ராமநாதபுரம் தொல்லியல்
ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபு நடை நிகழ்வை நடத்தி வருகிறது. 11வது மரபுநடை நிகழ்வு தேவிபட்டினம் அருகே திருப்பாலைக்குடியில் நடந்தது. ஆய்வு நிறுவனத்தின் செயலாளர்
ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது,
இவ்வூர் பேருந்து நிறுத்தம் பகுதி பழங்கோட்டை என அழைக்கப்படுகிறது. இங்கு பழமையான கோட்டை இருந்து அழிந்திருக்கலாம். மந்தணார் கோயில் பகுதியில் மந்திரநாதசுவாமி கோயில் உள்ளது.
கருவறை, அர்த்தமண்டபம்,
மகாமண்டபம், முன்மண்டபம், நந்தி மண்டபம் என்ற அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. விமானத்தின் மேல்பகுதியில் மட்டும் செங்கல் கட்டுமானம் உள்ளது. பிற பகுதிகளில் கருங்கற்கள் மற்றும் மணற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கற்றளியாக
விளங்குகிறது. சதுரமாகத் தொடங்கும் விமானத்தின் கீழ்ப்பகுதி மேலே
செல்லச்செல்ல வட்டமாகக் குறுகி உள்ளது. இது தஞ்சை பெரியகோயில்
விமானம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல்பகுதி கூடு
போன்று வெற்றிடமாக பிரமிடு அமைப்பில் உள்ளது. உபபீடம்
6அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் கோயில் பெரியதாகக் காட்சியளிக்கிறது.
கோயில் தலவிருட்சமாக பல நூற்றாண்டுகள் பழமையான வன்னிமரம் உள்ளது. லிங்கம் சதுரவடிவ ஆவுடையாருடன் உள்ளது. மகாமண்டபத்தின்
உள்பகுதியில் எண்கோணச் சதுரத்தூண்கள் உள்ளன. கோயில் அமைப்பு போன்றவற்றைக் கொண்டு இக்கோயில் கி.பி.11ஆம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் கட்டப்பட்டு தொடர்ந்து பாண்டியர்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கலாம்.
சிவன் கோயிலின் தெற்கே அம்மனுக்கு தனியாக ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இது இடிந்த நிலையில் உள்ளதால் சிவன் கோயிலில் அம்மனுக்கு ஒரு
சிறிய சந்நிதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் உள்ள
அய்யனார் கோயில் பகுதியில் இடைக்காலப் பானைஓடுகள், போர்சலின்
வகை சீனப்பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
மத்திய தொல்லியல் துறை 1928இல் இக்கோயிலில் இருந்த மூன்று கல்வெட்டுகளைப் படி எடுத்துள்ளது. கி.பி1281ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டில், மருதூர் என்ற மானாபரணபட்டினத்தைச் சேர்ந்த அம்பிசோறன் என்ற திருவாசகன்,
இக்கோயிலில் ஆளுடைபிள்ளையார் திரு
உருவத்தை அமைத்து அதன் வழிபாட்டுக்குரிய பணத்தைக் கொடையாக வழங்கியுள்ளதைத் தெரிவிக்கிறது.
ஆளுடைபிள்ளையார் என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கும். மேலும் மருதூர், மானாபரணபட்டினம்
என்பது இந்த ஊரின் வேறு பெயர்களாக இருக்கலாம்.
கி.பி.1219
ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கல்வெட்டில், அபிமானராமன் என்ற இக்கோயில் இறைவனுக்கு, சூர்யசக்கரவர்த்தி என்பவர் ஒரு ஊரைத்
தானமாக வழங்கியுள்ளார்.
அபிமானராமன் என்பது மன்னனின் பெயராக இருக்கலாம். பின்பு அது மந்திரநாதசுவாமி என
மாறியுள்ளது. தானம் வழங்கிய சூர்யசக்கரவர்த்தி
முதலாம்
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தளபதியான ஆரியச்சக்கரவர்த்தியின் உறவினராக இருக்கலாம்.
இவ்வூர் செவ்விருக்கை நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. பாலை மரங்கள் நிறைந்த குடியிருப்பு எனும் பொருளில் திருப்பாலைக்குடி என பெயர் பெற்றுள்ளது. ஊரின் பெயரால் பாலையம்மன் எனும் ஒரு காளி கோயில் இங்கு உள்ளது. வடக்கு நோக்கி எட்டுக்கைகளுடன் அமர்ந்த
நிலையில் உள்ள பாலையம்மனின் ஜுவாலா மகுடத்தில் திரிசூலக்குறி உள்ளது.
உப்பங்கழிகள் இயற்கைத் துறைமுகங்களை உருவாக்குகின்றன. இவ்வூரின் தெற்கில் அலையாத்திக் காடுகள் நிறைந்த ஒரு உப்பங்கழி உள்ளது. இவ்வூரும் ஒரு இயற்கைத் துறைமுகமாக இருந்திருக்கலாம். முன்னோர்கள் கட்டிய இக்கோயில்கள் பண்பாட்டையும், கலைகளையும் வளர்த்தன. அவற்றை நாம் பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர்
நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை
மரபு நடை அமைப்பாளர் பொறியாளர் அரியநாயகம், ஆசிரியர்கள் சுதர்சன், சந்தியா செய்தனர். தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் உள்ளிட்ட மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment