந்த பெண்களுக்கு கட்டப்பட்ட மாலைக்கோயில்கள் குறித்து ச.சந்திராஸ்ரீயும், ஆர்.எஸ்.மடையில் உள்ள வண்ணமிளகு, களஞ்சியம் ஆகிய இரு தெய்வப்பெண்கள் குறித்து து.மனோஜும், அம்மன்கோயில் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் குறித்து ச.ஜனனியும், ராமநாதபுரத்தில் ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாகக் கட்டப்பட்ட கப்பல் வடிவ தேவாலயம் குறித்து அ.முகமது லபிப்பும், கழுமர வழிபாடு குறித்து ச.ஜாஸ்மினும் கதை சொன்னார்கள்

ஆறாம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி ச.சாஜிஹா பானு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் விசாலி, சுதர்ஸன், முகம்மது நஜிப் ஆகியோர் செய்தனர்.


நாளிதழ் செய்திகள்
  

VIDEOS

                                         

 

 

 

 

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாட்டின் தொல்பழங்காலம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் தமிழ்நாட்டின் தொல்பழங்காலம்என்ற தலைப்பில்  கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. எட்டாம்வகுப்பு மாணவி தி.திவின்பிரியா வரவேற்றார். ஓவிய ஆசிரியர் .அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இக்கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கி  வைத்த பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் பேசியபோது, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மற்றும் சமூகஅறிவியல்  பாடங்களில் நமது பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதை வெறுமனே படித்து தேர்வுக்குத் தயாராவது என்பது இந்த பாடங்களின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும். இத்தகைய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகள் பாடங்களை எளிதாக்கி மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. இதன்மூலம்  பழமையை அறிந்து அதை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை  மாணவர்களிடம் ஏற்படுத்தமுடிகிறது என்று கூறினார்


சமீபத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலம், மனித இனம் முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. பழமையான தமிழ் நூல்கள் கூறும் ஊர்கள், துறைமுகங்கள் போன்றவை அகழாய்வுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் நுண்கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால, சங்ககாலத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் நமது பண்பாட்டை அறிந்து, அதைப் பாதுகாப்பார்கள் என மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு கருத்தரங்கம் பற்றிய அறிமுக உரையின் போது தெரிவித்தார்.

கருத்தரங்கத்தில் பழைய கற்காலம் குறித்து .சந்திராஸ்ரீ, இடைக்கற்காலம் குறித்து மு.அனிஷா, புதிய கற்காலம் குறித்து .ஜமுனா, இரும்புக்காலம் குறித்து இரா.கோகிலா, சங்ககாலம் குறித்து .ஜாஸ்மின் ஆகிய ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஐந்துபேர் பேசினர். ஏழாம் வகுப்பு மாணவன் து.மனோஜ் நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி கோ.பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

      பின்பு நடந்த கண்காட்சியில் ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழைய, இடைக்கற்கால, புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்கால, சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிக்கு  வைக்கப்பட்டிருந்தன. இவை எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதை மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகம்மது லபிப், முகம்மது நஜிப், அபுரார் அகமது ஆகியோர் செய்தனர்.


நாளிதழ் செய்திகள்
 

வீடியோ