மிக
நீண்ட கடற்பரப்பைக் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம், இங்குள்ள பல துறைமுகப் பட்டினங்கள் மூலம் ரோமானியர்,
சீனர், அரேபியர், போர்ச்சுகீசியர்கள் போன்ற வெளிநாட்டவருடன் வணிகம் புரிந்த
வரலாறுகளைக் கொண்டு விளங்குகிறது. இதன்மூலம் பண்பாடு மொழி முதலியவற்றில்
பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்பகுதியில் இஸ்லாம், கிறித்துவ மதங்கள் பரவின.
நரிப்பையூர் மொட்டைப் பள்ளிவாசல் |
திருப்புல்லாணி
அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல்
ஆர்வலருமான வே.இராஜகுரு, இராமநாதபுரம்
மாவட்டம் சாயல்குடி அருகிலுள்ள நரிப்பையூரில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது,
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட வளாகம் அருகில் முஸ்லிம் கபர்ஸ்தான் உள்ளே சுமார்
500 ஆண்டுகால பழமையான முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதைக்
கண்டறிந்தார். மேலும் அவர் கூறியதாவது,
“இப்பள்ளிவாசல்
மேற்குச் சுவரின் உள்பகுதியில் தொழுகும் திசை மாடம் உள்ளது. இது ஒலி பெருக்கி
இல்லாத அக்காலத்தில் இமாம் அமர்ந்து
தொழும் இடம் ஆகும். வில் போன்று வளைந்த அமைப்பில் இம்மாடம் உள்ளது.
தொழும் மாடம் |
ஒரு
மண்டபம் போன்ற அமைப்பில் காணப்படும் இப்பள்ளிவாசலில் தொழும் மாடம், அர்த்தமண்டபம்,
முன்மண்டபம் ஆகியவை உள்ளன. இதன்மேல் மினார் எதுவும் கட்டப்படவில்லை. எனவே இதை
மொட்டைப் பள்ளிவாசல் என உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள்.
மேற்கூரை பெரிய கற்களால் மூடப்பட்டு செங்கற்களால் வேயப்பட்டுள்ளது |
இதன்
சுவர் மணற்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டுள்ளது. மேற்கூரை பெரிய கற்களால்
மூடப்பட்டு செங்கற்களால் வேயப்பட்டுள்ளது. கீழிருந்து ஏறிச் செல்ல 18 படிகள்
இதில் இருந்ததாகவும் அவை தற்போது மணலில் புதைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்பள்ளிவாசல் தூண்கள் தாமரைப்பூ போதிகையோடு கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களிலும்
மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன.
இதில் மொத்தம் மூன்று வாயில்கள் உள்ளன. இரவு நேரத்தில் தொழுவதற்கு வசதியாக விளக்கு
வைக்கும் சாளரங்கள் உள்ளன.
தூண்களில் தாமரைப்பூ போதிகை |
இம்மாவட்டத்தின்
அநேக கடற்கரை கிராமங்களில் இஸ்லாமியர் பெருமளவில் வாழ்கிறார்கள். கி.பி. பத்தாம்
நூற்றாண்டுக்குப் பின் அரபு வணிகர்கள் மூலம் இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளில்
இஸ்லாம் பரவி உள்ளது. கி.பி.1224 ஆம்
ஆண்டிலேயே மாறவர்மன் சுந்தரபாண்டியன் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்ற பெரியபட்டினம்
பிலால் பள்ளிக்கு நிலக்கொடை வழங்கிய கல்வெட்டு திருப்புல்லாணி கோயிலில் உள்ளது.
தூத்துக்குடி
மாவட்டம் மேல்மாந்தையில் உள்ள கோயில் மண்டபம், வேம்பாரில் உள்ள சர்ப்பமடம்
போன்றவற்றில் உள்ள தூண்கள் இப்பள்ளிவாசல் தூண்கள்
போலவே தாமரைப்பூ போதிகை அமைப்புடன் உள்ளன. இவை கி.பி. 1550 களில்
கட்டப்பட்டவை.
வேம்பார் சர்ப்பமடம் |
கி.பி. 1510
க்குப்பின், வாணிகம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்கள் இராமேஸ்வரம் முதல்
தூத்துக்குடி வரை உள்ள கடற்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுக்கு
அரபு வணிகர்கள் பெரும் போட்டியாளர்களாக இருந்ததால் அவர்களை ஒடுக்கும்
முயற்சியிலும் போர்ச்சுகீசியர்கள் ஈடுபட்டுவந்தனர்.
மேல்மாந்தை கோயில் மண்டபம் |
மதுரையை
ஆண்டுவந்த விஜயநகர மன்னர்களிடமும் நாயக்க மன்னர்களிடமும் வலிமையான கடற்படை
இல்லாததால் அவர்களால் போர்ச்சுகீசியர்களை ஒடுக்க முடியவில்லை. எனவே அவர்களின்
ஆதிக்கம் கிழக்குக் கடற்கரையில் சுமார் 150
ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது.
போர்ச்சுகீசியர்கள் இப்பகுதியில் ஆதிக்கம்
செலுத்துவதற்கு முன் அதாவது கி.பி. 1500 க்கு
முன்பே இப்பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டிருக்கவேண்டும். இவ்வூரில் குடியிருந்த இஸ்லாமியர்கள் தொழுகை
நடத்துவதற்காக அரபு நாட்டு வணிகர்கள் இதை கட்டி
இருக்கலாம். இங்கு கல்வெட்டுக்கள் ஏதும் காணப்படவில்லை. மேலும் பெரியபட்டினம்
பிலால் பள்ளிக்கு அடுத்து மாவட்டத்திலுள்ள மிக பழமையான பள்ளிவாசலாக இதை கருதலாம்.
பள்ளிவாசலை
மூடியிருக்கும் மணலை அகற்றி சுத்தம் செய்து
தொன்மைச் சிறப்பு வாய்ந்த இதை பாதுகாத்து பராமரிக்க பொதுமக்களும் அரசும் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்”.