இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான மூன்று
தமிழி கல்வெட்டுகள் காணப்படும் கொங்கர் புளியங்குளம் மலையில் இயற்கையாக
அமைந்த குகைத்தளத்தில் 50க்கும் மேற்பட்ட கல்படுக்கைகள் காணப்படுகின்றன.
பழங்காலத்தில் இங்கு சமணப் பள்ளி செயல்பட்டுள்ளது. இவை கொங்கர் புளியங்குளம் சமணர்
மலை காண ஆர்வத்தை ஏற்படுத்தின.
மதுரையிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை
காமராஜர் பல்கலைக்கழகத்தை அடுத்து உள்ள ஊர் கொங்கர் புளியங்குளம். சாலையின் மீது
சமணர் கல்வெட்டுகள், படுக்கைகள் அங்கு செல்லும் வழி ஆகியவை பற்றிய தகவல் பலகைகள்
தமிழ்நாடு தொல்லியல்துறையால் நிறுவப்பட்டுள்ளன. அதை நன்றாகக்
குறிப்பெடுத்துக்கொண்டும், புகைப்படம் எடுத்துக்கொண்டும் தார்சாலையில் கொஞ்ச தூரம்
சென்றதும் டாக்டர் சீசீசீ சொல்லப்பாவை நினைவுபடுத்தும் காட்சிகள் அதைத் தாண்டிச்
சென்றோம்.
மிக ஆழமான கல்குவாரி அதன் நடுவில் ஒரு ஒத்தையடிப் பாதை
அதில் நடந்து சென்றால் மீண்டும் ஒரு கல்குவாரி அதையும் தாண்டினால் சுடுகாட்டுக்கு
அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையில் சென்று மீண்டும் ஒத்தையடிப் பாதையில் சென்றால் ஒரு
நீண்ட மலை உள்ளது. அதன் அடிவாரத்தில் சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் பற்றிய
தகவல்பலகைகள் இரண்டு உள்ளன. மேடை அமைத்து தொல்லியல்துறையால் செய்யப்பட்ட தகவல்பலகை
கல்வெட்டுகள் இரண்டும் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருந்தன.
மலையில் ஏற ஏணி அமைக்கப்பட்டிருக்கிறது. மலையில் இயற்கையாக
அமைந்த குகைத்தளத்தில் 50க்கும் மேற்பட்ட கல்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதில் நம்மவர்கள் தங்கள் பெயர்களை செதுக்கி ‘அழகுபடுத்தியிருந்தனர்’. வெளியே கடுமையான வெயில். ஆனால் குகை உள்ளே குளிர்சாதன
வசதி செய்யப்பட்டிருந்ததைப் போன்று குளிர்ச்சியாக இருந்தது. குகைத்தளத்தில் இருந்த
கற்படுக்கைகள் அசிங்கப்படுத்தப்பட்டிருந்தன.
குகை முகப்பில் மூன்று தமிழ் பிராமி (தமிழி) கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் காலம் கி.மு.முதலாம் நூற்றாண்டு ஆகும். இங்கு கல்படுக்கைகள் அமைக்க உதவி செய்தவர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. அக்கல்வெட்டுகளின் மீது கரிபூசி வைத்திருந்தனர். அதன் அருகில் வெளியில் கிடந்த ஒரு பாறையில் ஒரு கற்படுக்கை செதுக்கப்பட்டிருந்தது.
கல்வெட்டுகளின் செய்திகள் :
1.
குற கொடுபிதவன் உபசஅன் உபறுவ
2.
குற கொடல்கு ஈத்தவன்
செறஅதன் பொன் (இரு குறியீடுகள் உள்ளன)
3.
பாகன்ஊர் பேதாதன்
பிடன் ஈத்த வேபொன் (இரு குறியீடுகள் உள்ளன)
கல்வெட்டுகளின் பொருள் :
1.
உபாசன் ஆகிய
உபறுவன் உறையும் இடம் கொடுப்பித்தான்.
2.
செறதன் என்பவன்
உறைவிடம் அமைக்க பொன் கொடையளித்தான்.
3.
பாகனூர் பேதாதன்
பிடன் என்பவன் உறைவிடம் அமைக்க வெண்பொன் தானமளித்துள்ளான்.
