Pages

Tuesday 4 June 2013

திருப்புல்லாணியின் வரலாற்றுச் சிறப்புகள் - வே.இராஜகுரு




அறிமுகம்
இராமாயணத் தொடர்புகளால் இந்தியா முழுதும் பலராலும் அறியப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், இயற்கை அமைப்பில் இம்மாநிலத்திலேயே மிகநீண்ட கடற்கரையைக் கொண்டது ஆகும். இயற்கையான பவளப்பாறை, அபூர்வமான கடற்பசு என்ற கடல் உயிரினம் போன்றவற்றால் மன்னார் வளைகுடாக் கடல் தேசிய உயிரினப் பூங்காவாக அரசால் அறிவித்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அழகன்குளம், தேரிருவேலி, பெரியபட்டினம், தொண்டி போன்ற இடங்களில் தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மூலம் பல நாடுகளுடனான வணிகத்தொடர்பு இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்து வந்ததை அறிய முடிகிறது. இம்மாவட்டத்தில் சைவமும் வைணவத்தையும் இணைக்கும் தலமாக இராமேஸ்வரம் இருந்து வருகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108  வைணவ திவ்விய தேசங்களில், திருப்புல்லாணி 44 வது தலமாகப் போற்றப்படுகிறது.
இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 9 கி.மீ தொலைவில் உள்ளது திருப்புல்லாணி. வடமொழியில் தர்ப்பசயனம் என அழைக்கப்படும் இவ்வூர் திருப்புல்லணை என அழைக்கப்பட்டு தற்போது திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் ஆதிஜெகநாதப் பெருமாளுக்குக் கோயில் உள்ளது. பாண்டி நாட்டில் உள்ள பதினெட்டு திவ்ய தேசங்களில் மிகவும் தொன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்தது இவ்வூர். இது திருமங்கையாழ்வாரால் 21 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் இலங்கைக்குச் செல்லும் வழியில், தென்கடற்கரை அடைந்து (சேதுக்கரை) கடலைக் கடக்க வழி சொல்லவேண்டும் என்று அக்கடலரசனான வருணணைப் வேண்டி, 7 நாட்கள் நாணல் புல்லைத் தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால் இது திருப்புல்லணை எனவும் தர்ப்பசயனம் எனவும் அழைக்கப்பட்டது. வடமொழியில்  தர்ப்பை என்பது புல்லையும் சயனம் என்பது உறக்கத்தையும் குறிக்கிறது.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தனது பாசுரங்களில் புல்லாணி என்றே இவ்வூரைக் குறிப்பிடுகிறார். இதை புல் + ஆணி எனப்பிரித்து புல் நிறைந்த அழகிய ஊர் எனக் கொள்ளலாம். ஆணி என்பது மிகுதி காட்டும் விகுதி ஆகும். புல்லங்காடு, புல்லாரண்யம் ஆகியவை இவ்வூருக்கு வழங்கப்படும்  வேறு பெயர்கள்.
திருமால் இங்கு ஆதிஜெகந்நாதப் பெருமாளாக அமர்ந்த கோலத்திலும், பட்டாபிஷேகராமராக நின்ற கோலத்திலும், தர்ப்பசயன இராமராக கிடந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வூரில் இராமபிரான் புல்லைத் தலையணையாகக் கொண்டு உறங்கியதால் இக்கோயிலில் அது சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிஜெகந்நாத பெருமாள், தர்ப்பசயன இராமர்,  பட்டாபிஷேகராமர், பத்மாசனித் தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இக்கோயில் மூலவர் ஆதிஜெகந்நாதப் பெருமாள், ‘தெய்வச்சிலையார்’ என்றும், பத்மாசனித் தாயார், ‘பூமேலிருந்தார்’ என்றும் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார்கள்.










