Pages

Thursday 14 May 2015

இராஜசிங்கமங்கலம் (R.S.மங்கலம்) – தொன்மைச் சிறப்புகள் (வே.இராஜகுரு)

இராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது R.S.மங்கலம் என அழைக்கப்படும் இராஜசிங்கமங்கலம். இவ்வூரில் கைலாசநாதர் கோவில், கலியபெருமாள் கோவில், இராஜசிங்கப் பெருங்குளம் எனும் R.S.மங்கலம் பெரிய கண்மாய் ஆகியவை புகழ் பெற்றவை. நீர் மேலாண்மையில் புகழ் பெற்ற பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் முதன்முதலில் நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது இங்குள்ள பெரிய கண்மாயில் தான்.
கைலாசநாதர் கோவில் விமானம்
  
தூண்களில் பாண்டியர் கால போதிகை அமைப்பு

 மங்கலம் என்ற சொல் நற்பயன், அதிஷ்டம் எனும் பொருள்களில் வழங்கி மக்களின் குடியிருப்புகளையும் குறிக்கத்தொடங்கியது. மங்கலம் என்பது சிலர் வடமொழிச் சொல் எனக்கூறுவர். ‘உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்’ என்ற நூலில் மா.சோ.விக்டர் மங்கலம் என்ற சொல் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“தமிழர் தம் விழாக்களிலும் திருமண நிகழ்வுகளின் போதும் மண்கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளிக் காலம் முதல் தொடரும் மரபு. எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்தத் தொடங்கியுள்ளனர். அதுவே மண்+கலம் மங்கலம் – மங்களம் என ஆனது.”
படைக்கலம் என்பது படைக்கருவிகளைக் குறிப்பது போலவே மங்கலம் என்பதும் மண்ணால் செய்யப்பட்ட அனைத்தையும் குறிப்பதாக பொருள் கொள்ளலாம்.
இடைக்காலத்தில் சிறப்பாக பார்ப்பணர்களின் குடியிருப்புகள் மங்கலம் எனக் குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பார்ப்பணர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்போது தம் பெயர் விளங்க தம் பெயருடன் “சதுர்வேதிமங்கலம்” என இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்து தந்துள்ளனர். சதுர்வேதி என்பது இருக்கு முதலான நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களைக் குறிக்கும் சொல். காலப்போக்கில் சதுர்வேதி மறைய மங்கலம் மட்டும் நிலை கொண்டது.
      அவ்வகையில் மூன்றாம் இராசசிம்மன் என்ற பாண்டிய மன்னன், இராசசிம்மமங்கலம் பேரேரியுடன் தனது பெயரில் ஊரையும் அமைத்து பிரம்மதேயமாக பார்ப்பனர்களுக்கு வழங்கி உள்ளான். பிரம்மதேயம் என்பது  பார்ப்பணர்களுக்கு வழங்கப்படும் நிலக்கொடை ஆகும்.
    மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி.900 முதல் கி.பி.920 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன். இவன் காலத்தில் தான் பாண்டியர் வரலாறு கூறும் சின்னமனூர் செப்பேடுகள் உருவாக்கப்பட்டன.
     இச்செப்பேடுகளில் இராஜசிம்ம மங்கலம் பேரேரியுடன் நகரையும் இராசசிம்ம பாண்டியன் உருவாக்கியதை அவன் மெய்க்கீர்த்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறது
“உலப்பிலோத வொலி கடல் போல்
ஒருங்கு முன்னந் தான மைத்த
இராஜசிங்கப் பெருங்குளக்கீழ்ச் சூழு நகரிருந்தருளி”
இம்மன்னன் இராஜசிங்கமங்கலத்து கண்மாய்க்கு நீர்வரத்துக்காக வைகை, மணிமுத்தாறு நதிகளை இணைத்துள்ளான். இராமநாதபுரம் நயினார்கோயில் சாலையில் பாண்டியூருக்கு அருகில் வைகை நதியிலிருந்து செல்லும் நாட்டார் கால்வாய் மூலம் தண்ணீர் இராஜசிங்கமங்கலம் கண்மாய்க்கு செல்கிறது. இக்கால்வாய் 14 மைல் தூரம் உள்ளது. அதேபோல் மணிமுத்தாறு நதியின் நீரும் கண்மாய்க்கு வருவதுபோல் இக்கண்மாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்மாய் நீர்பிடிப்பு பரப்பு 147 சதுர மைல் ஆகும்.
கி.பி.1162 இல் திருநெல்வேலியில் இருந்து பாண்டிய நாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை ஆண்டுவந்த பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரையைக் கைப்பற்றியபோது பராக்கிரம பாண்டியனுக்கு உதவியாக வந்த இலங்கை பராக்கிரம பாகு என்ற மன்னனின் தளபதி இலங்காபுரித் தண்டநாயகன் மதுரை போவதற்குள் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டதால் அச்சிங்களப்படை குலசேகர பாண்டியன் படையுடன் நடத்திய போரினால் இக்கண்மாய் பாதிக்கப்பட்டதெனவும் அதை தண்ட நாயகன் சரி செய்ததாகவும் இலங்கையின் மகாவம்சம் கூறுகிறது.
இக்கண்மாய் சேதுபதிகளின் ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக பேணப்பட்டு நீரை வெளிவிட 48 மடை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. ”நாரை பறக்காத நாற்பத்தெட்டு பெருமடைக் கண்மாய்” என்ற வழக்கு இப்பகுதியில் கூறப்படுகிறது.
இக்கண்மாய் நிரம்பும்போது அதிலிருந்து 72 கண்மாய்களுக்கு நீர் செல்லவும் உபரி நீர் கடலுக்கு செல்லவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கண்மாய் மடைகள் பெயரில் ஊர்கள் அமைக்கப்பட்டுள்ளன. செட்டியமடை, பெருமாள் மடை, புல்லமடை, செங்கமடை என பல ஊர்கள் உள்ளன.
இவ்வூரிலுள்ள  கைலாசநாதர் கோவிலும் மூன்றாம் இராசசிம்மன் காலத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இவ்வூர் பிரம்மதேயமாக வழங்கப்பட்டிருப்பதால் இது உறுதியாகிறது. இக்கோவிலில் காணப்படும் கி.பி.1142 ஐச் சேர்ந்த சடையவர்மன் சீவல்லபன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டு இவ்வூர் வரகுண வளநாட்டில் உள்ளதாக தெரிவிக்கிறது. அதில் பிரமதேயமாகவும் தேவமானியமாகவும் நம்பிள்ளை மானாபரணன் என்பவர் வழங்கிய செய்தி உள்ளது. இவர் மன்னனின் பிரதிநிதியாக இருக்கலாம். இக்கல்வெட்டில் மன்னன் பெயர் முதலிய செய்திகள் அழிந்த நிலையில் உள்ளன. “திருமடந்தையும் சயமடந்தையும்” என்ற மெய்கீர்த்தியைக் கொண்டு இக்கல்வெட்டு கி.பி. 1132 முதல் கி.பி.1162 வரையிலான ஆண்டுகளில் ஆட்சி செய்த சடையவர்மன் சீவல்லபன் காலத்தைச் சேர்ந்தது என அறிய முடிகிறது. இது இம்மன்னனின் 10 ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டுள்ளது. 
கலியபெருமாள் கோவில்