இக்கல்வெட்டுகளின்
கீழே இறங்கினால் இடதுபுறம் மகாவீரரின் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. பத்தாம்
நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிற்பம் வட்டெழுத்துக் கல்வெட்டுகளுடன் காணப்படுகிறது.
காற்று அரிப்பினால் சிற்பம் சேதமாகி உள்ளது.
இச்சிற்பம் காணப்படும் பகுதி வழியே பின்பக்கமாக மலையில் ஏறினால் மேலே பிற்காலத்தில் கட்டப்பட்ட முருகன் கோயிலும் சில சிற்பங்களும் உள்ளன.
மலையின் உச்சியில் நின்று கிழக்குப் பக்கமாகப் பார்த்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்கள்
தெரிகின்றன. மலையின் அடிவாரத்தில் நடுகல் அமைப்பில் பல கற்கள் காணப்படுகின்றன.
அவற்றைக்கொண்டு ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை அகழாய்வு செய்தால் அந்த நடுகல்கள் பற்றிய
தகவல்கள் நிறைய கிடைக்கும். தொல்லியல் துறை அதை உடன் செய்ய வேண்டும் இல்லையெனில்
அப்பகுதியையும் கல்குவாரியாக மாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது.
தமிழி எழுத்துக்கள் வழக்கத்தில்
இருந்த கால கட்டத்தில் சமணர் மலைக்குகைகளில் தங்கி சமணத்தை வளர்த்து வந்துள்ளனர்.
அக்கால கட்டங்களில் சமணத்தில் உருவ வழிபாடு இருந்ததாகத் தெரியவில்லை. சைவ, வைணவ
மதங்களின் எழுச்சியினால் எட்டாம் நூற்றாண்டில்
சமணத்திற்கு ஏற்பட்ட தொய்வுக்குப் பின் சமணரும் உருவ வழிபாட்டுக்கு முக்கியத்துவம்
கொடுக்கத் தொடங்கி உள்ளனர். எனவே சமணத்துறவிகள் தங்கி இருந்த குகைகளில் மகாவீரர்,
பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை கீழக்குயில்குடி, கழுகுமலை, ஆனைமலை, கொங்கர் புளியங்குளம் போன்ற சமணர்
இருப்பிடங்களில் உள்ள சிற்பங்கள் மூலம் அறியலாம்.
இங்குள்ள கல்வெட்டுக்கள் சுமார்
2100 ஆண்டுகள் பழமையானவை. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தொல்லியல்
துறைக்கும், தமிழக அரசுக்கும், மட்டும் இல்லை. இம்மலை உள்ள ஊரைச்
சேர்ந்தவர்களுக்கும் உள்ளது. சமணர் பள்ளிக்குச் செல்ல ஒரு நல்ல பாதை இல்லை. பழமையான கல்வெட்டுக்கள் உள்ள பகுதியில்
மிகப்பெரிய அளவில் JESUS என பெயிண்டால் எழுதப்பட்டுள்ளது. அதே போல் மகாவீரர் சிற்பத்தின் கீழேயும் எழுதி உள்ளனர்.
மீனாட்சிபுரம் சென்ற போது அவ்வூர் மக்கள் அம்மலைக் குகையைப் பாதுகாக்கவும்,
வருவோருக்கு வழிகாட்டவும் செய்தனர். அதேபோல் இவ்வூரிலும் மலைகுகைக்குச் செல்லும்
வழியையும் அதன் பழம்பெருமையையும் இவ்வூர்காரர்கள் கூறினார். இது போன்ற பழம் பெருமை வாய்ந்த
பகுதிகளைச் சுற்றி உள்ள மக்களிடம் தொல்லியல் துறையும், தமிழக அரசும் இவை
பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தலாம்
அவ்வாறு செய்யத் தவறினால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல்
பாதுகாப்பாக இருந்தவற்றை, ஆங்கிலேயர்களால் வெளிக்கொணரப்பட்ட நமது பாரம்பரியப்
பெருமையை நாமே அழித்துவிடும் கேடுகெட்ட செயலைச் செய்தவர்களாகிவிடுவோம்.
உதவிய நூல்கள் :
1. கல்வெட்டியல்,
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு, 1972
2. தொல்லியல் துறை தகவல்
பலகை