Pages

Tuesday 27 October 2015

இராமநாதபுரம் நகரின் முதல் கிறித்தவ தேவாலயம் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயப் படைத் தளபதியால் கட்டப்பட்டது - வே.இராஜகுரு

தேவாலயம்

 கி.பி. 1498 இல் வாஸ்கோடகாமா (Vascodagama) கேரளாவில் வந்து இறங்கிய பின்பு கிறித்துவ மதம் இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் பெருமளவு  பரவத்தொடங்கியது. தமிழ்நாட்டுக்குள் கி.பி.1506 க்குப்பின் வந்த போர்ச்சுகீசியர்கள் (Portuguese) கடற்கரைப் பகுதியில் வணிகம் செய்ததோடு கத்தோலிக்க கிறித்துவத்தையும் பரப்பினர். பின்பு டென்மாக்கில் (Denmark) இருந்து கி.பி.1709 இல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு (Barthalomew Ziegenbalg) என்ற ஜெர்மனியரால் பிராட்டஸ்டன்ட் மதம் (Prostestant)  தமிழ்நாட்டுக்குள்  அறிமுகப்படுத்தப்பட்டது. போர்ச்சுகீசியர்களால் (Portuguese)  இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதியில் பல இடங்களில் கிறித்துவ தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. எனினும்   இராமநாதபுரம் நகரில், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின் (British East India Company Army) தளபதி மனுவேல் மார்டின்ஸ் (Colonel Manuel Martinz) என்ற ஆங்கிலேயரால் தான் கி.பி.1804 இல் முதன்முதலில் இங்கு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இத்தேவாலயம் இராமநாதபுரம் அரண்மனை அருகில் வடக்குத் தெருவில் உள்ளது.

இது பற்றி ஆய்வு செய்த, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான வே.இராஜகுரு (V.RAJAGURU, An Archaeological aficionado and Convenor of Heritage Club at S.S.A.M. Government Higher Secondary School, THIRUPPULLANI)  தனது கள ஆய்வின் போது, இத்தேவாலயத்தில் உள்ள  கண்ணாடியில் வரையப்பட்ட அழகிய இயேசு ஓவியம் மற்றும் பைபிள் ஸ்டாண்டு ஆகியவை கி.பி.1881 மற்றும் கி.பி. 1896 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவை எனக்  கண்டுபிடித்தார்.

“கி.பி.1762 இல் செல்லத்தேவர் என்ற விஜய ரகுநாத சேதுபதி காலமானபின், அவர் தங்கை மகன் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி இரண்டு வயதில் மன்னரானார்.
அவர் சார்பில் அவர் அன்னை முத்துத் திருவாயி நாச்சியார் ஆட்சி நடத்தி வந்தார். கி.பி.1772 இல் ஆர்க்காடு நவாப் (Arcot Nawab) மற்றும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். முத்துராமலிங்க சேதுபதியை திருச்சி சிறையில் அடைத்தனர். எட்டு ஆண்டுகாலம் ஆர்க்காடு நவாப் இராமநாதபுரத்தை ஆண்டார். அதன்பின் ஆர்க்காடு நவாபுக்கு ஆண்டுதோறும் ஒரு இலட்சம் ரூபாய் வரை அன்பளிப்புத் (பேஷ்குஷ்) தொகையாக செலுத்த சேதுபதி மன்னர் சம்மதித்த பின் முத்துராமலிங்க சேதுபதி கி.பி.1781 இல் மீண்டும் மன்னரானார். 

தளபதி மார்டின்ஸ்
முத்துராமலிங்க சேதுபதியிடம் பேஷ்குஷ் (அன்பளிப்பு) தொகையை மாதாமாதம் பெற்றுக்கொள்ள தளபதி மனுவேல் மார்டின்ஸ் என்ற ஆங்கிலேயரை இராமநாதபுரம் கோட்டையின் தனி அலுவலராக ஆர்க்காடு நவாப் நியமித்தார். சேதுபதி மன்னர் இளவயது முதல் சிறையில் இருந்ததால் நிர்வாக அனுபவங்களுக்காக தளபதி மார்டின்ஸ் உதவியை நாடிவந்தார்.
      இராமநாதபுரம் கோட்டை முழுவதும் தளபதி மார்டின்ஸ் கையில் இருந்தது. எனவே அவர் கோட்டை முழுவதையும் ஆக்கிரமித்து வந்தார். கோட்டைக்குள் முகவை ஊரணியின் கீழ் கரையில் இராமலிங்கவிலாசம் அரண்மனையின் மேற்க்கே தளபதி மார்டின்ஸ் தனக்கென ஒரு மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்தார். அம்மாளிகை அவர் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது.

சங்கரவிலாசம்
     தளபதி மார்டின்ஸ் இறந்த பின்பு, அவர் மாளிகையை, ராஜா பாஸ்கர சேதுபதி செப்பனிட்டு தனது ஒய்வு மாளிகையாகப் பயன்படுத்தி வந்தார். அச்சமயத்தில் இம்மாளிகையின் பெயர்  சங்கரவிலாசம் என மாற்றப்பட்டது. 25.01.1897  அன்று இராமநாதபுரம் வந்த சுவாமி விவேகானந்தர் அம்மாளிகையில் தான் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தேவாலயத்தின் உள்புறம்

