Pages

Friday 27 May 2016

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கிய தமிழ் வழிப் பள்ளிக்கு கட்டடம் கட்ட கொடை வழங்கிய சேதுபதி ராணி பரமக்குடியில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு



பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
கோயில், பள்ளிவாசல், தேவாலயம் போன்ற ஆன்மீகத் தலங்களுக்கும், தனி நபர்களுக்கும் தானம் வழங்கி சேது நாட்டில்  ஆன்மீகம், கலை, தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள். 

அதேபோல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியால் தொடங்கப்பட்ட தமிழ் வழிப் பள்ளிக்கு கட்டடம் கட்ட, கி.பி.1846 முதல் கி.பி.1862 வரை சேது நாட்டை ஆண்ட சேதுபதி இராணி பர்வதவர்த்தினி நாச்சியார் பொருளுதவி வழங்கியுள்ளார். இச்செய்தி சொல்லும் கல்வெட்டு பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் கல்லால் ஆன இப்பலகைக் கல்வெட்டை ஆய்வு செய்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு இந்தக் கல்வெட்டைப் படியெடுத்தார்.
அதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1826 இல் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோ பரிந்துரையின் படி கல்வி முறையை சீர்திருத்த ஒரு பொதுக்கல்விக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி, மாவட்டத் தலைநகரங்களில் இரண்டு உயர்நிலைப் பள்ளிகளையும்,  தாலுகா தலைநகரங்களில் ஒரு தொடக்கநிலைப் பள்ளியையும் நிறுவ உத்தரவிடப்பட்டது. அப்போது இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் மதுரை மாவட்டத்திலேயே இருந்தன. எனவே மதுரையில் மாவட்ட உயர்நிலைப்பள்ளிகள் இரண்டு தொடங்கப்பட்டன. இங்கு ஆங்கிலமும், தமிழும் கற்பிக்கப்பட்டன. 

தாலுகா தலைநகரங்களான பரமக்குடி, சிவகங்கையில் தலா ஒரு தாலுகா பள்ளி தொடங்கப்பட்டன. அங்கு தமிழ் வழிக் கல்வி மட்டுமே போதிக்கப்பட்டது. அச்சமயம் அப்பகுதிகளில் இயங்கி வந்த திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட பாடங்களே இங்கும் கற்பிக்கப்பட்டன. இப்பள்ளிகளுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லாததால் இவை கி.பி.1836 இல் மூடப்பட்டன. பின்னர் சில ஆண்டுகள் கழித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து, மெக்காலேயின் ஆங்கிலவழிக் கல்வியையும்  கற்பிக்கும் பள்ளிகளாக அவை மீண்டும் தொடங்கப்பட்டன.
கல்வெட்டு

இந்நிலையில் ஆங்கிலேயர்கள் இராமநாதபுரம் சேதுநாட்டை கி.பி.1803 இல் ஜாமீன்தார் அந்தஸ்துக்கு குறைத்தார்கள். அதன் முதல் ஜமீந்தாரினியாக மங்களேஸ்வரி நாச்சியார் நியமிக்கப்பட்டார். அதன்பின் பட்டத்துக்கு வந்த அண்ணாசாமி சேதுபதி, இராமசாமி சேதுபதி, முத்துவீராயி நாச்சியார் ஆகியோருக்குப் பின் கி.பி.1846 இல் ஆட்சிக்கு வந்த  பர்வதவர்த்தினி நாச்சியார் வாரிசு பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தைத் தொடர்ந்து நாடி வந்தார்.
இத்தகைய சூழலில் மக்களிடையே கல்வியறிவை வளர்க்கவும், பரமக்குடி தாலுகா பள்ளியை தொடர்ந்து நடத்திடவும் வேண்டி சேதுபதி இராணி பர்வதவர்த்தினி நாச்சியார் வழங்கிய பொருளுதவி மூலம் கி.பி.1856 இல் அப்பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டில் ராணி சேதுபதி ஹிரண்ய கர்ப்ப யாஜி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். மன்னர்கள் பொன்னால் செய்யப்பட்ட பசு உருவத்தின் உள்ளே இருந்து யாகம் செய்து அது முடிந்தபின் அவ்வுருவத்தை பிரித்து பிராமணர்களுக்குத் தானமாக வழங்குவார்கள். இந்த யாகம் செய்த மன்னர்கள் ஹிரண்ய கர்ப்ப யாஜி என அழைக்கப்படுவார்கள்.
சேதுபதி மன்னர்களில் ஹிரண்ய கர்ப்ப யாகம் செய்தவர் போகலூரைத் தலையிடமாகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி ஆவார். அதனால் அவருக்குப் பின் வந்த அனைத்து சேதுபதிகளும் ஹிரண்ய கர்ப்ப யாஜி என கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்படுகிறார்கள். 
பரம்பை மரம்
 
