Pages

Saturday 18 April 2015

பாரம்பரியத்தை அறியத் தரும் தொல்லியல் - வே.இராஜகுரு



அறிமுகம் 

மனிதன் கடந்து வந்த பாதையை, அவன் வாழ்ந்த ஆதி காலத்தை, அறிந்து கொள்ளப் பயன்படுத்தப்படும் அறிவியல் ஆய்வுமுறை தொல்லியல் எனப்படும். இதை தொல் பொருளியல், தொல்பொருள் குறித்த ஆய்வு எனவும் கூறுவர்.
      கிரேக்க மொழியிலிருந்து தோன்றிய ஆர்க்கியாலாஜி (Archaeology) என்ற சொல்லில் Archae என்பது பழமை என்பதையும் Loges  என்பது அறிவியல் அல்லது கோட்பாடு என்பதையும் குறிக்கிறது.
      இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்பொருள்கள், செப்பேடுகள், வெளிநாட்டவர் குறிப்புகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு) ஆகியவற்றின் அடிப்படையில் வரலாறு எழுதப்படுகிறது. வரலாறை எழுத உதவும் ஒரு சான்றாக தொல்லியல் உள்ளது.
      தொல்லியலில், கட்டடக்கலை, தொல் பொருள்கள், நிலத்தோற்றங்கள் என்பன உள்ளிட்ட பொருள்களை அகழாய்வு மூலம் வெளிக்கொணர்ந்து அவற்றை ஆவணப்படுத்தி பகுப்பாய்ந்து அறிதல் ஆகிய வழிமுறைகள் பின்பற்றப்பபடுகின்றன.
சர் இராபர்ட் புரூஸ்புட் இந்திய தொல்லியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவர்தான் கி.பி.1863 இல் சென்னை பல்லாவரத்தில் முதல் பழைய கற்காலக் கருவியைக் கண்டுபிடித்தார்.

தொல்லியலின் நோக்கங்கள் 

      தொல்லியல் ஆய்வுகள் முன்பு, தொல்பொருள்களைப் பட்டியலிடும் பணியாக மட்டுமே கருதப்பட்டது. ஆனால் தற்பொழுது தொல்லியலில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஆய்வாளர்கள் அவற்றை ஒத்த பொருள்கள் வேறு எப்பகுதிகளில் கிடைத்துள்ளன என்றும் அவற்றின் மூலம் அவற்றைப் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறையைக் கணிக்கவும், காலத்தை நிர்ணயிக்கவும் செய்கின்றனர்.       இதில் பல வகையான ஆய்வு முறைகள் ஒப்பீட்டு முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
      வரலாறு என்பது உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் தான் வரலாற்றுக்கு வலுச்சேர்க்கும். இலக்கியம் கூறும் பல ஊர்கள், செய்திகளுக்கு தொல்லியல் ஆதாரங்கள் வலுச் சேர்ப்பவையாக உள்ளன.
      ஒரு குறிப்பிட்ட முதன்மைச் சான்றினை மட்டும் வைத்து ஆய்வு மேற்கொள்ளும்போது அது முழுமை பெறாமல் அல்லது ஆய்வின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலாமல் போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியங்களில் சமணர் பற்றியோ, தமிழரின் கடல் கடந்த வாணிகம் பற்றியோ, தமிழின் வரிவடிவ எழுத்துக்கள் பற்றியோ, மன்னர்களின் நாணயங்கள் பற்றியோ குறிப்புகள் அதிகமாகக் காணப்படவில்லை.
      தமிழகத்தின் மிகப்பழமையான கல்வெட்டுக்கள் காணப்படும் மதுரை மீனாட்சிபுரம் (மாங்குளம்) பகுதியில் சமணர் பள்ளி பல நூறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது என அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இச்செய்தி எந்த இலக்கியத்திலும் காணப்படவில்லை.
      தொல்லியலில் கண்டறியப்பட்ட பல செய்திகள் இலக்கியங்களில் காணப்படவில்லை என்பதும் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படும் செய்திகளுக்கு தொல்லியல் ஆதாரங்கள் இன்னும் காணப்படாமல் உள்ளன என்பதும் முரண்பட்டவையாக உள்ளன.

