Pages

Friday 31 May 2019

வட்டெழுத்தில் அசத்தும் அரசுப்பள்ளி மாணவி கோகிலா




வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், பாதுகாக்கவும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010ஆம் ஆண்டு முதல் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளபச்சேரியைச் சேர்ந்த ரா.கோகிலா என்ற மாணவி தமிழி எழுத்துகளோடு, வட்டெழுத்துகளையும் சரளமாக எழுதவும், பிற மாணவர்களுக்கு சொல்லித் தரவும் அறிந்துள்ளார். இவருடைய தந்தை ராமையா, தாயார் ராமு இருவரும் கூலி வேலை செய்கிறார்கள்.
 
இம்மாணவி பற்றிய சிறப்புச் செய்தி மதுரை தினமலர், சேலம் தினமலர், குங்குமம் தோழி, தினமணி மகளிர் மணியில் வந்தது.





திருப்புல்லாணி கோயிலில் புதைந்திருந்த பாண்டியர் காலக் கல்வெட்டுகள்


 ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் புதைந்த நிலையில் இருந்த கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில கல்வெட்டுகளை திருப்புல்லாணி அரசுப்பள்ளி  மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபிஷேக ராமர் சந்நிதியின் தெற்கு வெளிப்புறச் சுவர், மூன்றாம் பிரகாரம் ஆகிய இடங்களில் சுவரின் அடிப்பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்வெட்டுகள் இருந்ததை திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்தனர். இவை கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் ஆகும்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தொன்மைப்பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளருமான வே.ராஜகுரு கூறியதாவது,
இவை அனைத்தும் துண்டுக்கல்வெட்டுகள் ஆகும். இதில் ஒன்று கோனேரி மேல் கொண்டான் எனும் அரசாணைக் கல்வெட்டு. மூன்று கல்வெட்டுகளில் உலகமுழுதுமுடையார் என்பவர் பெயர் உள்ளது. அவர் வீரபாண்டியன் சந்தி, சதயத் திருநாள், தேவதானம் ஆகியவற்றிற்காக நிலங்களை இக்கோயிலுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.
திருப்புல்லாணி கோயிலில் வீரபாண்டியன் சந்தி எனும் ஒரு பூசைக்கட்டளையை உருவாக்கி அதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டு அமுதகுணமங்கலம் என்ற ஊரை அவர் தானமாகக் கொடுத்துள்ளார். உலகு சிந்தாமணி வளநாடு என்பது சாயல்குடி பகுதி ஆகும். சாயல்குடி அருகில் உள்ள திருமாலுகந்தான்கோட்டை சிவன்கோயில் கல்வெட்டுகளில் அவ்வூர் பெயர் அமுதகுணமங்கலம் எனவும், அளற்றுநாட்டில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்கல்வெட்டில் அவ்வூர் உலகு சிந்தாமணி வளநாட்டைச் சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இக்கோயிலில் சதயத்திருநாள் கொண்டாடுவதற்கு வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருட்களுக்காக, நீர் சூழ்ந்த நிலமும், கருஞ்செய்யும் நீக்கி மீதமுள்ள நிலத்தை இவர் தானமாக வழங்கிய செய்தி ஒரு கல்வெட்டில் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட ஊர்ப் பெயர் அதில் இல்லை.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டில், இக்கோயில் பூஜைக்கு வேண்டிய நிமந்தங்களுக்கு வரி நீக்கப்பட்ட நிலத்தை இவர் தேவதானமாக வழங்கியுள்ளதை அறியமுடிகிறது.
இக்கல்வெட்டுகளில் சொல்லப்படும் உலகமுழுதுமுடையார் என்பவர் கி.பி.1253 முதல் கி.பி.1283 வரை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் பட்டத்தரசி ஆவார். மன்னன் நலமாக வாழ அவன் பெயரில் ஒரு சந்தியும், அவன் சதயநட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால் அதை சதயத்திருநாளாக கொண்டாடவும் தேவையான தானங்களை இக்கோயிலுக்கு அவர் வழங்கியுள்ளார். எனவே இதில் உள்ள சில கல்வெட்டுகள் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது.
அந்தராயம், வினியோகம், தறி இறை, தட்டளிப்பாட்டம், செக்கிறை, அச்சு ஆகிய வரிகள் இக்கல்வெட்டுகளில் சொல்லப்படுகிறது.  திருமலை ரகுநாத சேதுபதி காலத்தில் இக்கோயிலின் பல பகுதிகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாக தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது. அச்சமயத்தில் கோயில் மறுகட்டுமானத்தின்போது பல கல்வெட்டுகள் இடம் மாறியிருக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.
வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணிதஆசிரியர் கு.முனியசாமி, ராமநாதபுரம்  சாந்தக்குமார், திருப்புல்லாணி தொன்மைப்பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மு.விசாலி, .பிரவீணா, து.மனோஜ், ஜெ.தர்ஷினி ஆகியோர் கல்வெட்டு படியெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.