தலவரலாறு :
புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று மகரிஷிகளும்  இப்புண்ணிய பூமியில் தவமியற்ற அவர்களுக்காக பகவான் வைகுண்டத்திலிருந்து இத்தலத்திற்கு வந்து அஸ்வத்தமாக (அரசமரமாக) பொன் மயமாய் அவதரித்தார். இந்த அரச மரத்தையே பக்தர்கள் அஸ்வந்த நாராயணன் வடிவமாக தியானித்தனர்.
திரேதாயுகத்தின் விபவ அவதாரமான இராமாவதாரத்திற்கும் முற்பட்டது இத்தலம். இராமபிரானின் தந்தை தசரதர் குழந்தை வரம் வேண்டி இங்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இங்கு செய்த யாகத்தின் பயனாக நான்கு வேதங்களும் இராமன் முதலான நான்கு  புதல்வர்களாக அவதரித்தனர் என்பது வரலாறு. எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித தலமாகக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக அவதரித்துள்ளார்.
இங்கு அரசமரம் (அசுவத்தம்) தல விருட்சமாக அமைந்துள்ளது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும், மரங்களில் நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ விருட்சாணாம்) என்று  கீதையில் கண்ணனும் கூறியது இதன் சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு இல்லாதவர்கள் சேதுக்கரை கடலில் நீராடி இத்தலத்தில் உள்ள ஆதி ஜெகநாதரை வணங்கி இங்குள்ள தெய்வாம்சம் பொருந்திய அரச மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை, செய்து இக்கோயிலில் வழங்கப்படும் பால் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகுமென்பது  புராண வரலாறு.
இம்மரத்தை பக்திச் சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் விளக்குகிறது.
     பெருவயிறு கண்டமாலை, உதரவலி
          
அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
     
இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை
          
இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
     
ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி
          
யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
     
மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி
          
வளர் அரசு கண்ட பேரை அணுகாவே

திருவரங்கனைப் போன்று ஆதிஜெகந்நாத பெருமாளும் பெரிய பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள பெருமாளை இராமபிரான் வணங்கி அவரால் கொடுக்கப்பட்ட ‘கோதண்டம்’ வில்லைப் பெற்று இராவண வதஞ்செய்ததாகவும் கூறப்படுகிறது.  ஒடிஸா மாநிலம் பூரியில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்தில் அரூபியாக திகழும் இப்பெருமாள், இங்கு சங்கு சக்கரங்களை ஏந்தி  நான்கு கரங்களுடன் ஸ்வரூபராய்த் திகழ்கிறார்.  இராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பியபோது மீண்டும் இங்கு வந்து பக்தர்களின் வேண்டுதலின்படி பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிஷேகராமர் எனவும் அவர் அழைக்கப்படுகிறார்.
கடலரசனான வருணன், புல்லவர், கண்ணுவர், விபீடணன் ஆகியோர் இவ்வூர் பெருமாளைச் சரண் புகுந்து மோட்சம் பெற்றார்கள். எனவே இது ஒரு சரணாகதித் தலம் ஆகும். சரணாகதி தத்துவத்திற்கு 108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்தலவரலாறு வியாசபகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது. வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன் தொன்மைக்குச் சான்று. மேலும் புல்லை அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை, புல்லாணிப் பெருமாள் நலுங்கு போன்ற நூல்களும் இத்தலத்தைப் பற்றிக் கூறுகின்றன.

     
    இங்கு மொத்தம் 10 தீர்த்தங்கள் உள்ளன. சக்கர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், தரும தீர்த்தம், ஆதிஸேது (சேதுக்கரை) ராமதீர்த்தம் போன்றன முக்கியமானவை.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் - 12.30 மணி வரை,  மாலை 3.30 மணி முதல் -8 .30 மணி வரை.

முக்கிய திருவிழாக்கள்:
ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், ராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்சவத் திருவிழா நடக்கிறது. இவ்விழாக்களில் ஜெகந்நாதர், ராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், இராமபிரான் சித்ராபவுர்ணமி அன்றும் தேரில் எழுந்தருளுவர். மேலும், வைகுண்ட ஏகாதசி இங்கே மிகப் பிரபலம். கோயிலில் உள்ள ஸ்ரீசந்தான கிருஷ்ண ஸ்வாமிக்கு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் சிறப்பு.