தொல்லியல் வகைகள் 

புவியியல், காலப்பகுப்பு மற்றும் பொருள் அடிப்படையில் தொல்லியல் வகைப்படுத்தப்படுகிறது.
      புவியியல் அடிப்படையில் கிரீஸ் ரோமபுரி தொல்லியல், அமெரிக்கத் தொல்லியல், இந்தியத் தொல்லியல், பழங்கால எகிப்துத் தொல்லியல், ஆப்பிரிக்கத் தொல்லியல் என பிரிக்கிறார்கள்.
      கால அடிப்படையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக்காலம் எனப் பாகுபாடு செய்யப்படுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலம் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகிறது.
1.      பழைய கற்காலம் (Palaeolithic Period) - கி.மு.5,00,000 முதல் கி.மு. 10,000 வரை
2.      நுண்கற்காலம் (Microlithic Period) – கி.மு.10,000 முதல் கி.மு.3,000 வரை
3.      புதிய கற்காலம்  (Neolithic Period) – கி.மு.3,000 முதல் கி.மு.1,000 வரை
4.      பெருங்கற்காலம் (Megalithic Period or Iron Age) – கி.மு.1,000 முதல் கி.மு.300 வரை
பொருள் அடிப்படையில் பொருளாதாரத் தொல்லியல் (Economic Archaeology), இனமரபுத் தொல்லியல் (Ethno Archaeology), நீரடி அகழாய்வு தொல்லியல் (Under-Water Archaeology), ஆகாய நிழற்படத் தொல்லியல் (Aerial Archaeology),  அழிவு மீட்புத் தொல்லியல் (Salvage Archaeology) எனப் பிரிக்கப்படுகிறது.

அகழாய்வு 

தொல்லியலில் மிக முக்கியமானது அகழாய்வு ஆகும். இதன் மூலமே பல தொல்லியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன.
      அகழாய்வு செய்ய வேண்டிய பகுதியினைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சேகரித்து, பிற ஆய்வாளர்களால் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என அறிந்துகொண்டு,  ஊரின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அவ்வூர் பற்றிய செவிவழிச் செய்திகளைச் சேகரித்து மேற்பரப்பாய்வு (Exploration) செய்யவேண்டும். இத்தகைய மேற்பரப்பாய்வு ஆற்றுப் படுகைகள், நிலப்பகுதிகள், மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டும். மேற்பரப்பாய்வு அடிப்படையில் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று, அகழாய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை (ASI)  அனுமதி பெறவேண்டும்.
      பின்பு அப்பகுதி அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோருக்கு அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்பினை கணினி வழி நிழற்படக் காட்சி மூலம் விளக்க வேண்டும். அகழாய்வு முடிந்ததும் அப்பகுதியை மீண்டும் மண்ணிட்டு மூடி நில உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அகழாய்வு வகைகள்

               பரவலாகத் தோண்டும் வகை, ஆழத்தோண்டும் முறை, சுற்றகழாய்வு (Block Method), நீள்குழி அகழாய்வு, குகை அகழாய்வு, சவக்குழி அகழாய்வு, நீருக்கடியில் அகழாய்வு என பல வகைகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

அகழாய்வு முறைகள் 

       ஆய்வுக்குரிய இடம் தேர்வு செய்தபின் அங்கு பரப்பாய்வு செய்து வரைபடம் தயாரிக்க வேண்டும். அதில் அப்பகுதியில் உள்ள நினைவுச் சின்னங்கள், கோவில்கள், சாலைகள், ஆய்வு செய்யப்படும் இடம் குறித்திடவேண்டும். இதை காண்டூர் ஆய்வு என்பர்.
      தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்யப்படவேண்டிய இடத்துக்கு ஏற்ற கருவிகளுடனும் (கேமரா உள்பட) வேலையாள்களுடனும் சென்று உரிய முறைப்படி நவீன முறையில் அகழ்ந்து அங்கு கிடைக்கும் தொல்பொருள்களை சேகரித்து அவற்றின் காலத்தை ஆய்ந்து, ஒப்பாய்வு செய்து தமது கண்டுபிடிப்புகளை பதிவு செய்கிறார்கள்.

