Pages

Thursday 31 August 2017

திருப்புல்லாணி கோயிலில் விஜயநகர மன்னர்கள் கால அரிய வகை தூண் சிற்பங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடிப்பு


இரண்டு தலை நான்கு உடல்கள் கொண்ட மான் சிற்பத்தைக் காட்டும் மாணவர்கள் அபர்ணா, விசாலி, இராஜபாண்டியன், இராஜ்கண்ணா

இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் மலைகளோ பாறைகளோ இல்லாத நிலையில் கடற்பாறைகளையே அதிக அளவில் கோயில் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். இராமேஸ்வரம் கோயில் கட்டுவதற்கு இலங்கையில் இருந்து கல் கொண்டுவந்ததாக வரலாறு உள்ளது. பாண்டியர், விஜயநகர, நாயக்கர், சேதுபதிகள் ஆகியோர் காலத்தில் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, மாரியூர், சாயல்குடி உள்ளிட்ட கோயில்கள் வாலிநோக்கம் கடற்கரையில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட கடற்பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை வாலிநோக்கம் கடற்கரையில் இப்போதும் காணலாம். 
குதிரைமேல் வாளுடன் ராணி

திருப்புல்லாணி கோயிலில் வரியோடிய உறுதியான கடற்பாறைகளைக் கொண்டு தூண்கள், சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. பட்டாபிஷேக ராமர் ஆலய நுழைவு வாயில் தூண்களில் உள்ள பெரிய அளவிலான அழகுமிகு யாளிகள், இராம, லட்சுமணர் சிற்பங்கள் கடற்பாறையில் செதுக்கப்பட்டவை தான். இவை மிக நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டவை. இத்தகைய கடற்பாறையிலும் சிற்பிகள் தங்கள் கலைவண்ணத்தைக் காட்டி இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய அளவிலான இத்தகைய சிற்பங்கள் அனைவரின் கவனத்தையும் கவருவதாக உள்ளது.
ஒரு தலை இரு உடல் கொண்ட நாய்

சிற்பங்கள் ஆய்வு
இந்நிலையில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றித் தெரிந்து கொள்ள அங்குள்ள தூண் சிற்பங்களை  திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அபர்ணா, விசாலி, ராஜபாண்டியன், ராஜ்கண்ணா ஆகியோர் இம்மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு உதவியுடன் ஆய்வு செய்தனர். அதில் விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த  அரியவகை சிற்பங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதுபற்றி வே.இராஜகுரு கூறியதாவது,
மன்னர் சிற்பங்கள்
பட்டாபிஷேக ராமர் சன்னதி கொடிமரம் அருகில் உள்ள தூணில், குதிரையில் வாளை ஏந்திய நிலையில் செல்லும் பெண், ஆதிஜெகனாதப் பெருமாள் சன்னதி கருவறையின் நுழைவு வாயிலில் உள்ள இருதூண்களில் ஒன்றில் யானைமேல் அமர்ந்த நிலையில் ஆணும், மற்றொன்றில் பெண்ணும் உள்ளனர். இவர்கள்  விஜயநகர, நாயக்க மன்னர் மற்றும் இராணிகளாக இருக்கலாம்.
அரியவகை சிற்பங்கள்
பட்டாபிஷேக ராமர் சன்னதி நுழைவுவாயில் தூணின் பின்புறம், வலதுகாலைத் தூக்கி தவம் செய்யும்  முனிவர் சிற்பம் உள்ளது. இது மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு காட்சி போல உள்ளது. அவர் காலின் கீழ் வராகம் (பன்றி) உள்ளது. வராகம் விஜயநகர மன்னர்களின் சின்னம் ஆகும். 
வலதுகாலைத் தூக்கி தவம் செய்யும்  முனிவர் சிற்பம் கீழே வராகம் உள்ளது
முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு தலை இரு உடல் கொண்ட நாய் சிற்பத்தில் கையை வைத்து மறைத்துக்கொள்வதன் மூலம் இருவகையான நாய் உருவங்களை உருவாக்கமுடியும். தாராசுரத்தில் உள்ள யானை, காளை இணைந்த சிற்பம் உலகப்புகழ் பெற்றது. அதேபோன்ற வகையில் இச்சிற்பம் உள்ளது.
இரண்டு தலை நான்கு உடல்கள் கொண்ட மான் சிற்பம்
சதுரவடிவான  இரண்டு தலை நான்கு உடல்கள் கொண்ட மான் சிற்பத்தில் இருந்து நான்கு மான்களை உருவாக்க முடியும். இதேபோன்று குரங்குகள் உள்ள சிற்பங்கள் பெருமுக்கல் ஏரியில் உள்ள தூணிலும், சேலம் சங்ககிரி கோட்டை சுவரிலும் உள்ளன. நான்கு நாய்கள் உள்ள சிற்பம் சத்தியமங்கலம் மாதவபெருமாள் கோயில் தூணில் உள்ளது. 
யானை மேல் ஆண்

யானை மேல் பெண்
 இதுதவிர தலைச்சுமையுடன் இருக்கும் குரங்கு, அன்னம், கருடன், யானைகள், மயில்,  ஆடல் மகளிர், காலிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன், மச்சவதாரம், கிருஷ்ண அவதாரத்தைச் சித்தரிக்கும் சிற்பங்கள் ஆகியவையும் உள்ளன. இங்குள்ள சில சிற்பங்கள் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ளதைப் போல காணப்படுகின்றன. 
குரங்கு

ஆடல் மகளிர்

மயில்
 
அன்னம்




நாளிதழ் செய்திகள்