திருவாடானை அருகே திருத்தேர்வளையில் திறந்தவெளியில் கிடக்கும் கற்குவியலில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருத்தேர்வளையில் திறந்தவெளியில் கிடக்கும் கற்குவியலில் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவாடானை அருகே திருத்தேர்வளையில் சேதமடைந்த நிலையில் இருந்த பழமையான சிவன் கோயிலை முழுவதுமாக அகற்றிவிட்டு புதியதாகக் கோயில் கட்டி வருகிறார்கள். அகற்றப்பட்ட கோயில் கற்கள், தூண்கள் கோயிலைச் சுற்றி  போடப்பட்டுள்ளன. இதில் கல்வெட்டுகள் எதுவும் உள்ளதா என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலின் தெற்குப் பகுதியில் கிடந்த கல்குவியலில் இருந்து பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு துண்டுக் கல்வெட்டை அவர்கள்  கண்டுபிடித்து படி எடுத்தனர். 

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள பழைய கோயில் விமானத்தின் அதிட்டானப்பகுதியின் முப்பட்டைக் குமுதத்தில் இக்கல்வெட்டு இருந்துள்ளது. இதில் மன்னர் பெயர் இல்லை. அவரின் 13வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வூர் திருக்கானபேர்க்கூற்றம் (காளையார்கோவில்) எனும் நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது. இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கப்பட்ட தகவலைச் சொல்லும் கல்வெட்டாக இது உள்ளது.
திருத்தேர்வளை கோயில் இறைவனுக்கு வழங்கப்பட்ட இத்தானத்தைக் காத்தவன் புண்ணியம் பெறக்கடவான் எனவும், இவர்களின் ஸ்ரீபாதங்கள் திருத்தேர்வளை இறைவனால் காத்து ரட்சிக்கப்பட வேணும் எனவும், இதுக்கு விரோதம் பண்ணினால் மஹாதோஷத்தில் போவார் எனவும் சொல்கிறது. கல்வெட்டின் இப்பகுதியை ஓம்படைக்கிளவி என்பர்

இவ்வூர் அருகில் உள்ள ஆனந்தூர் சிவன்கோயிலில் கி.பி.1323 ஆம் ஆண்டைச் சேர்ந்த சடையவர்மன் பராக்கிரமபாண்டியன் கல்வெட்டு உள்ளது. அதே எழுத்தமைதியில் இக்கல்வெட்டும் உள்ளது. எனவே இதுவும் கி.பி.14 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது எனலாம். மேலும் ஆனந்தூர் கல்வெட்டில் திருத்தேர்வளையைச் சேர்ந்த வணக்குச் செட்டியார் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது

பல நூறு ஆண்டுகள் பழமையான மன்னர் காலத்துக் கோயில்களை  அகற்றிவிட்டு சிமெண்டு மூலம் புதிய கோயில்கள் கட்டுகிறார்கள். சுண்ணாம்பு, செங்கல், கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இக்கோயில்கள் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நின்றவை. இக்காலத்தில் சிமெண்டால் கட்டப்படும் கட்டடங்கள் நூறு ஆண்டுகள் கூட தாங்குவதில்லை. எனவே பழைய கோயில்கள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அதன் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படவேண்டும். திறந்தவெளியில் கிடக்கும் இத்தகைய வரலாற்றுச் சாசனங்களை அரசும், மக்களும் பாதுகாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.