தமிழக அகழாய்வுகள்

      தமிழகத்தின் பல பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை பல அகழாய்வுகளைச் செய்துள்ளது. கோவாவில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பூம்புகார் கடல் பகுதியில் ஆழ்கடல் ஆய்வு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு மூழ்கிய கப்பல் பகுதி ஒன்றையும் மனிதனால் கட்டப்பட்ட கட்டடப்பகுதி ஒன்றையும் கண்டறிந்துள்ளது.
      தொல்பழங்காலத்தைச் சேர்ந்த இடங்களான கோவை மாவட்டம் ஆனைமலை, மதுரை கோவலன்பொட்டல், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், தொண்டி, தேரிருவேலி, ஈரோடு மாவட்டம் கொடுமணல் போன்று பல இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு தொல்லியல் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதேபோல் இந்திய தொல்லியல் துறை (ASI)  பல்லாவரம், அத்திரம்பாக்கம், சித்தன்னவாசல், பழனி, அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் அகழாய்வு செய்துள்ளது. இது தவிர சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போன்றவையும் அகழாய்வு செய்யும் அனுமதி பெற்றுள்ளன.

தொல்லியல் ஆய்வுகளின் பயன்கள்  

தொல்லியல் ஆதாரங்களே வரலாறு உருவாக்கப்படுவதற்கான முதன்மைச் சான்றாக அமைகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட கால மனித வாழ்க்கையை அறிய தொல்லியல் முக்கிய இடம் வகிக்கிறது. எழுத்துச் சான்றுகள் இல்லாத கற்கால மக்களின் வரலாற்றை அறிய அவர்கள் வாழ்ந்த இடங்களை தோண்டி, பயன்படுத்திய பழம்பொருள்களைக் கண்டறிந்து அவர்களின் நாகரீகத்தை அறிய முடிகிறது.
      மனித இனம் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம். அவன் வாழ்ந்த ஒவ்வொரு பகுதியிலும் பலவித இயற்கைச் சவால்களை எதிர்கொண்டு எப்படி வெற்றி பெற்றான் எனக் கண்டறிய உதவுகிறது.
      அகழாய்வு மூலம் தான் சிந்துவெளி நாகரீகம் உலகிற்கு தெரியவந்தது. அதேபோல் பாடலிபுத்திரம், நாளந்தா, அரிக்கமேடு, பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கரூர், திருக்கோவிலூர் ஆகிய இடங்களின் புகழ் அகழாய்வு மூலமே தெரியவந்தது. அதேபோல் செப்புக்காலப் பண்பாடு, கங்கை, யமுனை நதிப்பள்ளத்தாக்கில் நிலவிய வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு, மத்திய இந்தியா, வட தக்காணம், இராஜஸ்தான், தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் நிலவிய புதிய கற்கால செப்புக்காலப் பண்பாடு ஆகியவற்றையும் அறிய முடிகிறது.
      ஆரம்பக் காலத்தில் மனிதன் மேய்ச்சல் தொழிலை விட்டுவிட்டு வேளாண்மைக்கு மாறிய நிலை, நேர்த்தியான மட்பாண்டங்களை பெருமளவில் உற்பத்தி செய்து தானியங்களை சேமித்து, செம்பு, இரும்பு போன்ற உலோகங்கள் மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள், போர்க்கருவிகள் செய்யக் கற்றுக்கொண்ட விதம், காட்டு விலங்குகளை எவ்விதம் வீட்டு விலங்குகளாகப் பழக்கினான் என அறியவும் தொல்லியல் உதவுகிறது.
      பண்டைய மனிதன் இறந்தோரைப் புதைக்கும் விதம், நடுகற்கள் அமைத்த விதம் ஆகியவற்றையும் தொல்லியல் மூலம் அறியலாம். தமிழகத்தின் அகழாய்வுகள் மூலம் சங்ககாலத்தில் ரோம் நாட்டுடன் தமிழகம் கொண்டிருந்த வாணிகத்தொடர்பை அறிய முடிகிறது.
நமது பங்களிப்புகள்
அக்கால அரசர்கள் தங்கள் வாழும் அரண்மனைகளை காலத்தால் அழியக்கூடிய மரங்கள், செங்கற்களைக் கொண்டும், கடவுள் உறையும் கோவில்களை கற்களைக் கொண்டும் அமைத்தனர். அதனால் இராஜராஜசோழன் போன்ற மன்னர்கள் தங்கள் கட்டிய கோவில்களால் மனதில் நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த அரண்மனை பிற எதிரி மன்னர்களால் அழிக்கப்பட்டுவிட்டது.
கங்கைகொண்டசோழபுரத்தில் மாளிகைமேடு என்ற இடத்தில் இராஜேந்திர சோழன் கால அரண்மனையின் அடிப்பகுதி மட்டும் அகழாய்வு மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அக்கால மன்னர் அரண்மனைகளின் அமைப்பை அறிய முடிகிறது.
