Pages

Saturday 18 June 2016

தொண்டி அருகே 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சூலக்கல் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு





இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற  பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு தொண்டி பகுதியில் மேற்கொண்டிருந்த தொல்லியல் களஆய்வின் போது  சுந்தரபாண்டியன்பட்டினம் அருகில்  மருங்கூர் என்ற ஊரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சூலக்கல் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது,
      மன்னர்கள் காலத்தில் வழிபாட்டுத்தலங்களில் தினசரி வழிபாடு நடைபெறவேண்டி, அவ்வழிபாட்டுத்தலங்களுக்கு நிலங்களை வரிநீக்கி தானமாக வழங்குவார்கள். அவ்வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலதானம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, புத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
      இவ்வாறு தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் எல்லைக்கற்கள் நடப்பட்டு கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும். சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்களும், திருமால் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் எல்லைகளில் சக்கரம் பொறிக்கப்பட்ட திருஆழிக்கல்லும் எல்லைக்கற்களாக நடுவது வழக்கம்.
இத்தகைய சூலக்கற்களில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவமும் சூரியனைக் குறிக்கும் வட்டவடிவமும் இருக்கும். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்படுகின்றன.  இக்கல்லில் எந்த மன்னர்கள் ஆட்சியில் வழங்கப்பட்டதோ அந்த மன்னர்களின் இலட்சினைகளும் இருக்கும். சில சூலக்கற்களில் நிலம் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.
மருங்கூரில் உள்ள சூலக்கல்லில் சூலமும், அதன் மேல்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவமும், இடதுபுறம் பாண்டியரின் செண்டுகோலும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகின்றன. இதில் சூரிய வடிவம் தேய்ந்த நிலையில் உள்ளது.  
மருங்கூருக்கு மிக அருகில் உள்ள தீர்த்தாண்டதானத்தில் சர்வதீர்த்தமுடையார் எனும் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள கி.பி.1198  ஆம் ஆண்டைச் சேர்ந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்திய கல்வெட்டில், சிவநிண்டகாலன் எனும் கண்டியூர் நாடாள்வான் என்பவர் இக்கோயில் பஞ்சநெடி தேசிநாயகருக்கு மருங்கூர் என்ற பண்டித சோழ சதுர்வேதமங்கலத்தைத் தானமாக வழங்கி உள்ளார் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு மூலம், மருங்கூர் தீர்த்தாண்டதானம் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. மருங்கூரில் கண்டுபிடிக்கப்பட்ட சூலக்கல், தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்க அப்போது நடப்பட்ட நான்கு கற்களில் ஒன்றாக இருக்கலாம். இச்சூலக்கல்லில் கல்வெட்டுக்கள் எதுவுமில்லை.
தற்போது இச்சூலக்கல் இவ்வூர் மகாகணபதி கோயில் எதிரே எல்லை முனீஸ்வரராக வழிபாட்டில் உள்ளது. சங்ககாலத்தில் பெரும் புகழுடன் விளங்கிய சங்க இலக்கியங்களில் சிறப்பாகக் குறிக்கப்படும் சங்ககால பாண்டியர்களின் ஒரு துறைமுகப் பட்டினமான மருங்கூர் பட்டினமாக  இவ்வூர் இருக்கலாம் என்ற கோணத்திலும் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

நாளிதழ் செய்திகள் 

 

 

 


Friday 10 June 2016

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கொக்கரசன்கோட்டையில் சங்ககால இரும்பு உருக்காலை, தாய்த் தெய்வ சுடுமண் சிற்பம் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு



 
பச்சைத்தண்ணீர்க்காரி  என்ற மாலைக்காரி அம்மன் கோயில்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிலிருந்து சூரங்குடி செல்லும் பழைய மங்கம்மாள் சாலையில் தரைக்குடி அருகில் உள்ளது கொக்கரசன்கோட்டை என்ற ஊர். இந்த ஊரில் பச்சைத்தண்ணீர்க்காரி  என்ற மாலைக்காரி அம்மன் கோயில் பல்லாங்குறிச்சி கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது.  இக்கோயிலைச் சுற்றியும்  கண்மாய்க் கரையிலும் பல ஏக்கர் தூரத்திற்கு பழங்கால பானை ஓடுகள்  சிதறிக்கிடக்கின்றன.
பச்சைத்தண்ணீர்க்காரி  என்ற மாலைக்காரி அம்மன் கோயில்

இங்கு திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றப் பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு, கொக்கரசன்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலன், ஆசிரியர் அற்புதராஜ், எஸ்.டி.சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இராஜபாண்டி  ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தபோது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்காலையின் உடைந்த பகுதிகள், இரும்பு தாதுப்பொருள்கள், இரும்பு கழிவுப்பொருள்கள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், பழுப்பு நிற பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண்ணால் செய்யப்பட்ட தாய்த் தெய்வ உருவ பொம்மை, கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
களஆய்வில் தலைமையாசிரியர் ஜெயசீலன், ஆசிரியர் அற்புதராஜ்

தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு மற்றும் தலைமையாசிரியர் ஜெயசீலன்

இது பற்றி தொல்லியல் ஆய்வாளரான வே.இராஜகுரு கூறியதாவது,
“இந்த பழம்பொருள்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  சங்ககாலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய பொருள்கள் ஆகும். சங்ககாலத்தில் இங்கு ஊரமைத்து மக்கள் குடியிருந்ததற்கான ஆதாரமாக  இதைக் கொள்ளலாம்.
கி.மு.1000 முதல் கி.மு.300 வரையிலான பெருங்கற்காலத்தில் தான் மனிதன் இரும்பைக் கண்டுபிடித்தான். இரும்பைப் பயன்படுத்தி பலவித கருவிகள் செய்து அதன்மூலம் பல தொழில்கள் தோன்றியது இக்காலத்தில் தான். எனவே பெருங்கற்காலத்தை இரும்புக்காலம் எனவும் அழைப்பார்கள். 