திருமங்கையாழ்வார் புல்லாணிப் பாசுரங்கள் :
மது ஒழுகுகின்ற மலர்களையுடைய செங்கழுநீர்களும் (அல்லி மலர்கள்), வெளுத்த மடல்களையுடைய கைதையும் (தாழை போன்ற தாவரம்), பலவகையான பறவைகளும், சேறுமிக்க வயல்களும், முத்துப் போன்ற பூக்களை உடைய புன்னை மரச்சோலைகளும், பொன் போன்ற மலர்களை உதிர்க்கும் அழகிய சுரபுன்னை மரங்களும், புலால் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளும், அழகிய மணிமாடங்களும்   சூழ்ந்த புல்லாணியில், முத்துக்களுடன் கலந்து அதிகமான வெண்மணற்களை மேலே எறட்டிக் கொண்டு வரும் வெளுத்த கடல் அலைகள் குதிரை போல் தாவி வந்து சங்குகளையும் இரத்தினங்களையும் ஒதுக்கித்தள்ளும். இங்குள்ள பொன்னம் கழிகானலில் பலவிதமான பறவையினங்கள் தங்கி இருக்கும்” என திருப்புல்லாணியை பற்றிய நாலாயிரந்திவ்விய பிரபந்தம் பெரிய திருமொழியில் எட்டாம் நூற்றாண்டில் இருந்த இவ்வூர்ச் சூழலை வருணிக்கிறார் திருமங்கையாழ்வார்.
இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் உற்பத்தியாகும் பொன்னம் கழிகானல் என்ற ஓடை, தற்போது ஐந்திணைப் பூங்கா அமைந்துள்ள இராமானுஜப் பேரேரி வழியாக  திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதி வழியாக ஓடுகிறது. இவ்வோடை வலையனேந்தலைச் சுற்றி ஓடி கோரைக்குட்டம் என்ற இடத்தில் வைகையின் கிளை ஆறான கொட்டகுடி ஆற்றில் இணைந்து சேதுக்கரை கடலில் கலக்கிறது. அக்காலத்தில் கோயிலின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் மிகப் பெரியதாக இவ்வோடை ஓடியிருந்திருக்க வேண்டும். மேலும் கடல் நீர் நிறைந்த உப்பங்கழியாகவும் இது விளங்கி இருந்திருக்க வேண்டும்.   இவ்வோடையைப் பற்றி திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.
“அலமும் ஆழிப் படையும் உடையார்”, “முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த மன்னன்”, “பரிய இரணியன் தாகம் அணியுகிரால் அரியுருவாய்க் கீண்டான்”, “வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன்”, “வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும் ஆதியு மானான்” “தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த பாம்பின் அணையான்” என திருமாலின் அவதார நிகழ்வுகளை தனது பாசுரங்களில் சொல்லிச் செல்கிறார் திருமங்கையாழ்வார்.
கோயில் வரலாறு :
திருப்புல்லாணி, பாண்டிய நாட்டில் கீழ்ச்செம்பி நாடு என வழங்கப்படும் பகுதியைச் சேர்ந்ததாகக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது.
கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலமாக இது இருப்பதால், சமய மறுமலர்ச்சிக் காலத்திற்கு அதாவது  கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே இடைக்காலப் பாண்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோயில் கோபுரங்கள் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஆதி ஜெகநாதப் பெருமாள் கருவறைக்கு மேல் கட்டப்பட்ட விமானம் கல்யாண விமானம் எனப்படுகிறது. இக்கோயிலில் மொத்தம் 7 விமானங்கள் உள்ளன. இதன் மதில்கள் மிக உயரமானவை. கோயில் தெப்பக்குளம் மிகப்பெரியதாக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இது சக்கரத்தீர்த்தம் எனும் புஷ்கரணியாகப் போற்றப்படுகிறது. மழைக்காலத்தில் வழிந்தோடும் நீர் முழுவதும் இங்கு சேமிக்கப்படுவதால் ஆண்டு முழுவதும்  இக்குளம் நீர் நிறைந்தே இருக்கும். இக்கோயிலின் போதிகை அமைப்பும் சிற்பங்களும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலிலுள்ள பட்டாபிஷேக ராமர் ஆலயத்தின் முகப்பு மண்டபம், தூண்கள், போதிகை போன்றவை, குடுமியான்மலை குடைவரைக் கோயிலின் தெற்கு பக்கம் அமைந்துள்ள சௌந்திரநாயகி அம்மன் ஆலய முகப்பு மண்டபத்தை ஒத்துள்ளது. குடுமியான்மலையிலுள்ள அக்கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், திருப்புல்லாணியில் உள்ள பட்டாபிஷேக ராமர் ஆலயமும் அதே காலகட்டத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம்.
பட்டாபிஷேக ராமர் ஆலய கொடிமரத்தின் முன்பு உள்ள இராமர், இலக்குவனர், யாளி  சிற்பங்கள் மிக நேர்த்தியாக மணற்கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. இவை நாயக்கர் காலக் கலைப் பாணியில் அமைந்துள்ளன. இக்கோயிலில் உள்ள போதிகைகளில் பாண்டியர் கால வெட்டுப் போதிகையும், விஜயநகர மன்னர்கள் கால மொட்டுப்போதிகையும் காணப்படுகின்றன.
 இக்கோயிலில்  பிற்காலப் பாண்டிய மன்னர்களான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்களும், விஜயநகர மன்னர் வீர கம்பண உடையார்  காலக் கல்வெட்டுக்களும், ஆவலப்ப நாயக்கர் மற்றும்   சுந்தரத்தோளுடைய மகாவலி வாணாதிராயர்  காலக் கல்வெட்டுக்களும் உள்ளன. இது தவிர பட்டாபிஷேக இராமர் ஆலயம் உள்ள பகுதிகளில் உள்ள கல்வெட்டுக்கள் இன்னும் படி எடுக்கப்படவில்லை. எனவே அவற்றின் செய்திகளை அறிய முடியவில்லை.
பவித்திரமாணிக்கப்பட்டினம் எனும் பெரியபட்டினத்தில் உள்ள பிலால் பள்ளி என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கொடை அளித்த செய்தி சொல்லும் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. ஒரு வைணவக் கோயிலில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடை வழங்கிய கல்வெட்டு இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இராமநாதபுரம் அருகே உள்ள களத்தாவூரில் மயிலேறும் பெருமாள் என்ற உடையார் தொண்டைமானார் என்பவர் பாண்டியர்களின் அரசப்பிரதிநிதியாக இருந்திருப்பதை இக்கோயில் கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. பெரும்பாலும் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுபவர்கள் பாண்டியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளார்கள்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கைந்நிலையை இயற்றியவர் புல்லங்காடனார் எனும் புலவர். இவர் திருப்புல்லாணியைச் சேர்ந்தவர் என தஞ்சை சரஸ்வதி நூல் நிலையத்தில் திருப்புல்லாணி பற்றிக் காணப்பட்ட பலவற்றைக் கொண்டு மகாவித்வான் இரா.இராகவையங்கார் கூறுகிறார். இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின் பழமைக்குச் சான்றாக உள்ளது.

கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி, திருப்புல்லாணி கோயில் காங்கேயம் மண்டபம், நுழைவுவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, திருச்சுற்று மதில்கள், இராஜகோபுரம், சக்கரத்தீர்த்தம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களைச் செய்தார் என தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது. அதாவது பட்டாபிஷேக ராமர் ஆலயம் தவிர்த்து பிறபகுதிகள் திருமலை ரெகுநாத சேதுபதியால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இம்மன்னர் இக்கோயில் திருத்தேர் விழாவில் வடம்பிடித்துப் பெருமாளையும் தாயாரையும் வணங்கிய நிலையில் கி.பி.1676 இல் மரணமடைந்துள்ளார்.
கி.பி.1678 முதல் கி.பி.1710 வரை இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இரகுநாத கிழவன் சேதுபதி, கி.பி.1688 இல் வெளியிட்ட செப்பேட்டின் படி, திருப்புல்லாணி கோயிலின் ஆடித்திருநாள் கட்டளைக்கும், நித்தியபூஜைக்கும், திருநந்தா விளக்கு, திருநந்தவனம், திருத்தோப்பு, திருப்பணி முதலாகிய தனங்களுக்காகவும்,  இராமானுஜப்பேரேரி, காவல்பற்று, முப்பனை, முருக்கடிப்பற்று, மனையனேந்தல், கோரைக்குளம், காவேரியேந்தல், கோவிந்தனேந்தல், காரையடிமுறிவு, குத்தக்கோட்டை, உத்தரவை, மேதலை ஓடை, சாமநத்தம், தினைக்குளம், தம்பிராட்டி தரவை, இருவரைவென்றான் பட்டணம், நல்லாங்குடி, கடம்பங்குடி, இலங்கைவழிவந்தயேந்தல், ஆதங்கொற்றங்குடி, மாறந்தை, திட்டக்குளம், கொள்ளையனேந்தல், ஆமணக்குளம், பளவலசயேந்தல், விளாப்பத்தியேந்தல், பாறனூர், மறிச்சுக்கட்டி, பணிக்கனேந்தல், பண்ணிக்குத்தி ஏந்தல் என முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 ஊர்களைத் தானமாக இக்கோயிலுக்கு வழங்கியுள்ளார். சேதுபதி மன்னர்களிலேயே ஒரு கோயிலுக்காக ஒரே நேரத்தில் 30 ஊர்களைத் தானமாக வழங்கியுள்ளதன் மூலம் கிழவன் சேதுபதி திருப்புல்லாணிப் பெருமாள் மீது கொண்ட அளவிலா பக்தியை அறிந்து கொள்ள முடிகிறது.  மேலும் இம்மன்னர் 20.03.1699 இல் வெளியிட்ட செப்பேட்டின் படி, மன்னார் முத்துச் சலாபத்தில் ஐந்து கல் வைத்து முத்துக்குளிக்கும் மன்னர்களுக்கு மட்டுமே உரிய பாரம்பரிய உரிமையை திருப்புல்லாணி கோயிலுக்கு வழங்கியுள்ளார். இச்செப்பேட்டின் மூலம் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெற்று வந்ததை அறிய முடிகிறது.

கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட முத்து விஜய ரகுநாத சேதுபதி, கி.பி.1713 இல் வெளியிட்ட செப்பேட்டின் படி, குத்தக்கோட்டை, வண்ணாங்குண்டு, பத்திராதரவை, மேதலை ஓடை, தினைக்குளம், உத்தரவை, களிமன்குண்டு, பள்ளமோர்க்குளம், இலந்தைக்குளம் ஆகிய ஊர்களை திருப்புல்லாணி கோயிலுக்கு தானமாக வழங்கி உள்ளார்.
இதுதவிர முத்து விஜய ரகுநாத சேதுபதியின் தம்பி கி.பி.1729 இல் வெளியிட்ட செப்பேட்டின் படி, ஆதங்கொற்றங்குடி என்ற ஊரை இக்கோயிலுக்கு சர்வமான்யமாக வழங்கியுள்ளார். இவர் கி.பி.1730 இல் வெளியிட்ட செப்பேட்டின் படி, திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாளுக்கு பூர்வீகச் சொத்து எனக் குறிக்கப்படும் கீழைக் காட்டுப் பகுதிகளான ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, தென்னம்பிள்ளை வலசை, கீரிவசை, குத்துக்கல் வலசை ஆகிய ஊர்களைத் தானமாக வழங்கியுள்ளார்.
கி.பி.1762 முதல் கி.பி.1772 வரையிலும் மற்றும் கி.பி.1781 முதல் கி.பி.1795 வரையிலும் இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, கி.பி.1768 இல் உப்பானைக்குடி, நெல்லிபத்தி ஆகிய ஊர்களையும், கி.பி.1784 இல் பரந்தான் என்ற ஊரையும், கி.பி.1785 இல் வித்தானூர், காரம்பல் ஆகிய ஊர்களையும் இக்கோயிலுக்கு தானமாக வழங்கி உள்ளார்.
இக்கோயில் இராஜகோபுரம் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின்  முதல்தளத்தில் சேதுபதி மன்னர்கள் காலத்திய மரச் சிற்பங்கள் உள்ளன.  தேக்குமரங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக இவை செதுக்கப்பட்டுள்ளன. இதில் திருமாலின் அவதாரத்தை விளக்கும் சிற்பங்கள், வணங்கிய நிலையில் உள்ள சேதுபதி மன்னர்களின் சிற்பங்கள்,  யாளி, வாழைப்பூ போதிகை  சிற்பங்கள்,  கிளி வாகனத்தில் இரதியும் அன்ன வாகனத்தில்  மன்மதனும் வில் எய்யும் சிற்பம் ஆகியவை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
 