      தொல்லியலைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மாணவர்களிடம் உண்டாக்கவும், மரபு சார் சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசெல்லவும், தமிழக அரசு அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club) ஏற்படுத்த ஆணையிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் இம்மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் மூலம் மாணவர்களுக்கு நமது பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
      ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரமும் (World Heritage Week),  ஏப்ரல் 18  அன்று உலக மரபு நாளும் (World Heritage Day) கொண்டாடப்படுகிறது. அக்காலங்களில் அனைத்து பாரம்பரியச் சின்னங்களையும் கட்டணம் ஏதுமின்றி பார்வையிடலாம். ஐ.நா. சபையின் யுனெஸ்கோ என்ற அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் 100 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் மிக்க இடங்களை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கின்றன. இவற்றில் இயற்கைப் பாரம்பரியச் சின்னங்களும் அடங்கும்.  தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில்கள், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை இரயில் பாதை, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவை தமிழகத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்கள் ஆகும்.
      அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் 100 ஆண்டுகள் கடந்த வீடு அலுவலகக் கட்டடம் என்று எதுவாக இருந்தாலும் அதை பாரம்பரியம் மிக்கதாக அறிவித்துவிடுகிறார்கள். அதை அதன் உரிமையாளர்கள் இடித்துக்கட்ட அனுமதி பெறவேண்டும். ஆனால் நம் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியச் சின்னங்கள் உள்ளன.
ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பாரம்பரியம் மிக்க இடங்களில் மது அருந்தி உறங்கிக்கிடப்பதும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக்கள், ஓவியங்கள் உள்ள பகுதிகளில் பெயிண்டால் தங்கள் பெயர்களை எழுதி வைப்பதும், காதல் ஜோடிகள் கதைகள் பேச வருவதுமான செயல்பாடுகள் நமது பாரம்பரியத்தைக் காக்க எவ்வளவு விழிப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டி உள்ளது என்பதைக்காட்டும்.
      நான் சிறுவயது மாணவனாக இருந்தபோது எரிகற்கள் போல சிறுகற்களைக் காணும்போது அவை வேறு கிரகத்தில் இருந்து வந்தவை எனக் கூறக்கேட்டதுண்டு. ஆனால் அவை பழங்கால மக்கள் பயன்படுத்திய இரும்பின் மூலப்பொருள் என்பது இப்போது தெரிகிறது.
      இரும்புக் காலத்தைச் சேர்ந்த பொருள்கள் தமிழகத்தில் அநேக இடங்களில் கிடைத்துள்ளன. இன்னும் சில பூமிக்குள் உறங்கிக் கிடக்கின்றன.
      தொல்லியல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் நிறைய உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் நடுநிலைச் சிந்தனையுடன் செயல்பட்டு வரலாறை ஆய்வு செய்யவேண்டும். அப்போதுதான் உண்மையான வரலாறு வெளிவரும்.
      ஒரு செய்தி ஒருவர்க்கு முக்கியமாகவும் மற்றொருவருக்கு சாதாரணமாகவும் இருக்கலாம். ஆனாலும் அனைத்தும் அறிவியல் முறைப்படி வரிசைப்படுத்தப்படவேண்டும்.
      இறுதியாக இந்திய அகழாய்வுகளின் தந்தை என போற்றப்படும் மார்டிமர்வீலர் அவர்களின் கருத்து இங்கு நினைவு கூறத்தக்கது, “தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டிப் பார்ப்பது பொருள்களை அல்ல, மக்களை; ஆய்வாளர்கள் கையாளும் சிறிய துண்டுகளும் பகுதிகளும் அவர்களுக்கு உயிரோட்டம் மிக்கவை. தொல்லியல் ஒரு அறிவியல், இது மனித குலத்துடன் தொடர்புபடுத்தி செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று.”

3 comments:

  1. மிகச் சிறப்பு

    ReplyDelete
  2. Tq sir very helpful for my phd

    ReplyDelete
  3. சிறப்பு ஐயா

    ReplyDelete