இரும்பு உருக்காலை

இவ்வூரில் இரும்பு தாதுப்பொருள்கள், இரும்புக் கழிவுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்கு ஆலையின் உடைந்த பகுதிகள்  கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருப்பது உறுதியாகிறது.
அக்காலத்து மக்கள் இரும்பு தாதுப்பொருள்களை, உருக்காலைகள் மூலம் உருக்கி, இரும்பை பிரித்து எடுத்துள்ளனர். அதிலிருந்து கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களை  உருவாக்கி உள்ளனர். இரும்புத் தாது இப்பகுதியில் அதிக அளவில் கிடைத்திருக்கலாம். 

சுடுமண்ணால் செய்யப்பட்ட இரும்பு உருக்கு ஆலையின் உடைந்த பகுதிகள், இரும்பு தாது பொருள்கள் மற்றும் கழிவுப்பொருள்கள்


மேலும் சங்ககாலப் பானை ஓடுகள் என அழைக்கப்படும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் இங்கு கிடைப்பதால் இரும்பு உருக்காலை சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
இரும்புத் தாதுவில் இருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் அறிந்த பின்பு, இரும்பை தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் இரும்புத் தொழில் சிறப்புற்று இருந்ததை அகநானூறு, புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை தெரிவிக்கின்றன. இரும்புத் தாதுவிலிருந்து இரும்பை உருக்கி எடுக்கும் சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைக்களங்கள் நிலத்திற்கு மேல் உருவாக்கப்பட்டிருக்கும். அத்தகைய இரும்பு உருக்கு ஆலையின் பகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைப்பது இதுவே முதல்முறை.

தாமரைப்பூ குறியீடு 

 தடித்த கருப்பு சிவப்பு பானை ஓடு ஒன்றின் விளிம்புப் பகுதியில் தாமரைப்பூ போன்ற குறியீடு காணப்படுகிறது. மட்கலயங்களை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்களது உடைமை எனக் குறிக்க குறி இடுவதுண்டு. இவற்றை உடைமைக்குறி என்பர். தற்காலத்திலும் பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தாமரைப்பூ குறியீடு உள்ள கருப்பு சிவப்பு நிற பானை ஓடு

தாய்த் தெய்வ உருவம்


அதேபோல் தலை உடைந்த நிலையில் உள்ள சுடுமண்ணால் செய்யப்பட்ட அரைவட்ட வடிவத்தில் சிறிய அளவிலான பெண் உருவம் இங்கு கிடைத்துள்ளது. இது தாய் தெய்வமாக இருக்கலாம். இவ்வுருவம் மேலாடையின்றி இடுப்பில் ஆடை அணிந்து கையை விரித்து அமர்ந்த  நிலையில் உள்ளது. இத்தகைய சுடுமண் சிற்பங்கள் வீட்டு வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம்.


சுடுமண்ணால் செய்யப்பட்ட தாய்த் தெய்வ உருவம்


கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி

சுடுமண்ணால் செய்யப்பட்ட கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி இங்கு கிடைத்துள்ளது. இதன் தலைப்பகுதியில் தாமரை இதழ் போன்ற அமைப்புடன் நடுவில் துவாரமும் உள்ளது. இதை தயாரித்து சுடுவதற்கு முன் பானை அல்லது குடுவையின் உடல் பகுதியில் பொருத்தியுள்ளனர். சங்ககாலம் முதல் கெண்டிகள் செய்து பயன்படுத்த தமிழர்கள் அறிந்திருந்தார்கள். 

கெண்டியின் மூக்குப்பகுதி


பாண்டியர் ஆட்சிக்காலத்தில் அளற்று நாடு என அழைக்கப்பட்ட பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள திருமாலுகந்தான் கோட்டையில்  பாண்டிய மன்னர்களால்  கட்டப்பட்ட 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செஞ்சடைநாத ஈசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலில்  பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 21 கல்வெட்டுக்கள் உள்ளன என்பது  குறிப்பிடத்தகுந்தது. 
பல்லாங்குறிச்சி கண்மாய்


மேலும் பானை ஓடுகள் காணப்படும் கண்மாய், பல்லாங்குறிச்சி கண்மாய் என அழைக்கப்பட்டாலும் பல்லாங்குறிச்சி என்ற பெயரில் ஊர் எதுவும் அப்பகுதியில் இல்லை. எனவே பல்லாங்குறிச்சி என்ற பெயரில் அந்த இடத்தில் ஒரு ஊர் இருந்து பின் அது அழிந்து போயிருந்திருக்கலாம்.

கறுப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைத்த பகுதி

இங்கு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் இவ்வூரின் வரலாறை முழுமையாக வெளிக்கொணரலாம். 
பழம்பெருமை வாய்ந்த கொக்கரசன்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி


நாளிதழ் செய்திகள்

'தி இந்து'

Link

சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை: வரலாற்றை வெளிக்கொணர அகழாய்வு செய்ய கோரிக்கை - தி இந்து 

 

'தினத்தந்தி'