Pages

Friday 13 January 2012

கீழக்குயில்குடி சமணர்மலை

மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டைக்கு எதிரே செல்லும் சாலையில் பயணித்தால் கீழக்குயில்குடி என்ற சிறிய கிராமம் வருகிறது. அந்த ஊர் செல்லும் வழியில் சமணர் மலை என அழைக்கப்படும் பெரிய குன்று ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் பெரிய தாமரைக்குளமும் அய்யனார் கோவிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளன.
சமண மதம் ஒரு காலத்தில் பெரும் செல்வாக்கோடு விளங்கியது. சமண அறிஞர்கள் பலர் தமிழுக்கு தொண்டாற்றி இருக்கிறார்கள். கீழக்குயில்குடி சமண மலையிலும் சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். சமணர்கள் வருகைக்கு முன் இந்த மலை திருவுருகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 
KEELA KUYILKUDI HILLOCK

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் ஆதரவோடு சமண சமயம் செழித்திருந்தது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது போல் மன்னர்களின் ஆதரவு பெற்ற சமணர்களுக்கு, மக்களும், செல்வாக்கு மிக்கவர்களும் உதவினார்கள். உறைவிடம் அமைத்துக் கொடுத்தார்கள்.
தீர்த்தங்கரர் என்பது சமணர் தெய்வத்தை குறிக்கும் சொல். சமண துறவிகளை திகம்பரர்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் ஆடை இல்லாமல் நிர்வாணமாக இருப்பார்கள். இவர்களைப் போலவே தீர்தங்கரரும் நிர்வாணமாகவே எல்லா சிலைகளிலும் காட்சி தருகிறார்.
சமணத்துறவிகளின் வசிப்பிடம் மலைக்குகைகள் தான். மழைக்காலங்களில் குகைகளில் தங்கிக் கொள்வார்கள். கோடை காலத்தில் மலையை விட்டு இறங்கி மக்களுக்கு சேவை செய்வார்கள். இவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். மருத்துவம், ஜோதிடம் தெரிந்தவர்கள். அதனால் மக்களின் மதிப்பை பெற்றவர்களாகவே சமணர்கள் இருந்தார்கள்.  
கீழக்குயில்குடி சமணர் மலையில் ஏறுவதற்கு வசதியாக படிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். இந்த படியில் பாதுகாப்பாக செல்வதற்கு இரும்பினால் கைப்பிடியை அமைத்துக் கொடுத்திருக்கிறது தொல்லியல் துறை. பாதி தூரம்தான் படிகள் இருக்கிறது. அதன்பின் கைப்பிடியை பிடித்துக்கொண்டுதான் பாறைகளில் ஏறிச் செல்ல வேண்டும். மலையில் ஒவ்வொரு உயரத்திலும் ஒரு தளம் உள்ளது. முதல் தளத்தில் ஒரு பெரிய சுனை உள்ளது. வருடம் முழுவதும் தண்ணீர் சுரந்தபடியே இருக்கிறது. அதன் அருகே உள்ள பாறையில் 8 சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக உள்ளன.

 
அதற்கு மேல் உள்ள தளத்தில் இடிந்த நிலையில் ஒரு கற்கோவில் இருக்கிறது. அது 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று  கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு ஒரு சமணப் பள்ளியை பாண்டிய மன்னனான பராந்தக வீர நாராயணன் அமைத்துக்கொடுத்துள்ளார். மன்னனின் மனைவி வானவன் மாதேவியின் பெயரைக் கொண்டு மாதேவி பெரும்பள்ளி என்ற பெயருடன் செயல்பட்டது. 
அழிந்த நிலையில் உள்ள பள்ளி

சங்க காலத்திற்கு பிறகு திகம்பர பிரிவைச் சேர்ந்த சமணர்கள் இங்கு வந்தனர். கி.பி.7ம் நூற்றாண்டுக்குப்பின் மாதேவி பெருப்பள்ளி மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தது. கி.பி.8ம் நூற்றாண்டுக்கு இடையில் இந்த மலை வெறும் துறவிகளில் உறைவிடமாக மட்டும் அல்லாமல் வழிபாட்டுத் தலமாகவும் மாறியது. இதனால் இல்லறத்தில் ஈடுபட்டிருந்த சமணர்களும் இங்கு வரத்தொடங்கினர். இவர்கள்தான் தீர்த்தங்கரர், இயக்கியர் உருவத்தை சிற்பங்களாக வடித்துள்ளனர். உருவ வழிபாட்டை வளர்த்தனர்.
இந்த பெரிய குன்றின் தென்மேற்கில் செட்டிப்புடவு என்ற இடம் உள்ளது. அங்கு தீர்த்தங்கரரின் சிற்பம் பெரிய அளவில் உள்ளது. காது வளர்த்து அமர்ந்த நிலையில் இருக்கும் இந்த சிற்பம் சமணர் என்று தெரியாமல் இங்குள்ள மக்கள் இதை செட்டியார் சிலை என்கின்றனர். நீளமான காது, ஒளிவட்டம், சாமரம் வீசும் இயக்கியர்கள், அசோக மரத்தின் கீழ் அமர்ந்த கோலம் என இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களிலேயே இதுதான் மிகவும் அழகானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
செட்டிபுடவு பகுதி மகாவீரர்
 
இங்கு அருகருகே இரு குகைகள் காணப்படுகின்றன. இவை  இயற்கையான குகைகள் ஆகும். இது குடைவரை கோயிலாக அமைக்க நினைத்து பின்னர் கைவிடப்பட்டதாக எண்ணத்தோன்றுகிறது.  ஒரு குகையின் கூரையில் ஐந்து சிற்பங்கள் உள்ளன. ஒரு பெண், சிங்கத்தின் மீது அமர்ந்து யானை மீது வரும் அரக்கனை எதிர்த்து போராடுவதுபோல ஒரு  சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பெண் கொற்றாகிரியா என்ற சமண பெண் தெய்வம் ஆகும்.  இப்பெண் தெய்வமும் வேறு எங்கும் அமைக்கப்படவில்லை என்பது கீழக்குயில்குடிக்கு கிடைத்த பெருமை.
செட்டிபுடவு குகை சிற்பங்கள்

சமண முனிவர்களின் வாழ்விடமாகவும், சமணர்களின் வழிபாட்டுத் தலமாகவும், சமணக்கல்லூரியகவும் விளங்கிய சமண மலை பள்ளியை  அரசர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் இருந்த நாட்டாற்றுபுரத்து நாட்டவையினரும் ஆதரித்து வந்துள்ளனர். இந்த நிலை 13 ஆம்  நூற்றாண்டு வரை நீடித்தது. அதன்பின் அரசரின் செல்வாக்கும் மக்களின் ஆதரவும் இழந்ததால் இந்த சமணப்பள்ளி படிப்படியாக தன் செல்வாக்கை இழந்து வீழ்ச்சியுற்றது.
இன்றைக்கு இருக்கும் கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்குமே முன்னோடி சமணப்பள்ளிகள்தான். சமணத்துறவிகள் குரவர் என்றும் குரவடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பெண் துறவிகள் குரத்தியார் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களின் சீடர்கள் ஆணாக இருப்பின் மாணாக்கர் என்றும் பெண் எனில் மாணாத்தியர்  என்றும் அழைக்கப்பட்டனர்.
செட்டிபுடவு குகை சிற்பங்கள்

நமது சிந்தனைக்கு
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 100 ஆண்டுகள் கடந்த வீடு, அலுவலக கட்டிடம் என்று எதுவாக இருந்தாலும் அதை பாரம்பரிய மிக்கதாக அறிவித்து  விடுகிறார்கள். அவற்றை வீட்டு உரிமையாளர்கள் கூட இடித்துவிட முடியாது. இடித்து கட்ட அனுமதி பெற வேண்டும். நாம்  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டவர்களாக இருக்கிறோம். நம்மிடம் அழியாத பாரம்பரிய சின்னங்கள் நிறைய இருக்கின்றன.
தினத்தந்தியில் கீழக்குயில்குடி பற்றி வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு அதைக்காணும் ஆவலில் அங்கு சென்றபோது, நமது மக்கள் பாரம்பரியமிக்க இடங்களுக்குத் தரும் முக்கியத்துவம் என்னை வேதனைப்பட வைத்தது. மலையின் தென்மேற்கு பகுதியில் தீர்த்தங்கரரின் மிக பெரிய சிற்பம் இருந்த குகையின் உள்ளே ஒரு குடிமகன் உறங்கிக்கொண்டு இருந்தார். மலையின் பல இடங்களிலும் கற்களைக்கொண்டும், பெயிண்டு கொண்டும் தங்கள் பெயர்களை எழுதி வைத்துள்ளனர்.
மலையின் அடியில் உள்ள அய்யனார் கோயிலில் போரில் உயிர் நீத்த மூன்று பேருக்கு அமைக்கப்பட்ட நடுகல் பற்றியும் இதேபோல் ஊர் முழுவதும் நடுகற்கள் காணப்படுவதாகவும் இக்கோயிலில் சந்தித்த  ஒரு பெரியவர் கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகள் இம்மலையை இவ்வூர் மக்கள் பாதுகாத்து வருவதாகவும் கூறினார்.
அவர் சமணர் மலை பற்றி கூறிய தகவல்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு கூட தெரியுமா என தெரியவில்லை. இந்திய தொல்லியல் துறையால் பாதுக்காக்கப்பட்டு வருவதாக மட்டுமே தகவல் பலகை உள்ளது. இச்சமணர் மலையின் தொன்மைச் சிறப்பு பற்றி எந்த தகவலையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
எனவே பேருக்கு பாதுகாப்பதை விட இவ்விடம் பற்றிய தகவல் பலகை வைக்க ASI யை கேட்டுக் கொள்கிறேன்.
மதுரையை சுற்றிலும் சர்வ சாதாரணமாக ஆயிரம் ஆண்டு கால கோவில்களும் சிற்பங்களும் ஏராளமாக உள்ளன. அவற்றை நாம் பார்ப்பதும் கிடையாது. பாதுகாப்பதும் கிடையாது. பாரம்பரிய மிக்க இந்த சிற்பங்கள் தான் நமது கலாச்சாரத்தின் தொன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்பவை.
எனவே நமது பாரம்பரியத்தைப் பற்றி நாம் தெரிந்து கொண்டு பிறருக்கும் சொல்வோம். அந்த இடங்களை நேரில் பார்த்து நமது இளைய தலைமுறைக்கும் சொல்வோம்.
செல்வோம்!       சொல்வோம்!!

No comments:

Post a Comment