Pages

Friday, 13 January 2012

கீழக்குயில்குடி சமணர்மலை

மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டைக்கு எதிரே செல்லும் சாலையில் பயணித்தால் கீழக்குயில்குடி என்ற சிறிய கிராமம் வருகிறது. அந்த ஊர் செல்லும் வழியில் சமணர் மலை என அழைக்கப்படும் பெரிய குன்று ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் பெரிய தாமரைக்குளமும் அய்யனார் கோவிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளன.
சமண மதம் ஒரு காலத்தில் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. சமண அறிஞர்கள் பலர் தமிழுக்கு தொண்டாற்றி இருக்கிறார்கள். கீழக்குயில்குடி சமண மலையிலும் சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். சமணர்கள் வருகைக்கு முன் இந்த மலை திருவுருகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 
KEELA KUYILKUDI HILLOCK

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் ஆதரவோடு சமண சமயம் செழித்திருந்தது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது போல் மன்னர்களின் ஆதரவு பெற்ற சமணர்களுக்கு, மக்களும், செல்வாக்கு மிக்கவர்களும் உதவினார்கள். உறைவிடம் அமைத்துக் கொடுத்தார்கள்.

Thursday, 5 January 2012

முதுமக்கள் தாழி


 
o  பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகைத் தாழிகளையே முதுமக்கள் தாழி என்கிறோம்.

o  குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் புறம்(228) கலம் செய்  கோவே‘ என்று  முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது.  

o  முதுமக்கள் தாழியின் காலம் பெருங்கற்காலம். பெருங்கற்காலம் கி.மு.1000 லிருந்து கி.மு. 3000  வரையிலான காலத்தைச் சேர்ந்தது.

o  தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

o  இங்கு  கண்டுபிடிக்கப்பட்ட தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்தினாலான நெற்றிப்பட்டம், செம்பினால் ஆன ஆண்,பெண் தெய்வ உருவங்கள், மற்றும் இரும்பினாலான கத்திகள், விளக்குத் தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன. 

 

குமரிக் கண்டம்


கண்டம் பெயர்ச்சிக் கொள்கையின்படி எல்லாக்கண்டங்களும் ஒன்றாக ஓட்டிக்கொண்டிருந்ததை பாஞ்சியா என்பர். அதன் ஒருபகுதி கோண்டுவானா நிலம். கோண்டுவானாவின் ஒரு துண்டு தனியாகப் பிரிந்து ஆஸ்திரேலியாக் கண்டத்திலிருந்து பிரிந்து மெல்ல நகர்ந்து வந்து கொண்டேயிருந்தது.
              இப்பகுதியே விந்திய மலைக்குக் கீழுள்ள தென்னிந்தியப் பகுதி. இந்துமாக்கடலில் தனியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போதுதான் அதனைக் குமரிக்கண்டம் என்றனர். அதுவே மேலும் நகர்ந்து ஆசியப்பகுதியில் முட்டியது.  இந்த முட்டலின் அழுத்தத்தாலேயே, இமயமலை தோன்றி படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்து பெரிய மலைத் தொடராகிவிட்டது.  
குஜராத் பகுதியில் டயனோசரஸ் கற்படிவங்களும் (fossils) அதன் முட்டைகளின் கற்படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் திருவக்கரைப் பகுதியிலும், அரியலூர்ப் பகுதியிலும் கல்லாகிப் போன மரங்கள் கிடைத்துள்ளன. இவை பழமையின் அடையாளங்கள். இந்நிலத்தின் ஓரம் பாரத்தில் இருந்த மிகச் சிறிய பகுதிகள் அவ்வப்போது கடலுக்குள் சரிந்து விழுந்தபோது அவ்வக்காலம் புலவர்களால் கடல்கோள் என விளக்கப்பட்டது. 
        பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
         குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

என சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. 
      குமரிக் கண்டம் கடலுள் மூழ்கவில்லை. விந்திய மலை உள்ளிட்ட தீபகற்ப இந்தியா ஆசியாவோடு மோதுவதற்கு முன்னிருந்த தீவு நிலையே குமரிக் கண்டம் ஆகும்.

Monday, 2 January 2012

கழுகுமலையில் பயிற்சி முகாம்

திருப்புல்லாணி எஸ்.எஸ்.எ.எம். அரசு மேல் நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் மூலம்  பாரம்பரியம் குறித்த பயிற்சி முகாம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நடைபெற்றது. மன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு கழுகுமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
      கழுகுமலையில் பாறையைக்குடைந்து அமைக்கப்பட்டுள்ள முருகன் கோயில், விஜய நகர மன்னர்களால் தெப்பக்குளத்துடன் மேம்படுத்தப்படுத்தப்பட்டதை மாணவர்கள் நேரில் கண்டறிந்தனர்.
      மலையின் கிழக்குப்புறம் உள்ள வெட்டுவான் கோயில் பாண்டியர் கால குடைவரைக்கோயில் கலைப்பணிக்குச் சான்றாக உள்ளது. இது எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்று ஒற்றைக் கற்கோயிலாகும்‍‌. எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இக்கோயில் சிற்ப வேலைப்பாடு நிறைந்தாக உள்ளது.
      மேற்குப்புற மலையின் சரிவில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ள சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. இங்கு சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோர் நினைவாக சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர். 
       மன்ற பொறுப்பாசிரியர் இராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் இராஜாமணி ஆகியோர் பயிற்சிக்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாணவர்கள் கழுகுமலை பற்றிய குறிப்புகளை பதிவு செய்துகொண்டனர்.
KALUGUMALAI 1

KALUGUMALAI 2