Pages

Tuesday, 27 July 2021

வரிச்சியூர் - குன்னத்தூர் மலை - எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு - வே.சிவரஞ்சனி

 


இயற்கை வாழிடம்!
இறைவன் பூமி!!
தொல்லியல் தேடல்கள்!!!
வரிச்சியூர் - குன்னத்தூர் மலை!!!!
எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு!!!!

வே.சிவரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்
அறிமுகம்
    மதுரை மாவட்டம் வரிச்சியூர் குன்னத்தூர் மலையில் மொத்தம் 4 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அவை:
1. உதயகிரீசுவரர் குடைவரை
2. தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் உலகநாதீசுவரர் கோயில்
3. அஸ்தகிரீசுவரர் குடைவரை
4. நீலகண்டீசுவரர் குடைவரை
இதில் நீலகண்டீசுவரர் குடைவரை தவிர மற்ற 3 சின்னங்களும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளன.

அமைவிடம்
    சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ளது வரிச்சியூர். வரிச்சியூரிலிருந்து களிமங்கலம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் சாலையின் வலது பக்கம் உதயகிரீசுவரர் கோயில் குடைவரையாக அமைந்துள்ளதைக் காணலாம். அதே சாலையில் கொஞ்சம் முன்னோக்கிப் பயணித்தால் 50 மீட்டர் தூரத்தில் சுற்றுச் சுவருடன் ஒரு கோயில் அமைந்திருக்கும். அதற்குள் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் உள்ள குகையும் உலகநாதீசுவரர் என்ற சிவன் கோயிலும் அமைந்துள்ளது. அதே சாலையில் கொஞ்ச தூரம் பயணித்து வலப் பக்கம் திரும்பும் சாலையில் சென்றால் அந்த மலையின் பின்பகுதியில் அஸ்தகிரீசுவரர் என்ற சிவனுக்கான குடைவரை கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து பார்த்தால் அதன் எதிர்புறம் உள்ள மலையில் உள்ள கோயில்தான் நீலகண்டீசுவரர் கோயில்.

உதயகிரீசுவரர் குடைவரை

    மலையின் கிழக்குச் சரிவில் உதயகிரீசுவரர் எனும் பெயரில் சிவன் குடைவரை கோயில் உள்ளது. அதாவது கதிரவன் உதயமாகும் திசை நோக்கி இக்கோயில் அமைந்ததால் உதயகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் இருக்கும் சமணக்குகை இதன் மிக அருகில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில், கருவறையையும் சிறிய அர்த்த மண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறையில் உள்ள சதுர வடிவ ஆவுடை சிவலிங்கம் தனிக்கல்லாக அமைக்கப்படாமல் தாய்ப் பாறையிலேயே நடுவில் உருவாக்கப்பட்டு உள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. வலப்புற காவலர் கைகளை கட்டியபடியும் இடப்புற காவலர் கையில் கதையுடனும் உள்ளார்கள். அர்த்த மண்டபத்தின் தென் புறச் சுவரில் நின்ற நிலையிலான விநாயகரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

உலகநாதீசுவரர் கோயில், தமிழிக் கல்வெட்டுகள்

    இது உதயகிரீசுவரர் குடைவரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்குகையின் முன்பகுதியில் தொல்லியல் துறையால் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாக 'ட' வடிவில் அமைந்த ஒரு பெரிய குகைத்தளம் உள்ளது. இக்குகைத்தளத்தின் ஒரு பகுதியாக உலகநாதீசுவரர் எனும் சிவன் கோயில் உள்ளது. இங்கு சமணத் துறவிகள் வாழ்ந்தமை நிறுவும் வகையில் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. வடபுறம் உள்ள சிறு குகைத்தளத்தின் நெற்றிப் பகுதியில் ஒன்றும் (1) கிழக்கு நோக்கிய பெரிய குகைத்தளத்தில் நீர்வடி விளிம்பின் மேல் ஒன்றும் (2) கீழ் ஒன்றுமாக (3) மொத்தம் மூன்று தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு கல்வெட்டுகள் பெரிதும் சிதைந்த நிலையில் உள்ளன.


கல்வெட்டுகளின் வாசகம்:

(1). "ப(ளி)ய் கொடுபி...."
இந்த கல்வெட்டில் இப்பள்ளியை அமைத்தவரின் பெயர் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் பகுதி சிதைந்துவிட்டதால் நபரின் பெயரை அறிய இயலவில்லை.

(2). "அடா.....றை ஈதா வைக...ஒன் நூறு கலநெல்... "
அதாவது, (இப்பள்ளிக்கு) நூறு கலம் நெல் வழங்கப்பட்டதைக் கூறுகிறது. கொடை அளித்தவரின் பெயர் சிதைவுற்றுள்ளது.

(3). "இளநதன் கருஇய நல் முழஉகை"
அதாவது, இந்த சிறந்த (நல்ல) குகை இளநாதனால் குடைவிக்கப்பட்டது என்று கூறுகிறது.


இக்கல்வெட்டுகளின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு.

1. கல்வெட்டுகளிலேயே "நெல்" கொடையாக வழங்கப்பட்ட‌ செய்தியை முதன் முதலாக இங்கு உள்ள கல்வெட்டு தான் கூறுகிறது.

2. எண் - அளவு கூறும் தமிழகக் கல்வெட்டுகளிலும் இங்குள்ள கல்வெட்டே காலத்தால் முந்தியது என்பது இதன் சிறப்பு.


