Pages

Saturday 10 August 2013

மீனாட்சிபுரம் (மாங்குளம்) கல்வெட்டுக்கள் (வே.இராஜகுரு)


தொல்லியல் துறையின் தகவல் பலகை



தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படும் மதுரை, தமிழர்தம் பாரம்பரியத்தின் முதன்மைக்களமாக விளங்குகிறது. மதுரையைச் சுற்றி நாலாபுறங்களிலும் காணப்படும் மலைக்குன்றுகள் அனைத்தும் நமது பழமை பேசுகிறது. சமணர்கள் மலைக்குகைகளை வாழிடங்களாகப் பயன்படுத்தி சமணமதத்தை வளர்த்துள்ளனர். மதுரையைச் சுற்றி உள்ள பல மலைக்குன்றுகளில் காணப்படும் குகைகளில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர். மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள மலைக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள் தான் தமிழகத்திலுள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானவை. இவை 300 B.C.E. ஐ சேர்ந்தவை. தமிழி எழுத்துக்களால் ஆன இக்கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்துள்ளன. இவை பிராமி எழுத்துக்களிலிருந்து பல வகைகளில் வேறுபடுகின்றன.
(B.C.E என்பது கி.மு. (BBB.C. கிறிஸ்துவுக்கு முன்) என்பதற்குப் பதில் பயன்படுத்தப்படுகிறது. இது BEFORE COMMON ERA ஆகும். அதேபோன்று கி.பி. என்பதற்குப் பதில் C.E. பயன்படுத்தப்படுகிறது. இது COMMON ERA ஆகும்.)
கழுகுமலை என்றும் ஓவாமலை என்றும் மக்களால் அழைக்கப்படும் இம்மலை, மதுரையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் டி.வி.எஸ். சக்ரா டயர் தொழிற்சாலை அருகில் மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ளது. முன்பு இம்மலை மாங்குளம் கல்வெட்டுக்கள் என தொல்லியாளர்களால் அழைக்கப்பட்டது. அது தற்போது மீனாட்சிபுரம்  கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகிறது. இம்மலைக்குன்றில் 5 இயற்கைக் குகைகள், 80 கற்படுக்கைகள், 60 பேர் அமர்ந்து பாடம் கேட்பதற்கு வசதியான பள்ளி செயல்பட்டது என்பன போன்ற செய்திகள் மீனாட்சிபுரம் செல்லும் ஆர்வத்தைத் தூண்டின.
மலையின் அடிவாரத்தில் தொல்லியல் துறையின் தகவல் பலகை சமணர் படுக்கை பற்றி நிறைய தகவல்களைத் தருகிறது. 

மலையில் ஏற படிகள் அமைக்கப்பட்டுள்ளன


மீனாட்சிபுரத்தில் நான்கு இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியுள்ளது. மலையின் மேல்பகுதியில் இரு இடங்களிலும், மலையின் கீழ்ப்பகுதியில்  இரு இடங்களிலும் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் அவை வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.

சுண்ணாம்பு கலவை பாறையில் கொட்டப்பட்டுள்ளது

அகழாய்வு செய்யப்பட்ட இடம் இது வழிபாட்டுக்கூடமாகவோ அல்லது கூட்ட அரங்காகவோ இருந்திருக்கலாம்

அகழாய்வு செய்யப்பட்ட இடம் இது சமையலறையாக இருக்கலாம்


மலையின் மேல்பகுதியில் செங்கல்கள் சிதறிக் கிடந்த பகுதியில் ஒரு கட்டடப்பகுதியும், முதல் குகைப்பகுதியின் கீழ்ப்பகுதியில்  ஒரு கட்டடப்பகுதியும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. அதில் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், சொரசொரப்பான பானை ஓடுகள், இரும்பு ஆணிகள், சுண்ணாம்புக் கலவை ஆகியவை கிடைத்தன. செங்கல்களில் ஒன்றின் அளவு 35×18×6 செ.மீ. ஆகும். முதல் கட்டடப்பகுதி ஒரு வழிபாட்டுக்கூடமாகவோ அல்லது கூட்ட அரங்காகவோ இருந்திருக்கலாம். அடுத்த கட்டடப்பகுதி சமையலறையாக அறியப்படுகிறது. இக்கட்டடப்பகுதிகள்  BB300 B.C.E. முதல் BB1400 B.C.E. வரை மிகவும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மலையின் மீது குகைகளுக்குச் செல்லும் வழிகள் அம்புக்குறியிட்டுக் கட்டப்பட்டுள்ளது.


முதல் குகையில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்குகையின் மேல்பகுதியில் வரலாற்றுக்கு முந்திய கால மக்களின் ஓவியங்கள் காணப்பட்டதற்கான சுவடு காணப்படுகிறது. அடுத்ததாக அருகருகே அமைந்த இரு குகைகள் உள்ளன. அவற்றில் பல கற்படுக்கைகளும் மூன்று கல்வெட்டுகளும் இருக்கிறது. 









 

அதிலிருந்து மலையின் கிழக்கு சரிவில் கீழே இறங்கினால் ஒரு குகை தென்படுகிறது. இங்கும் பல கற்படுக்கைகள் காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டு உள்ளது. இக்குகை ஒரு வீடு போன்றே அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதியில் சுவர் போன்று அமைந்திருந்து பின்பு அது சிதைந்திருக்கலாம்.