பரம்பை மர இலைகள்

பரம்பை மர முட்கள்

பரமக்குடி இக்கல்வெட்டில் பரம்பைக்குடி எனக் குறிக்கப்பட்டுள்ளது. பரம்பை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இவ்வூருக்கு பரம்பைக்குடி என பெயர் ஏற்பட்டுள்ளது. பரம்பை, பரமன் வேலம், வெள்வேலம் என அழைக்கப்படும் இம்மரங்கள் வேல மரங்களில் ஒருவகை ஆகும். வெள்ளை நிற தண்டுடைய இம்மரங்கள் மருத்துவ குணம் நிறைந்தவை.
பரமக்குடி தாலுகா முன்சீப்பாகவும், நீதிபதியாகவும் இருந்த வில்லியம் போவாலது என்ற ஆங்கிலேயர்  மேல் விசாரணை செய்ததன் பேரில் இக்கட்டடம் கட்டப்பட்டது என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆங்கிலத்திலும் தமிழும் உள்ளன.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த நிலையில் இடிக்கப்பட்டுவிட்டது. ஓடு வேயப்பட்ட கட்டடமாக இருந்த இதன் அடிப்பகுதி இப்பொழுதும் இங்கு உள்ளது. வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் தமிழ் வழிப் பள்ளிகளைத் திறந்ததற்க்கும் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு சேதுபதிகள் தானம் வழங்கியதற்கும் இக்கல்வெட்டு சான்றாக விளங்குகிறது. எனவே பள்ளி நிர்வாகத்தினர் இதை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.   

நாளிதழ் செய்திகள்

'தி இந்து' செய்தி 


'தினத்தந்தி' செய்தி 



Thursday 26 May 2016

உயர்நிலைப்பள்ளி ஆகி 52 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற ஆட்டோ டிரைவர் மகள் சரண்யா திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதனை



இராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி  உள்ளது. இப்பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆகி 52 ஆண்டுகள் ஆன சிறப்பு பெற்றுள்ளது. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் கொண்டுள்ள 108 திவ்விய தேசங்களில் 44 வதாகப் போற்றப்படுவது திருப்புல்லாணி ஆகும். இக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள இப்பள்ளி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி ஆகும்.
இவ்வூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த இராயர் சத்திரத்தில் 12.05.1949 அன்று தொடக்கப்பள்ளி முதன்முதலில் தொடங்கப்பட்டது. இப்பள்ளி 27.06.1963 இல் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்பு தற்போது தொடக்கப்பள்ளி உள்ள இடத்தில் அரசால் 1950 இல் கட்டப்பட்ட ஒரு கட்டடம் மற்றும் சோமசுந்தரம் சேர்வை என்பவரால் 1960 இல் கட்டி வழங்கப்பட்ட ஒரு கட்டத்திலும் பள்ளி செயல்பட்டு வந்தது.
இவ்வூரைச் சேர்ந்தவரான இராமநாதபுரம் ஜெகன் திரையரங்க உரிமையாளர் ஜெகநாதன் அவர்கள் இப்பள்ளிக்கு ரூ.10 இலட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைக் கட்டடம் கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளதால் 1999 இல் அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளியின் பெயரை சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளி என தமிழகஅரசு பெயர் மாற்றம் செய்தது.
      இப்பள்ளி 2006 இல் மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 500 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் செயல்படுகிறது. இப்பள்ளியில் பயின்ற பலபேர் பலவித உயர்ந்த நிலையில் உள்ளனர்.
தற்போது இப்பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் திருமதி மு.பிரேமா அவர்கள் இப்பள்ளிக்கு வந்தது முதல் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக அரும்பாடுபட்டு வருகிறார். இதன் காரணமாக, 1963 முதல் உயர்நிலைப்பள்ளியாக செயல்படத்தொடங்கி ஐம்பது ஆண்டுக்கும் மேல் ஆன நிலையில் சென்ற 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் முதன்முதலில் நூறு சதவீத தேர்ச்சியை இப்பள்ளி அடைந்து சாதனை படைத்தது. இப்பள்ளியில் பயிலும் பல மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வசிக்கும் இப்பள்ளியின் பழைய மாணவி கெளரி என்பவர் ஒவ்வொரு ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்க்கு ரூ.5000 மும் இரண்டாமிடம் பெறுபவர்க்கு ரூ.3000 மும் மூன்றாமிடம் பெறுபவர்க்கு ரூ.2000 மும் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறார்.
இப்பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் மலைக்கண்ணன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்க்கு ரூ.2000 மும் இரண்டாமிடம் பெறுபவர்க்கு ரூ.1500 மும் மூன்றாமிடம் பெறுபவர்க்கு ரூ.1000 மும் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறார்.
      இந்த ஆண்டு 2016 ஆண்டு மார்ச்சில்  நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 69 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97 ஆகும்.
476 மதிப்பெண் பெற்று சரண்யா என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவியின் தந்தை கணபதி திருப்புல்லாணியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். தன் மகள் அதிக மதிப்பெண் பெற்றது தனக்குப் பெருமை என்று கூறினார். 