தேவாலய வரலாறு

கத்தோலிக்கரான தளபதி மார்டின்ஸ் தனது மாளிகையின் அருகில் கிறிஸ்து நாதர் ஆலயம் என்ற பிராட்டஸ்டன்ட் (சி.எஸ்.ஐ.) தேவாலயத்தைக் கட்டினார். வில்லியம் பெண்டிங் பிரபு (Lord William Bentinck) என்ற ஆங்கிலக் கவர்னர் (Governor of Madras) காலத்தில் கட்டட வேலை முடிந்து, இத்தேவாலயம் கி.பி.1804 இல் முதல் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது. இத்தேவாலயம், சிலுவை வடிவில்  இங்கிலாந்து நாட்டு கலைப்பாணியில் மிக அழகாகக் கட்டப்பட்டுள்ளது. கி.பி.1961 இல் இது பக்கவாட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கல்லறைகள்
 
இத்தேவாலய வளாகத்தில் தளபதி மார்டின்ஸின் கல்லறை உள்ளது. “கி.பி.1740 இல் பிறந்த தளபதி மார்டின்ஸ் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையில் 50 ஆண்டுகள் பணிபுரிந்து தனது எழுபதாவது வயதில் கி.பி.1810 அக்டோபர் மாதத்தில் காலமானார்” என்ற செய்தி அவரது கல்லறைக் கல்வெட்டில் உள்ளது. 
தளபதி மார்டின்ஸ் கல்லறை

மேலும் சென்னையில் கலெக்டராக  இருந்த எல்லிஸ் துரை (Francis Whyte Ellis),  ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையில் (East India Company Army) லெப்டினென்டாக (Lieutenant) இருந்த ஹென்றி மில்லர் (Henry Miller), ரோஜர் சாக்ஸன் (Roger Jacson), அமெரிக்க மிஷனைச் (American Mission) சேர்ந்த போதகர் சில்வா (Rev.H.C.Zilva) உள்ளிட்ட பல ஆங்கிலேயர்களின் கல்லறைகள் இங்கு உள்ளன.  எல்லிஸ் துரையின் கல்லறைக் கல்வெட்டு இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.


பைபிள் ஸ்டாண்டு

மேலும் 07.04.1896 அன்று, அப்போதைய இத்தேவாலய போதகர் லிம்பிரிக் (Rev.A.D.Limbrick) என்பவருக்கு, திருமணப் பரிசாக இத்தேவாலயத்தில் உள்ள வெண்கலத்தாலான பைபிள் ஸ்டாண்டை பாஸ்கர சேதுபதி வழங்கி உள்ளார். இத் தகவல் அதில் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தேவாலயத்துக்கு வெண்கலத்தாலான  சரவிளக்கு ஒன்றும் பாஸ்கர சேதுபதியால் வழங்கப்பட்டுள்ளது.


பாஸ்கர சேதுபதி வழங்கிய பைபிள் ஸ்டாண்டு


பாஸ்கர சேதுபதி வழங்கிய பைபிள் ஸ்டாண்டு அதில் உள்ள வாசகங்கள்

இத்தேவாலயத்தில் உள்ள மணியும் லண்டனில் இருந்து தருவிக்கப்பட்டு ராஜா பாஸ்கர சேதுபதியால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தேவாலய மணி 


கண்ணாடியில் இயேசு ஓவியம்

இத்தேவாலய பலிபீடத்தின் மேல் உள்ள ஆறு அடி உயர ஜன்னல் கண்ணாடியில் பெரிய அளவிலான நிற்கும் நிலையில் உள்ள அழகிய இயேசு ஓவியம் உள்ளது. இது இராம்நாட்டில் காலமான கெய் கிளார்க் (GUY CLERK) என்பவரின் நினைவாக அவருடைய நண்பர்களால் 10.07.1881  அன்று வழங்கப்பட்டுள்ளது. இச்செய்தி அதன் கீழே ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.


தேவாலய பலிபீடத்தில் உள்ள அழகிய இயேசு ஓவியம்


தேவாலய பலிபீடத்தில் உள்ள அழகிய இயேசு ஓவியத்தின் கீழ் உள்ள செய்தி


சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து அழியாப் புகழ் பெற்ற ராஜா பாஸ்கர சேதுபதி மத வேறுபாடு பாராமல் கிறித்தவ தேவாலயத்துக்கும் கொடை வழங்கி இருப்பது அவரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுவதாக உள்ளது.”


எல்லிஸ் துரை
இவரது முழுப்பெயர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) என்பதாகும். கி.பி.1796 இல் சென்னை அரசாங்கத்தில் (Madras Government) பணியில் சேர்ந்தார். பல இடங்களில் பணிபுரிந்தபின் இவர்  சென்னையில் கலெக்டராகவும் இருந்தார். இவர் சென்னையில் இருந்தபோது சாமிநாதபிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றுள்ளார். வீரமாமுனிவர் (Father C.J.Beschi) எழுதிய நூல்களை முத்துசாமிபிள்ளை என்பவரைக்கொண்டு தேடி பாதுகாக்கச் செய்தவர். தரவுகொச்சகக் கலிப்பாவால் சில செய்யுள்களை இயற்றியுள்ளார். சீவகசிந்தாமணி, புறநானூறு, நாலடியார், மகாபாரதம் போன்று பல தமிழ் நூல்களைப் படித்துள்ளார். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். மீதிப் பகுதிகளுக்கு உரை எழுதுமுன்னே இராமநாதபுரத்தில் கி.பி.1819 இல் காலமானார். 
சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை (Ellis Road) இவர் பெயரால் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தின என்றும் அம்மொழி குடும்பத்திற்குத் தென்னிந்திய மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என்று முதன் முதலில் கூறியவரும் இவரே. எல்லீசுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி இராபர்ட் கால்டுவெல் (Rev.Robert Caldwell), தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) (A Comparative Grammar of the Dravidian Languages) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.