முதல் கல்வெட்டு : 



“கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்
      இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
      வழுத்திய் கொடுப்பித்தஅ பளிஇய்

பொருள்: நந்தஸிரியக்குவன் என்ற கணிக்கு (சமணத்துறவிக்கு) பாண்டியன் நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி என்பவன் இக்கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தான்.

இரண்டாம் கல்வெட்டு : 



“கணிய் நத்திய் கொடிய் அவன்

பொருள்: நத்திய் என்ற சமணத்துறவி பாறையைச் செதுக்கி படுக்கையாக அமைத்தார். கொட்டுதல் என்றால் செதுக்குதல் என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நத்திய் என்பவர் சமணத்துறவியாகவும் கல்வெட்டுகளைச் செதுக்கியவராகவும் இருக்கலாம். ஏனெனில் மற்ற கல்வெட்டுக்களில் இச்சொல் ‘கொடுப்பித்தஅ ‘கொடுபிதோன் ‘கொடிஓர் எனப் பயின்று வருகிறது.


மூன்றாம் கல்வெட்டு :
 


“கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
            ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

பொருள்: நெடுஞ்செழியனின் சாலகன் (மைத்துனியின் கணவன்) இளஞ்சடிகனும், அவன் தந்தை சடிகனும் நந்தஸிரியக்குவன் என்ற சமணத்துறவிக்கு கற்படுக்கைகள் உருவாக்கிக் கொடுத்தனர்.
(மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் சாலகன் என்று குறிக்கப்படுகிறான். இதை சலகன் எனவும் படிக்கலாம். இதுவே சகலன் என திரிந்துள்ளதோ என டாக்டர் இரா.நாகசாமி கருதுகிறார்.) 


நான்காம் கல்வெட்டு : 

 

            “கணிஇ நதஸிரிய் குவ(ன்) வெள்அறைய் நிகமது காவிதிஇய்
            காழிதிக அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்


பொருள்: வெள்ளறை நிகமத்தைச் சேர்ந்த காவிதி பட்டம் பெற்ற அந்தை அசுதன் என்ற முத்து வியாபாரி  நந்தஸிரியக்குவன் என்ற சமணத்துறவிக்கு கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தான்.
 

ஐந்தாம் கல்வெட்டு :

            “சந்தரிதன் கொடுபிதோன்


பொருள்: சந்தரிதன் என்பவர் கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தார். சந்தரிதன் என்பவர் உயர்குடியைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

ஆறாம் கல்வெட்டு :

            “வெள்ளறை நிகமத்தோர் கொடிஓர்


பொருள்: வெள்ளறை நிகமத்தைச் சேர்ந்த வணிகக்குழுவினரும் கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்துள்ளனர். வெள்ளறை நிகமம் என்பது வெள்ளறை என்ற நகரையும் அவ்வூர் வணிகக் குழுவையும் குறிப்பதாகக் கொள்ளலாம். (நிகமம் என்பது நகரையும் வணிகக் குழுவையும் குறிக்கும்) வெள்ளறை நிகமம் என்பது இவ்வூருக்கு அருகில் இன்று வெள்ளரிப்பட்டி என்று அழைக்கப்படும் கிராமத்தின் பழைய பெயராக இருக்கலாம்.

      இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் மீனாட்சிபுரம் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழி எழுத்துக்களை ஒத்துள்ளதாக டாக்டர் இரா.நாகசாமி குறிப்பிட்டுள்ளார்.
      இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் தமிழி எழுத்துக்களுடன் பிராகிருதச் சொற்களும் கலந்து எழுதப்பட்டுள்ளன. ஸிரி, தம்மம், பளி, ஸுதன், நிகமம், கணி ஆகிய பிராகிருதச் சொற்கள் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன.
      காவிதி என்பது பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்ட பட்டம் ஆகும். இவர்கள் அரசு அதிகாரிகளாகவரி வசூல் போன்றவற்றைச் செய்துள்ளனர்.
      கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் நந்தஸிரியக்குவன் என்ற சமணத்துறவி துறவிகளின் தலைவராக இருந்திருப்பார். கணி என்ற பிராகிருதச் சொல்லுக்கு மூத்த சமணத்துறவி என்று பொருள். இதில் குவன் என்ற பெயர் அவரின் இயற்பெயராக தமிழ்ப்பெயராக இருந்து அவர் துறவியானதும் நந்தஸிரி என்ற துறவிக்குரிய பெயரையும் சேர்த்து நந்தஸிரியக்குவன் என அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எனவும் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.
      இரண்டு கல்வெட்டுகளில் குறிக்கப்படும் நெடுஞ்செழியன், சங்கத்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றும் தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம். இக்கல்வெட்டின் காலம் 300 B.C.E. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூறிய இரு மன்னர்களின் காலம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.




மலை அடிவாரத்தில் நல்ல சுவையான தண்ணீர் ஊற்றுக்கள் உள்ளன. இவை நமது தாகத்தைத் தணிக்கின்றன. 



3 comments:

  1. தகவலுக்கு நன்றி

    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
  2. கனி நந்தாசிரியன் இயக்கன் என்பவர் ஆசிவக சமயத்தை சார்ந்தவர். பூதபாண்டியனின் படைத்தளபதியாக இருந்து அவரது இறப்பிற்கு பிறகு ஆசிவக மதத்தை பின்பற்றினார், பூதபாண்டியனின் மகனான தலையாளங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் அவரது படைத்தளபதியான கனிநந்தாசிரியன் இயக்கன் என்பவருக்கு கொடுப்பித்த கற்படுக்கை ஆகும்,

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் தகவலுக்கு நன்றி நண்பரே

      Delete