முதலிடம் பெற்ற சரண்யா

      இம்மாணவி பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் 95 ஆங்கிலம் 88 கணிதம் 96 அறிவியல் 99 சமூக அறிவியல் 98 மொத்தம் 476

இரண்டாமிடம் பெற்ற அல்ஸொய்மா என்ற மாணவியின் மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 99 ஆங்கிலம் 86 கணிதம் 88 அறிவியல் 97 சமூக அறிவியல் 97 மொத்தம் 467

இரண்டாமிடம் பெற்ற அல்ஸொய்மா

மூன்றாமிடம் பெற்ற அபினா என்ற மாணவியின் மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 97 ஆங்கிலம் 91 கணிதம் 89 அறிவியல் 91 சமூக அறிவியல் 98 மொத்தம் 463

மூன்றாமிடம் பெற்ற அபினா


     பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்ற அபினா என்ற மாணவி ஆங்கிலப் பாடத்தில் 91 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் பள்ளி அளவில் ஆங்கிலப் பாடத்தில் பெற்ற அதிக மதிப்பெண் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.  
பள்ளி உயர்நிலைப்பள்ளியாகி 52 ஆண்டுகள் அடைந்துவிட்ட நிலையில் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் 95.2% மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறை. 400 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 17 பேர்.
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களே அதிகஅளவில் இப்பள்ளியில் பயிலுகிறார்கள். அடிப்படைத்திறன்களைக் கூட அடைந்திராத இம்மாணவர்களை தேர்வில் தேர்ச்சி பெறச்செய்ய மிக அதிக அளவிலான முயற்சிகளை ஆசிரியர்கள் எடுக்கிறார்கள். தேவை ஏற்படும்போது சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் கூட சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களை தேர்ச்சி பெறவைப்பதிலும் பெற்றோர்களை பள்ளிக்கு வரவைத்து அவர்களின் ஒத்துழைப்பை பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரிக்க  தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா அவர்கள் தொடர் முயற்சி எடுத்து வருகிறார்கள். பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மாணவியர், மாணாக்கர், ஆசிரியர்களுக்கு என தனித்தனியாக ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அமைக்கப்பட்ட உப்புநீரை குடிநீராக்கும் இயந்திரம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினசரி வழங்கப்படுகிறது. பள்ளிவளாகம் முழுவதும் மரங்கள் நடப்பட்டு பசுஞ்சோலையாகத்  திகழ்கிறது. 

தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா

தமிழாசிரியர்களாக திருமதி மாலா மற்றும் திருமதி கிருஷ்ணவேணி அவர்களும், ஆங்கில ஆசிரியராக திரு வே.இராஜகுரு அவர்களும், கணித ஆசிரியர்களாக திருமதி த.கலையரசி மற்றும் திரு பாலாஜி அவர்களும், அறிவியல் ஆசிரியராக திரு கோ.இராமு அவர்களும், சமூக அறிவியல் ஆசிரியர்களாக திருமதி ஹெலன் ஜாய்ஸ் நிர்மலா மற்றும் திருமதி வரலட்சுமி அவர்களும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாட ஆசிரியர்களாக பணியாற்றினார்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறச்செய்த அனைத்து ஆசிரியர்களையும் தலைமையாசிரியர் பாராட்டினார்கள்.

'தி இந்து' செய்தி