கோயில் கல்வெட்டுக்கள் கூறும் செய்திகள்:
1.      திருப்புல்லாணி கோயிலின் இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் வலது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1221 ஆம் ஆண்டைச் சேர்ந்த, ‘பூமருவிய திருமடந்தையும்’ எனத் தொடங்கும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில், ஒரு குடை , இருகடல், மூவகைத்தமிழ், நால்வகை வேதம், ஐவகை வேழ்வி, அறுவகைச் சமயம் என வரிசையிட்டுக் குறிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சி அழிந்துள்ளது. மேலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சையை தீக்கிரையாக்கிய வரலாறும் இதில் குறிக்கப்படுகிறது. (A.R.No.108/1903)
2.      முதல் கோபுர நுழைவு வாயிலின் அருகில் உள்ள சுவரில் காணப்படும் கி.பி.1224 ஆம் ஆண்டைச் சேர்ந்த, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்திலுள்ள பிழார் பள்ளி என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. (A.R.No.116/1903)
3.      முதல் கோபுர நுழைவு வாயிலின் வலது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1262 ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு,  செவ்விருக்கை நாட்டு களத்தாவூர் என்ற நல்கீர்த்தி நல்லூரைச் சேர்ந்த மயிலேறும் பெருமாள் என்ற உடையார் தொண்டைமானார் என்பவர் திருப்புல்லாணி கோயிலுக்கு திருவிடையாட்டமாக வெளுதியூர் என்ற ஊரை வழங்கியுள்ளதையும், தெய்வச்சிலையார் மற்றும் பூமேலிருந்தார் ஆகியோருக்கு தினமும் அமுது படைக்கவும், மாலைநேர பூஜைக்காகவும், தான் பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி அன்று நீராட்டலுக்காகவும், தான் பிறந்த மாதமான ஐப்பசி மாத திருவிழாவுக்காகவும் ‘முதலில் வென்றான்’ என்ற சந்தி உருவாக்கப்பட்டதையும் சொல்கிறது.  (A.R.No.97/1974-75)
4.      இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் இடது பக்கச் சுவரில்  காணப்படும் இக்கல்வெட்டு ‘கோனேரின்மை கொண்டான்’ எனும் அரசாணை ஆகும். இதில் ஆரியச்சக்கரவர்த்தி என்ற முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தளபதி பெயர் குறிக்கப்படுவதால், இது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கி.பி.1273 ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனலாம். இக்கல்வெட்டில், களாத்திருக்கை நாட்டு செல்லூரான ஸ்ரீவல்லவநல்லூர், அதன் எதிர்புறம் உள்ள செம்பியன் பெராம்பூர், இடைக்குள நாட்டு ஆதன் கொற்றன்குடி, ஆயக்குடியான காராள கற்பகநல்லூர், வரகுண வளநாட்டு  இராஜசிங்கமங்கலம், கீழ்ச்செம்பி நாட்டு ஆனைகுடி, கடம்பங்குடி, மதுரைக்குளம், கொம்பூதி, செவ்விருக்கை நாட்டு புத்தேம்பல், மதிரப்புளி, தேற்றங்கால், வடதலைச் செம்பிநாட்டு கொடுமலூரான உத்தமபாண்டிய நல்லூர் ஆகிய ஊர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் உத்தரகோசமங்கை அருகில் உள்ள களரியான கைய்தவநல்லூர், நல்லான்குடி, நல்லிருக்கையான வீரபாண்டிய நல்லூர் ஆகிய ஊர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள பல ஊர்கள் இப்போதும் அதே பெயரில் வழங்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. (A.R.No.112/1903)
5.      இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் வலது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1280 ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு, மிழலைக் கூற்றத்து வெள்ளூருடையான் கூத்தன் திருமங்கை ஆழ்வார் என்பவர், திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாள் கோவிலில் திருநந்தா விளக்கு ஒன்றுக்கு நாளொன்றுக்கு உழக்கு நெய் வழங்குவதற்காக திருப்புல்லாணிகோன் மற்றும் செயத்துவாச்சக்கோன் ஆகியோருக்கு சாவாமூவாப் பேராடாக  கொண்டுவிட்டது எழுபது ஆடுகள் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. (A.R.No.107/1903)
6.      இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் இடது பக்கச் சுவரில்  காணப்படும், கி.பி.1262 ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டில், ஆரியச்சக்கரவர்த்தி என்ற தளபதி மற்றும் இடைக்குடி மக்கள் கொற்றன் சூரியன், சுந்தன் ஆகியோர் பெயர்கள் காணப்படுகின்றன. (A.R.No.110/1903)
7.      இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் வலது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1371 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர் வீர கம்பண உடையார்  கல்வெட்டு, மிழலைக் கூற்றத்தைச் சேர்ந்த திருமிழலை நாடன் அமுது செய்ய கொடை வழங்கியதைத் தெரிவிக்கிறது. (A.R.No.106/1903)
8.      இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் இடது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1371 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர் வீர கம்பண உடையார்  கல்வெட்டு, கடாக்கையிருக்கை நாட்டு எருமைப்பட்டி என்ற ஊர் திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாளுக்குத் தானமாக வழங்கப்பட்ட தகவலைச் சொல்கிறது. (A.R.No.111/1903)
9.      இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் இடது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1374 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர் வீர கம்பண உடையார்  கல்வெட்டில், திருப்புல்லாணி தெய்வச்சிலைப் பெருமாளுக்கு திருப்பணிக்கும் உச்சிச்சந்திக்கும் அமுதுபடிக்கும் படிவெஞ்சனத்துக்கும் சாத்துப்படிக்கும் பிராமணர், வெள்ளாளர், செட்டியன், தவசிகள் கைக்கோளர் உள்ளிட்ட சாதிக்கு பணம் ஒன்றும், வெள்ளான் பிள்ளை, இடையர், கண்ணாளர், சான்றார் உள்ளிட்ட சாதிக்கு பணம் அரையும் பன்னிரண்டு வயசுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் இராசகரத்துக்கு வழங்கவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. (A.R.No.114/1903)
10.   இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் இடது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1518 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு மண்ணையர்கோட்டை ஆவலப்ப நாயக்கர் என்பவர் வடதலைச் செம்பிநாட்டு பெருங்கிரிநல்லூர் தென்பால் மடைக்கழியேந்தல், பன்னன்குளமான தெய்வச்சிலைநல்லூரை திருவிடையாட்டமாக திருப்புல்லாணி கோயிலுக்கு வழங்கியதைத் தெரிவிக்கிறது. (A.R.No.113/1903)
11.   இரண்டாவது கோபுர நுழைவு வாயிலின் வலது பக்கச் சுவரில் காணப்படும் கி.பி.1534 ஆம் ஆண்டைச் சேர்ந்த சுந்தரத்தோளுடைய மகாவலி வாணாதிராயர் கல்வெட்டு, நயினார் தெய்வச்சிலைப் பெருமாளுக்கு இறந்தகாலமெடுத்தான் சந்தி அமுது செய்தருள திருவிடையாட்டமாக பரமக்குடியிலிருந்து 3கி.மீ. தொலைவில் உள்ள வடதலைச் செம்பி நாட்டு இயணிசுரத்து குணப்பனேந்தல் என்ற ஊர் வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. (A.R.No.109/1903)



 


திருப்புல்லாணிக்கோட்டை
செல்லத்தேவர் என்ற விஜய ரகுநாத சேதுபதி இறந்தபின், அவர் தங்கை மகன் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி இரண்டு வயதில் மன்னரானார். அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இங்கு கி.பி.1762 இல் ஒரு கோட்டை கட்டினார்.
      கி.பி.1772 இல் தஞ்சை மராட்டிய மன்னர் துல்ஜாஜியின் தலைமையிலான படை இராமநாதபுரத்தை முற்றுகையிட்ட போது, மராட்டிய மன்னர் திருப்புல்லாணி கோட்டையில் தங்கி இருந்து கொண்டு முற்றுகைப் போரைக் கவனித்து வந்துள்ளார்.
      இதன் உள்ளே சதுர வடிவ கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் நீச்சல் குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இதன் மேல்பகுதிக்கு செல்ல படிக்கட்டுகள் உள்ளன.
21 மனைவிகளின் அரண்மனை என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த கோட்டை தற்போது அழிந்த நிலையில் உள்ளது. இது திருப்புல்லாணியிலிருந்து  பள்ளபச்சேரி  செல்லும் சாலையில் தென்னந்தோப்புக்குள் உள்ளது.
சத்திரங்கள்
இவ்வூரில் வெள்ளையன் சேர்வை சத்திரம், புருஷோத்தம பண்டித சத்திரம், மலையாளச் சத்திரம் என மூன்று சத்திரங்கள் இருந்துள்ளன.
      இவ்வூர் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள வெள்ளையன் சேர்வை சத்திரம் கி.பி.1755 இல் சேதுபதி மன்னர்களின் தளபதி  வெள்ளையன் சேர்வையால் நிறுவப்பட்டது. இந்த சத்திரத்துக்கு  செல்லத்தேவர் என்ற விஜய ரகுநாத சேதுபதி கி.பி.1756 இல் காஞ்சிரங்குடி என்ற ஊரை கொடையாக அளித்துள்ளார். இச்சத்திரம் தற்போது அரசால் திருமண மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
      புருஷோத்தம பண்டித சத்திரம் பண்டித புருஷோத்தமதாஸ் என்பவரால் கி.பி.1782 இல் நிறுவப்பட்டது. இச்சத்திரத்துக்கு கழுநீர் மங்கலம் என்ற கிராமத்தை ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி கி.பி.1782 இல் மான்யமாக வழங்கி உள்ளார்.
      மலையாளச் சத்திரம் கி.பி.1768 இல் திருவிதாங்கூர் மன்னர் குலசேகரப்பெருமாள் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. இச்சத்திரம்  கோயிலின் தெற்கே உள்ளது. தற்போது அது பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
      புருஷோத்தம பண்டித சத்திரம் என்ற ராயர் சத்திரம் தற்போது இல்லை. அந்த இடத்தில் தற்போது பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.


திருப்புல்லாணிக்கோட்டை




   





யாளியின் சிற்பம்
 சேதுக்கரை :

திருப்புல்லாணியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஆதிசேது என்று அழைக்கப்படும் சேதுக்கரை உள்ளது. இக்கடலில் நீராடுவது தனுஷ்கோடியில் தீர்த்தமாடுவது போன்று புண்ணியமாகக் கருதப்படுகிறது. இரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர். சேது என்ற வட சொல்லுக்கு அணைஎன்று பொருள். வைணவர்கள் இந்த சேதுவை திருஅணைஎன்பர். ஒரு காலத்தில் இந்த சேதுவே இந்தியாவின் தெற்கு எல்லையாகத் திகழ்ந்தது என ஆதிஸேது
ஹைமாசலம்என்ற நூல் கூறுகிறது.
சேதுக்கரை கடற்கரையில் இராம தூதனான அநுமானுக்கு கோயில் உள்ளது. இக்கோயிலில் அநுமான் தென் திசை நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள காட்சி மிகவும் எழில் வாய்ந்ததாகும். இங்கு ஆஞ்சநேயர் மக்களின் துன்பங்களைப் போக்கி அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்.  இங்கு முன்னோர் நினைவு நாளில் நீராடுவதும் அவர்களுக்கான காரியங்கள் செய்வதும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாள்களில் இங்கு அதிக அளவிலான மக்கள் புனித நீராட வருவது வழக்கம்.
சேதுக்கரை பற்றி திருஞான சம்பந்தர், அணையில் சூழ்கடல் அன்றடைத்து வழி செய்வதவன்என்றும், திருநாவுக்கரசர், கடலிடை மலைகள் தம்மால் அடைந்த மால்களும் முற்றி என்றும் தம் தேவாரப்பாடல்களில் புகழ்ந்து கூறியுள்ளனர்.
நெருஞ்சிக்காடு,  கண்ணன் திருமேனிபட்ட பின் பிருந்தாவனம் என புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த சேதுவும் மேன்மை  பெற்றது. இந்த சேதுக்கரையின் கிழக்கே கடலுக்குள் சற்று தள்ளி ராமன் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்டதொரு கல் அரண் தென்படும். இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும் போக்கும் என்று சொல்லப்படுகிறது.
சேதுக்கரையில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருமலை ரெகுநாத சேதுபதி மன்னரால்  கட்டப்பட்ட சீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளது. இதை சின்னக்கோயில் என்கிறார்கள். அது தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் வெள்ளைப்பிள்ளையார் கோயில் உள்ளது.
சேதுக்கரையின் சிறப்பைப் பற்றி சங்க நூலான அகநானூறின் 70வது பாடல் பின்வருமாறு கூறுகிறது.
 
வென்வேர் கவுரியர் தொல் முதுகோடி          
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே
வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக் கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த பல விழுதுகளை உடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.
இரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப் பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். திரு அணை காண அருவினை இல்லைஎன்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக் கம்பர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

     “மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
          
மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
     
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
          
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்
“ஐயனே! குபேரனது புண்ணியத்தால் முதலில் நான் அழகாகப் படைக்கப்பட்டேன். பின்பு தவமகிமையால் இராவணன் வந்து குடியேறினான். நெடிது வாழ்ந்தான். நாளடைவில் அரக்கர்கள் பல கொடுஞ்செயல்கள் செய்து இங்கு பாபச் சுமை பெருகிவிட்டது. இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. நீ விரைவில் வந்து தீமை போக்கி என்னைப் புனிதமாக்கி அருள்” என்று இராமனை நோக்கி இலங்கா தேவி கையை நீட்டி நின்றது போல் (சேது) இவ்வணை காட்சியளிக்கின்றது என்பதைக் கம்பன் தன் இராமாயணத்தே காட்டுகிறான்.

நாங்கள் மணலில் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறோம். எம்பெருமானே நீயோ அன்று  கடலைத் திருத்தி அணைகட்டி விளையாடினாய். உன் பொற்பாதங்களின் மேன்மையை உலகோர் உணர முடியாது. ஓ, மாகடல் வண்ணனே நீ உன் தேவிமார்களுடன் வந்து நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் இந்த மணல் வீடுகளை மிதித்து ஆடி சிதைக்கமாட்டாயா” என்று கேட்கிறார் ஆண்டாள். இதோ அப்பாடல்.
     “ஓத மாகடல் வண்ணா உன் மண
          
வாட்டி மாரோடு சூழறும்
     
சேதுபந்தம் திருத்தினா யெங்கள்
          
சிற்றில் வந்து சிதையேலே - 520
இராமன் வாலியைக் கொன்றதனால் இராமனுக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப்பட்டது இந்த சேது. எனவே வாலியை வீழ்த்துவதற்கு இதுவே முன்னோடியாயிற்று. இலங்கையை அழிப்பதற்காக கட்டப் பட்டது சேது. இராவணனை ஒடுக்குவதற்காக இராமன் உகப்போடு வீறு நடைபோட ஏதுவாய் அமைந்தது இந்த சேது என்று திருமழிசையாழ்வார் இந்த சேதுவை மங்களாசாசனம் செய்கிறார்.
 
இது இலங்கை யீடழியக் கட்டிய சேது
          
இது விலங்கு வாலியை வீழ்த்தது - இது விலங்கை
 
தானொடுங்க வில்னுடங்கத் தண்தா ரிராவணனை
          
ஊனொடுங்க எய்தான் உகப்பு
                        -
நான்முகன் திருவந்தாதி 28

தந்தி தொலைக்காட்சி சிறப்பு செய்தித் தொகுப்பு