ஒருங்கிணைந்த
இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லா ஊர்களிலும் கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், குட்டங்கள், ஊரணிகள், ஏந்தல்கள் போன்ற நீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவி மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் என கிடைக்கும் அத்தனை
நீரையும் சேகரித்து வைக்கும் திட்டங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு
செயல்படுத்தி, எல்லா ஊரிலும் நீர்வளம் செழிக்கச் செய்து நீர் மேலாண்மையில் சிறந்து
விளங்கியுள்ளனர் பாண்டியர்கள். அவற்றை
தங்கள் ஆட்சியில் தொடர்ந்து பராமரித்தும் புதியவைகளை உருவாக்கியும் வந்துள்ளனர்
சேதுபதிகள்.
கண்மாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் |
சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் 795 ஊர்களின் பெயர்கள் குளம் என முடிகிறது. ஏந்தல் என்ற
பெயரில் 562 ஊர்களின் பெயர்கள் உள்ளன.
நதிநீர் இணைப்பு
கூகுள் மேப் வழியாக கீழநாட்டார் கால்வாய் தொடங்குமிடம் |
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் என அழைக்கப்படும் இராஜசிங்கமங்கலத்தில்
உள்ள கண்மாய், நதிநீர் இணைப்பை 1100 ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியர்கள் செயல்படுத்திக்
காட்டியதற்கு ஆதாரமாக விளங்குகிறது. இக்கண்மாய், வைகை மற்றும் சருகணி ஆகிய ஆறுகளை
இணைத்து அந்த ஆறுகளில் இருந்து வரும் நீரைக் கொண்டு நிரம்பும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.
மங்கலம்
என்ற சொல் நற்பயன், அதிஷ்டம் எனும் பொருள்களில் வழங்கி மக்களின்
குடியிருப்புகளையும் குறிக்கத் தொடங்கியது. இடைக்காலத்தில் சிறப்பாக
பார்ப்பணர்களின் குடியிருப்புகள் மங்கலம் எனக் குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள்
பார்ப்பணர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்போது தம் பெயர் விளங்க தம் பெயருடன்
“சதுர்வேதிமங்கலம்” என இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்து தந்துள்ளனர். சதுர்வேதி
என்பது நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களைக் குறிக்கும் சொல். காலப்போக்கில்
சதுர்வேதி மறைய மங்கலம் மட்டும் நிலை கொண்டது.
அவ்வகையில் கி.பி.900 முதல் கி.பி.920 வரை
பாண்டிய நாட்டை ஆண்ட மூன்றாம் இராசசிம்ம பாண்டியன், இராசசிம்மமங்கலம் பேரேரியுடன்
தனது பெயரில் ஊரையும் அமைத்து பிரம்மதேயமாக பார்ப்பனர்களுக்கு வழங்கியதை சின்னமனூர்
செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இராசசிம்மமங்கலம்
கண்மாய்க்கு நீர் வரத்துக்காக வைகை, சருகணி ஆகிய
ஆறுகளில் இருந்து இரு கால்வாய்களை வெட்டி இணைத்துள்ளனர்.
இராமநாதபுரம்
நயினார்கோயில் சாலையில் பாண்டியூருக்கு அருகில் வைகை நதியிலிருந்து செல்லும் கீழநாட்டார்
கால்வாய் மூலம் தண்ணீர் இராஜசிங்கமங்கலம் கண்மாய்க்கு செல்கிறது. இக்கால்வாய்
பாண்டியூர், சித்தனேந்தல், பந்தப்பனேந்தல், தவளைக்குளம், நகரம், அரியாங்கோட்டை
ஆகிய ஊர்களின் வழியாகச் சென்று வாதவனேரி என்ற ஊரில் இராசசிம்மமங்கலம் கண்மாயை
அடைகிறது. இக்கால்வாய் 20 கி.மீ. தூரம் உள்ளது.
சருகணி ஆறு பிரியுமிடம் - கூகுள் மேப் |
அதேபோல்
சருகணி ஆற்றிலிருந்து வரும் ஒரு கால்வாய் கல்லடிதிடல் என்ற இடத்தில் இரண்டாகப்
பிரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி கண்மாய்க்குள் செல்லும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. அதன் மற்றொரு பகுதி கோட்டைக்கரை ஆறாக கடலுக்குச் செல்லுமாறு
அமைத்துள்ளனர். இக்கண்மாயின் நீர்பிடிப்பு
பரப்பு 147 சதுர மைல் ஆகும். இக்கண்மாய் நிரம்பும்போது அதிலிருந்து 72
கண்மாய்களுக்கு நீர் செல்லவும் உபரி நீர் கடலுக்கு செல்லவும் உரிய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இக்கண்மாய்
சேதுபதிகளின் ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக பேணப்பட்டு நீரை வெளிவிட 48 மடை
வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. ”நாரை பறக்காத நாற்பத்தெட்டு பெருமடைக் கண்மாய்”
என்ற வழக்கு இப்பகுதியில் உள்ளது.
No comments:
Post a Comment