Pages

Friday 31 May 2019

சுந்தரபாண்டியன்பட்டினத்தில் சோழர் கால உறைகிணறு கண்டுபிடிப்பு இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சுந்தரபாண்டியன்பட்டினத்தில் (எஸ்.பி.பட்டினம்)  11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சுடுமண் உறைகிணறு, சீன நாட்டுப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  (21.02.2019)

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு,  இப்பள்ளி பழைய மாணவியும் இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மாணவியுமான வே.சிவரஞ்சனி, தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி மு.விசாலி, 9 ஆம் வகுப்பு மாணவன் மு.சுதர்ஸன், 7 ஆம் வகுப்பு மாணவன் து.மனோஜ் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன்பட்டினம் ஐயாகுளத்தின் கரையில் சோழர் கால சுடுமண் உறைகிணறு, சீனநாட்டு பானை ஓடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். 

இதுபற்றிய விவரம்

சுடுமண் உறைகிணறு

இவ்வூர் சிவன் கோயிலின் எதிரில் உள்ள ஐயாகுளத்தின் கிழக்குக் கரையில் மண்ணில் புதைந்தநிலையில் ஒரு  சுடுமண் உறைகிணறு உள்ளது. உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது,  செருகுவது என உறைகிணறுகளில் இருவகைகள் உண்டு. இங்குள்ள கிணறு ஒரே அளவுள்ள இரு வட்டமான சுடுமண் உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி அதன் இடையில் களிமண்ணால் பூசப்பட்டுள்ளது.


7 அடி சுற்றளவில் இக்கிணறு உள்ளது. இதன் உறைகள் ஒவ்வொன்றும் 15 செ.மீ. உயரம் உள்ளன. உறையை பொருத்தி அடுக்குவதற்கு ஏதுவாக அதன் மேல், கீழ்ப்பகுதிகள் உள்ளே நீண்டு உள்ளன.

இக்குளத்தின் வடக்கில்  மரைக்காயர் குளம் உள்ளது. இக்குளம் நிரம்பிய பின் அதன் உபரி நீர் ஐயாகுளத்துக்கு வருவதற்வாக நான்கு சுடுமண் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் செங்கல் கட்டுமானம் உள்ளது. இந்த இரு குளங்களும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். குளத்தில் தண்ணீர் வற்றிய காலங்களில் பயன்படுத்துவதற்காக இக்கிணறு தோண்டப்பட்டிருக்கலாம். இக்குளங்களின் மிகஅருகில் பாம்பாறும், உப்பங்கழியும் உள்ளன. இவ்வூரில் காணப்படும் சோழர் காலத் தடயங்கள் மூலம் இந்த உறைகிணறு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

சீனநாட்டுப்பானை ஓடுகள்

ஐயாகுளத்தின் கரையில் சீனநாட்டுப் பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத்தாதுக்கள், சுடுமண் கூரை ஓடுகள், வட்டச் சில்லுகள், அறுத்த சங்கு  ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐயாகுளத்தை அகலப்படுத்தியபோது இந்த ஓடுகள் வெளிப்பட்டிருக்கலாம்.

சீனநாட்டுப் பானை ஓடுகளில் போர்சலைன் (Porcelain), செலடன் (Celadon)   என இருவகைகள் உள்ளன. இந்த இருவகை ஓடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. போர்சலைன் என்பது வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்பட்டு அதன்  மேல் கோடுகள், பூக்கள், வளைவுகள், இலை வடிவங்கள் ஆகியவற்றை வரைந்து பின் உப்புப்பூச்சு மூலம் பளபளப்பாக்கப்படுகிறது. இதில் சிறிய வகை மட்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. கிண்ணம், குடுவை போன்றவற்றின் அடிப்பகுதிகள் இங்கு கிடைத்துள்ளன.


பாசிநிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மட்பாண்டங்களில் பச்சை, இளம்பச்சை, சாம்பல், பழுப்பு நிறங்கள் உண்டு. சேமித்து வைக்கும் பெரிய பாத்திரங்கள் இதில் செய்யப்படுகின்றன. நான்கு நிறங்களிலும் இங்கு ஓடுகள் கிடைத்துள்ளன.

ஐயாகுளத்தின் கரையில் அதிகளவில் இந்த ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாலும், பௌத்தமத தடயங்கள் இப்பகுதியில் காணப்படுவதாலும் இவ்வூரில் சீனர்களின் குடியிருப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது. சீனர்கள் பௌத்தமதம் மற்றும் வணிகம் சார்பாக இவ்வூருக்கு வந்திருக்கலாம்.  சோழர்களுடன் கி.பி.10 ஆம் நூற்றாண்டு முதல் சீனர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக நகரம்

இங்குள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. புரம் எனும் சொல் வணிக நகரத்தைக் குறிக்கும். சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழில் இங்கு நடைபெற்றிருக்கலாம்.

இவ்வூரின் பழைய பெயர் சுத்தவல்லி. இது முதலாம் குலோத்துங்கசோழனின் மகள் சுத்தமல்லியாழ்வார் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. பாண்டியநாட்டின் எல்லையான இப்பகுதி சோழர்களிடமே பெரும்பாலும் இருந்துள்ளது. இதைக் கைப்பற்றியபின் முதலாம் சுந்தரபாண்டியன் தனது பெயரை இவ்வூருக்குச் சூட்டியுள்ளான். 

இவ்வூருக்கு மிக அருகில் உள்ள தீர்த்தாண்டதானமும் ஒரு வணிக நகரம் தான். இவ்வூரின் இரட்டை நகரமாக உள்ள சோழகன்பேட்டையும் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட வணிக நகரமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள இயற்கையான உப்பங்கழிகளால் இவை  துறைமுகங்களாக விளங்கியுள்ளன. கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இவ்வூர் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. No comments:

Post a Comment