சென்னை அகிம்சை நடை அமைப்பும், இராமநாதபுரம் தொல்லியல் மற்றும்
வரலாற்றுப் பாதுகாப்பு மையமும், திருப்புல்லாணி
தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து சிவகங்கை மாவட்டம் திருமலையில் உலக அகிம்சை
நாள் விழா பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அழியும் நிலையில் உள்ள சமண வழிபாட்டுத்தலங்கள்
உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களைக் கண்டுபிடித்து பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள
அகிம்சை நடை அமைப்பு மாணவர்களுக்கு தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றிய
விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு
அன்று, ஏதாவது ஒரு தொல்லியல் சின்னங்களைப் பார்வையிடும் விழிப்புணர்வுப் பயணத்தை
நடத்தி வருகிறது.
மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, ஒவ்வொரு ஆண்டும் உலக அகிம்சை
நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்பை மாணவர்களுக்கு உணர்த்த,
சிவகங்கை மாவட்டம் திருமலையில் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பயிலரங்கத்துக்கு தலைமை தாங்கிய தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு, திருமலையில்
சுமார் 40௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிமனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள், 22௦௦
ஆண்டுகள் பழமையான சமண முனிவர்கள் தங்கி இருந்த குகைகள், படுக்கைகள் மற்றும் தமிழி கல்வெட்டுகள்,
கி.பி.8 நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப்பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட
சிவனுக்கான குடைவரைக்கோயில், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிற்காலப்பாண்டியர்
கால கட்டுமான சிவன்கோயில் ஆகியவற்றின்
சிறப்புகளை எடுத்துக்கூறினார்.
துணைத்தலைவர் தாஸ் பரிசு வழங்குகிறார் |
சமண
சமயம் தோற்றுவிக்கப்பட்ட வரலாறு, தீர்த்தங்கரர்களின் பெருமைகள், சமண முனிவர்கள்
அறிவுறுத்திய அகிம்சை கொள்கைகள், சமண சமயம் இந்த உலகத்துக்கு வழங்கிய
அறக்கருத்துகள் ஆகியவை பற்றி தமிழ் இலக்கியங்களில் உள்ள கருத்துகளை ஆதாரமாகக்
கொண்டு துணைத்தலைவர் தாஸ் விளக்கினார்.
காந்தியடிகள் இந்திய
விடுதலைக்கான போராட்டத்தின் போது அகிம்சை வழியைப் பின்பற்றி வெற்றி பெற்றதன் மூலம்
இது எக்காலத்துக்கும் ஏற்றது என அகிம்சை நடையின் செயலாளர் தனஞ்செயன் பேசினார்.
இதில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தாதனேந்தல் சினேகா, திருப்புல்லாணி
விசாலி, பொக்கனாரேந்தல் அபர்ணா, முத்துவீரப்பன்வலசை அபிநயா ஆகியோர் கலந்து கொண்டு சாதாரண மக்களின் வரலாறுகளை, வாய்மொழித்
தரவுகள், களஆய்வுகள் மூலம் ஆவணப்படுத்த
அந்தந்த ஊர் மாணவர்கள் முன்வரவேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் ஊர் வரலாறை
ஆவணப்படுத்திய அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர். பயிலரங்கில்
கலந்துகொண்ட மாணவர்களுக்கு அகிம்சை நடை அமைப்பினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரபுகாந்தி,
சௌதர்மேந்திரன், நாகேந்திரன், வாசுகி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு திருமலையில் நிகழ்த்திய உரை