Pages

Friday 31 May 2019

நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு மரபு நடை நிகழ்வில் தகவல்



ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் உலகம்மன் கோயிலில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இக்கோயிலுக்கு தானம் வழங்கி கையொப்பமிட்டுள்ள பலபேரில் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறி ஒருவரும் உள்ளதை அறியமுடிகிறது என மரபு நடை நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.


ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. பத்தாம் மரபுநடை நிகழ்வு நரிப்பையூர் மற்றும் வேம்பாரில் 18.11.2018 அன்று நடந்தது. மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது,

நரிப்பையூர் என்பதற்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்பது பொருள். கல்வெட்டில் சாயல்குடி பகுதி உலகுசிந்தாமணி வளநாட்டுப் பகுதியில் இருந்தாக குறிக்கப்பட்டுள்ளது. இவ்வளநாடு மேலக்கிடாரம் வரை இருந்துள்ளது. எனவே நரிப்பையூர் பகுதியும் இவ்வளநாட்டுப் பகுதியில் இருந்தாகக் கொள்ளலாம்

கணவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துபோன மனைவிக்கு அமைக்கப்பட்ட  கோயில் மாலைக்கோயில் எனப்படுகிறது. இதை மாலையீடு, மாலையடி, தீப்பாய்ஞ்சஅம்மன் கோயில், மாலைக்காரி, சீலைக்காரி அம்மன் கோயில் என்றும் அழைப்பர். நரிப்பையூரில் நான்குகால் மண்டபம் போன்ற அமைப்பில் மூன்று மாலைக்கோயில்கள் உள்ளன. இவை கடற்கரை மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ளன. தெற்கு நரிப்பையூரில் முஸ்லிம் கபர்ஸ்தான் உள்ளே சுமார் 500 ஆண்டு பழமையான முஸ்லிம் பள்ளிவாசல் உள்ளது. மண்டபம் போன்ற அமைப்பில் காணப்படும் இப்பள்ளிவாசலில் தொழும் மாடம், அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவை உள்ளன. இதன்மேல் மினார் எதுவும் கட்டப்படவில்லை. எனவே இதை மொட்டைப் பள்ளிவாசல் என அழைக்கிறார்கள். தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் ஒன்றும், வெட்டுக்காடு பகுதியில் ஒன்றும் என இரு பாண்டியர் கால சிவன் கோயில்கள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன.

குதிரைமொழி பகுதியில் எட்டுக்கைகளுடன் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள உலகம்மன் (காளி) கோயில் உள்ளது. மேற்கூரை இல்லாத இக்கோயில் வெளிப்புறச் சுவர்களில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில்  அழிந்தநிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இக்கோயிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டாக இருக்கலாம். இக்கல்வெட்டில் கமுதி அருகிலுள்ள எருமைகுளம், கடலாடி அருகிலுள்ள ஆப்பனூர் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாற்பத்தெண்ணா மரப்படி, பூப்பலகை, நல்லூர்குளத்தில், ஆண்டபிரான், அழகிய பாண்டிய, செந்தாங்கி ஆகிய சொற்கள் இதில் காணப்படுகின்றன.  பலபேர் கையொப்பமிட்டுள்ள இதில் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறி ஒருவரும் உள்ளார்.

அதேபோல் பிழைபொறுத்தம்மன் குடியிருப்பு பகுதியிலும் எட்டுக்கைகளையுடைய காளி கோயில் உள்ளது. கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இதை பிழைபொறுத்தம்மன் என்கிறார்கள். மதுரை ஐராவதநல்லூரில் இதே சிலை போன்று அச்சு அசலாய் ஒரு சிலை உள்ளது. இரு சிலைகளும் மதுரையில்  ஒரே இடத்தில் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.  மதுரைக்கும், நரிப்பையூருக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறிய முடிகிறது. இக்காளி சிலையின் முன்பு மணிப்பூவந்தி என்ற மரம் உள்ளது. பேச்சு வழக்கில் பூந்திக் கொட்டை எனப்படும் இதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு ஷாம்புவாக பயன்படுத்தலாம். இம்மரத்தில் ஏற்பட்டுள்ள பொந்து ஆகியவற்றைக் கொண்டு இது 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனலாம். இம்மரத்தின் கீழே விழும் விதைகள் எதுவும் முளைப்பதில்லை.

இங்கு மணக்காட்டு ஐயனார், செவக்காட்டு ஐயனார் என இரு ஐயனார் கோயில்கள் உள்ளன. மணக்காட்டு ஐயனார் கோயில் கடற்கரை அருகிலும், செவக்காட்டு ஐயனார் கோயில் தரவை அருகில் செம்மண் காட்டுப்பகுதியிலும் உள்ளன. மண்ணால் செய்யப்பட்ட ஐயனார் மற்றும் குதிரை சிலைகளே இங்கு வழிபாட்டில் உள்ளன. செவக்காட்டு ஐயனார் கோயில் பகுதியில் 15க்கும் மேற்பட்ட உகாய் எனப்படும் மிஸ்வாக் மரங்கள் உள்ளன இவ்வாறு அவர் பேசினார். பின்பு வேம்பாரில் உள்ள சர்ப்பமடம், மாலைக்கோயில், அழிந்துபோன சிவன் கோயில் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார். நரிப்பையூர் பற்றிய சிறு நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வரலாற்றுச் சிறப்புகளை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்






No comments:

Post a Comment