ஒரு காலத்தில் இங்கு அதிக அளவில் பிராமணர்கள் செல்வமும் செல்வாக்குடனும் வாழ்ந்து வந்துள்ளனர். ‘பாண்டியர்களில் மிகச்சிறந்த மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் பரம வைஷ்ணவனாக வாழ்ந்தான்’ என சேதுபதிகள் செப்பேடுகள் என்ற நூலில் எஸ்.எம்.கமால் தெரிவிப்பதன் (பக்கம் 319) மூலம்  இவ்வூரில் உள்ள கலியபெருமாள் கோவிலும் இராசசிம்ம பாண்டியன் காலத்திலேயே கட்டப்பட்டிருக்கவேண்டும். 
செங்கமடை கோட்டை

கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட விஜய ரெகுநாத சேதுபதி தன ஆட்சிக்காலத்தில் மூன்று கோட்டைகள் கட்டி உள்ளார். கமுதி, பாம்பன் ஆகிய ஊர்களைப் போன்று இராசசிங்கமங்கலம் அருகில் செங்கமடையில் கோட்டைக்கரை எனும் ஆற்றின் கரையில் அறுங்கோண வடிவில் ஆறுமுகங்களுடன் கட்டப்பட்ட இந்தக்கோட்டை ஆறுமுகம் கோட்டை எனப்படுகிறது. இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
 
முனீஸ்வரர், கருப்பசாமி கோவில்
 இக்கோட்டையைச் சுற்றி அகழி அமைக்கப்பட்டு தற்போது அது தூர்ந்த நிலையில் உள்ளது. பிரஞ்சுக் கட்டடக்கலையில் அமைக்கப்பட்ட இக்கோட்டையில் வீரர்கள் தங்குவதற்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் நடுவில் முனீஸ்வரர், கருப்பசாமி கோவிலும் அதன் அருகில் குளமும் உள்ளது. இக்குளம் கோவில் ஆகியவை கோட்டை கட்டிய காலத்திலேயே அமைக்கப்பட்டவை. குளத்தின் உள்பகுதியில் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய செங்கல் கொண்டு கட்டப்பட்ட அமைப்பு உள்ளது. 

குளக்கரையில் புதைந்துள்ள தாழிகள்

   சமீபத்தில் நானும் இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர் திரு சக்திவேலும் அந்த கோட்டையை ஆய்வு செய்தபோது அங்குள்ள குளத்தைச் சுற்றிலும் பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. பெருங்கற்காலம் (Megalithic Period or Iron Age) என்பது கி.மு.1,000 முதல் கி.மு.300 வரை உள்ள காலத்தைச் சேர்ந்தது. பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் கண்டெடுக்கப்படுவது இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுதான் முதல்முறை ஆகும். இங்கு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு செய்யப்படும் போது மேலும் பல புதிய  செய்திகள் நமக்குக் கிடைக்கும். இக்கோட்டை கி.பி.1801 க்குப் பிறகு ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டதாக இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment