அனுமந்தக்குடி சமணப் பள்ளி |
இந்நிலையில்
கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தென் தமிழகத்தில் சமணம் கொடிகட்டிப் பறந்திருந்தாலும்,
இன்று அவர்கள் விட்டுச்சென்ற சமணப்பள்ளிகளைத் தவிர அம்மதத்தைப் பின்பற்றுவோர் இங்கு இல்லை. இதிலும் மலைக்குகைகளில்
அமைக்கப்பட்டவற்றைத் தவிர கற்கள் கொண்டு கட்டப்பட்ட பள்ளிகள் பெரும்பாலும்
இடிக்கப்பட்டுவிட்டன அல்லது மாற்றப்பட்டுள்ளன.
அனுமந்தக்குடி கட்டுமானப்பள்ளி
சிவகங்கை
மாவட்டத்தில் மகிபாலன்பட்டி, இளையான்குடி, பிரான்மலை, குன்றக்குடி,
திருக்களாக்குடி, பூலாங்குறிச்சி, திருமலை, அனுமந்தக்குடி ஆகிய இடங்களில் சமணர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. மதுரை,
மேலூர், திருமலை, குன்றக்குடி, அனுமந்தக்குடி, இடையமடம் வழியாக தொண்டிக்கு ஒரு
பெருவழி இருந்துள்ளது. இப்பெருவழிகளைப் பயன்படுத்திய வணிகர்கள் தங்கள்
வழிபாட்டுக்கென கட்டியுள்ள சமணப்பள்ளிகள் அவர்கள்
இங்கு வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. இப்பகுதிகளில்
ஓடும் விருசுழி மற்றும் பாம்பாற்றின் கரைகளில் சமணப்பள்ளிகள் பல இருந்துள்ளன.
பள்ளியின் முகப்புத் தோற்றம் |
எனினும் தென்
தமிழகத்திலேயே அனுமந்தக்குடியில் மட்டுமே இன்றும் வழிபாட்டில் உள்ள சமணப்பள்ளி உள்ளது.
இது முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. தென்
தமிழகத்தில் உள்ள ஒரே கட்டுமான பள்ளி இது மட்டுமே மற்றவை குகைப் பள்ளிகள் ஆகும். கர்நாடகத்தோடு
தொடர்புடைய சில தமிழ் சமணக் குடும்பங்கள் இன்றும் இங்கு உள்ளன.
பள்ளியின் அமைப்பு
பார்சுவநாதரின் புதிய சிலை |
தேவகோட்டையில்
இருந்து 10 கி.மீ. தூரத்தில் சுந்தரபாண்டியன்பட்டினம் செல்லும் சாலையில் விருசுழி
ஆற்றின் கரையில் உள்ளது அனுமந்தக்குடி. மூலஸ்தானம், முன்மண்டபம், மகாசாத்தையா
ஆலயம், பலிபீடம் என்ற அமைப்பில் இப்பள்ளி அமைந்துள்ளது. இது சமணர்களின் 23 ஆம்
தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்காகக்
கட்டப்பட்டுள்ளது. சேதமடைந்த நிலையில் இருந்த பழைய பார்சுவநாதர் சிலை அகற்றப்பட்டு
புதிய சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு மூலஸ்தானத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய சிலை முன்மண்டப
வலது பக்கம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு தர்மதேவி இயக்கி, மகாசாத்தையா, காளி,
கருப்பன், மாரியம்மன், கணபதி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
மகாசாத்தையா |
மூலஸ்தானத்தின்
முன்புறம் சிறிய அளவில் உள்ளது மகாசத்தையா ஆலயம். இது மிகக் குறுகிய வாசல்
கொண்டுள்ளது. மகாசத்தையா உக்கிர கோலத்தில் கையில் சூலம் ஏந்திய நிலையில் இங்கு
காட்சியளிக்கிறார். இந்த ஆலய வாசலின் இடது பக்கம் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ளது
சொக்கவணிகன் என்பவரின் புடைப்புச்சிற்பம். இவர் தொண்டியின் அரசராக இருந்தவர் எனக்
கூறுகிறார்கள். இவர் தங்க வணிகராக இருந்திருக்கலாம். இவர் இக்கோயில் கட்ட நிலத்தை,
பசுமாட்டின் ஒரு அடி மிதிக்கு 5 தங்கநாணயம் வீதம் விலை கொடுத்து வாங்கியதால்
அடிமிதிகுடி என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டு அனுமந்தக்குடி என மாறியுள்ளதாகத்
தெரிகிறது.
சொக்கவணிகன் |
கி.பி. 4
ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இப்பள்ளி, கி.பி.1881 ஆம் ஆண்டு
விருசுழி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெருமளவு சேதமடைந்தது. வெள்ளம் வடிந்த பின்,
ஆற்றின் தென்பகுதியில் இருந்த இப்பள்ளி, அதிலிருந்த கற்களைக் கொண்டு கி.பி.1885
இல் இப்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு செய்திகள்
மதுரை
நாயக்க மன்னரான விசுவநாத நாயக்கர் கி.பி.1535 ஆண்டில் இப்பள்ளிக்கு வழங்கிய கல்வெட்டில்,
இவ்வூரின் பெயர் முத்தூற்றுக் கூற்றத்து குருவடிமிடி எனும் ஜீனேந்திரமங்கலம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில், பார்சுவநாதர் மழவநாதர் சுவாமி என குறிக்கப்பட்டுள்ளார்.
கி.பி.1783
இல் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி காலத்தில் மழவநாத சுவாமி
ஆலயத்துக்கு வடக்கு செய்யானேந்தல் என்ற ஊர் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதை ஓலைப்
பட்டயத்தில் வழங்கியுள்ள அவர் இங்குள்ள தர்மதேவி இயக்கியை மரகதவல்லியம்மன்
என்றும், பிரம்மதேவரை மகாசாத்தா என்றும் அதில் குறித்துள்ளார். இது மன்னர்
உத்தரவுப்படி மன்னரின் பிரதானி முத்து இருளப்பப் பிள்ளை என்பவரால் வழங்கப்பட்டுள்ளது.
தமிழின்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி மூல நூலின் ஓலைச் சுவடி இங்கிருந்துதான் பெறப்பட்டு
அச்சிடப்பட்டது.
சைவ,
வைணவ மதங்களைப் போற்றி ஆதரித்த மதுரை நாயக்க மன்னர்களும், சேதுபதி மன்னர்களும் இங்குள்ள
சமணப்பள்ளிக்கு கொடை வழங்கி உள்ளது அவர்களின் மதச் சகிப்புத்தன்மைக்குச் சிறந்த சான்றாக
விளங்குகிறது.