Pages

Saturday, 18 August 2018

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே  செம்பிலான்குடியில் தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் மாவட்டத்தில் முதன்முறையாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு,  ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை பகுதியில் மேற்கொண்டிருந்த களஆய்வின் போது, செம்பிலான்குடி சிவன் கோயில் அருகில்  நவகண்ட சிற்பத்தைக்   கண்டுபிடித்தனர். 

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

வீரர்கள், போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும்,  தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும் காளி, கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு,  அக்கோயில் முன்பு வாளால் தங்கள் தலையை தாங்களே அரிந்து அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர். இதனை கல்வெட்டுகள் தூங்குதலை குடுத்தல்என்கின்றன. இந்த முரட்டு வழிபாடு தலைப்பலி, நவகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. 


அன்பின் மிகுதியால் தனக்கென வாழாது ஊரின், நாட்டின் நலனுக்காக தன் தலையையோ உடல் உறுப்புகளையோ காணிக்கையாகத் தரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. அவ்வாறு உயிர்நீத்த வீரர்களின் வம்சாவழியினருக்கு நிலம் தானமாக வழங்குவார்கள். இதை உதிரப்பட்டி என்பர். இவ்வாறு இறந்தவர்களை சாவான்சாமி என தெய்வமாக வணங்குகிறார்கள். 

அமர்ந்த, நின்ற அல்லது முழங்காலிட்ட நிலையில் இருக்கும் வீரன், தனது ஒரு கையால் தலைமுடியை பற்றிக்கொண்டு, மறுகையிலுள்ள வாளால் தன் தலையை வெட்டுவது போன்ற அமைப்பில் தான் பெரும்பாலான  நவகண்ட சிற்பங்கள் இருக்கும். சிலவற்றில் வீரனின் ஒரு கையிலுள்ள வாள் கழுத்திலும், மற்றொரு கையிலுள்ள வாள் நிலத்தில் குத்தி இருப்பது போன்றும் இருக்கும்.  வாளை வளைத்து பின்கழுத்தில் இரு கைகளாலும் வெட்டுவது போன்ற சிற்பங்களும் கிடைத்துள்ளன.

நாட்டுக்காக உயிர் துறத்தலை அவிபலி என தொல்காப்பியம் கூறுகிறது. நவகண்டம் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி போன்ற நூல்களில் காணப்படுகின்றன. 

பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மல்லல், குன்றக்குடி,  விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை, மதுரை மாவட்டம் தென்கரை, திண்டுக்கல் மாவட்டம் பழநி, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே நவகண்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக தற்போது செம்பிலான்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செம்பிலான்குடியில் உள்ள நவகண்ட சிற்பத்தில் மேலே கல்வெட்டும், கீழே பீடமும், நடுவில் வீரனின் புடைப்புச்சிற்பமும் உள்ளன. வீரனின் வலது கையில் உள்ள வாள் கழுத்தை அறுப்பது போலவும், இடதுகையில் உள்ள குறுவாள் வயிற்றுப் பகுதியில் இருப்பது போலவும் சிற்பம் அமைந்துள்ளது. 

வீரனின் சிற்பம் 2.5 அடி உயரம் உள்ளது. அவர் காலில் செருப்பு அணிந்துள்ளார். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் சிற்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முகம் சேதமடைந்துள்ளது.

தூங்குதலை குடுத்தல் பெரும்பாலும் காளி கோயில் முன்பு தான் நடக்கும் என்பதால் சிலையையும் கோயில் முன்பு அமைப்பது வழக்கம். இவ்வூரில் ஏற்கனவே காளி கோயில் இருந்து அழிந்து போனபின் இச்சிலையை சிவன்கோயில் பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம்.

இவ்வூர் சிவன்கோயில் சோழர்கால கலை அமைப்பில் உள்ளது. செம்பிலான்குடி, சூரம்புலி ஆகிய ஊர் பெயர்களும் சோழர்களை நினைவுபடுத்துகின்றன. சிற்பத்தின் மேலுள்ள கல்வெட்டு  தேய்ந்து அழிந்துள்ளது. இதில் உள்ள சில எழுத்துகளை மட்டும் படிக்கமுடிகிறது. இதன் எழுத்தமைதி கொண்டு பாண்டியநாடு சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த கி.பி.11 ஆம் நூற்றாண்டில் இச்சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம். நவகண்டம் கொடுக்கும் வழக்கம் சோழ நாட்டுப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. பாண்டிய நாட்டுப்பகுதிகளில் இவ்வழக்கம் பெரியஅளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.


நாளிதழ் செய்திகள்
 1 comment:

  1. Merkur Futur Adjustable Safety Razor - Sears
    Merkur Futur Adjustable Safety https://septcasino.com/review/merit-casino/ Razor is the perfect goyangfc balance of performance, safety, and comfort. Made in febcasino Solingen, Germany, this razor has a kadangpintar perfect balance of

    ReplyDelete