    மேலும் கிழக்கு நோக்கிய குகைதளத்துப் படுக்கையில் விஜயநகர அரசின் கி.பி.1505ஐச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. விசயநகரப் பெருவேந்தர் இம்மடி நரசிங்கராயரின் ஆட்சிக்காலத்தில், மதுரை மண்டலத்தின் கர்த்தராகப் பணியாற்றி வந்த வீரமாராசய்யன் என்பவன் வரிச்சியூரிலுள்ள வீரபத்திரநாயனார் கோயிலுக்கு மலைக்குடி, புளியங்குளம் போன்ற ஊர்களைத் தானமாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

அஸ்தகிரீசுவரர் குடைவரை

    அதே மலையின் மேற்குப்புறம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட முற்காலப் பாண்டியரின் அஸ்தகிரீசுவரர் குடைவரைக் கோயில் உள்ளது. கதிரவன் அஸ்தமிக்கும் மேற்குத் திசை நோக்கி இருப்பதால் இக்கோயில் இறைவன் அஸ்தகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். அமைப்பில் இந்த கோயிலானது சிறிய கருவறை, திறந்த வெளி அமைப்பில் அர்த்தமண்டபம் கொண்டுள்ளது. கருவறையில் சதுர வடிவ ஆவுடையுடன் சிவலிங்கம் அமைந்துள்ளது. கட்டுமானக் கோயில் மாதிரி வடிவம் இக்குடைவரையின் முன்பக்கச் சுவரில் கோட்டுருவமாக அமைக்கப்பட்டுள்ளது.


நீலகண்டீசுவரர் குடைவரை

    இக்கோயில் அஸ்தகிரீசுவரர் கோயிலின் எதிரே உள்ள சிறு குன்றின் சரிவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள சப்தகன்னியரின் புடைப்புச் சிற்பங்கள் தாய்ப் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளன. இது திருக்கோளக்குடி குடைவரையில் உள்ள சப்தகன்னியர் சிற்பத் தொகுதியைப் போன்று அமைந்துள்ளது. இதன் முன்புறம் கட்டுமானக் கோயில் உள்ளது. இக்கோயிலின் எதிரில் உள்ள பாறையில் ஒரு சிறிய குடைவரை அமைக்கும் முயற்சி நடந்துள்ளதை அதை குடைந்திருப்பதை பார்க்கும் போது அறியலாம். சப்தகன்னியர் சிற்பம் உள்ள கட்டுமானக் கோயிலின் சுவர்களில் முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய பிற்காலப் பாண்டிய மன்னர்கள் கல்வெட்டுகள் உள்ளன.

 'பூவின்கிழத்தி' எனத் தொடங்கும் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டில், களவழி நாடாழ்வான் அனுப்பிய ஓலையைக் காவனூர் ஊரவையினர் பெற்று நடவடிக்கை எடுத்தது குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு முழுமையாக இல்லை.

      சோணாடு கொண்டருளிய முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில், மாடாபத்தியம் குறித்தும் இறைவனுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டமை குறித்தும் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை வெட்டிய தச்சாசாரியனின் பெயர் ஒரு துண்டுக் கல்வெட்டின் இறுதியில் காணப்படுகிறது.


    சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் திருக்கோயிலில் நாள்தோறும் நடைபெறும் செலவினங்களுக்காக இறையிலியாக நிலம் வழங்கப்பட்டதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முடிவுரை

    மேலும் இவ்வூரில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் உள்ள ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:
வே.சிவரஞ்சனி

முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம்.

ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.

உதவியவை
1. தொல்லியல் துறை தகவல் பலகைகள்
2. மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் முதல் தொகுதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006.
3. தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006.

காரான் என்ற ஊருக்கு பெயர் வந்தது எப்படி?

 

இராமநாதபுரம் அருகே குளத்தூரில் குறியீடுகளுடன் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக்காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

இராமநாதபுரத்திலிருந்து நயினார்கோயில் செல்லும் சாலையில் குளத்தூர் காலனியின் கிழக்கே காரான்கோட்டை என்ற இடத்தில் பண்ணைக்குட்டை தோண்டியபோது, பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. அவ்விடத்தில்   இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் சி.பால்துரை, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சு.காவ்யா, மு.பர்ஜித், பா.தனபால், கு.ரஞ்சித் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,



பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில், கருப்பு சிவப்பு நிறத்திலான சுடுமண் தட்டுகளின் உடைந்த பகுதிகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், தானியங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட குலுமையின் தடித்த ஓடுகள், உடைந்த பானைத்தாங்கி, பானை மூடிகள், மான் கொம்புகள் மற்றும் குறியீடுகளுள்ள 3 பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதில் மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் திரிசூலம் போன்ற குறியீடு கீழடியிலும், மரியராயபுரத்திலும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘த’ எனும் தமிழி எழுத்து, சூலம் ஆகிய குறியீடுகளும் கிடைத்துள்ளன.

இங்கு கிடைத்த மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. இது கிளைகள் உள்ள உழை மானின் கொம்புகள் ஆகும். இரும்புக் கழிவுகளுடன் உடைந்த உருக்காலையின் சிறிய பகுதியும் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்காலை செயல்பட்டிருக்கலாம். கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலத்தில் காரான்கோட்டை என்ற பெயரில் ஒரு சிற்றூர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. மருத்துவக் குணமுள்ள காரான் என்ற ஒரு பாரம்பரிய நெல்லின் பெயரில் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இதேபெயரில் ரெகுநாதபுரம் அருகில் ஒரு ஊர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


நாளிதழ் செய்திகள்









தொண்டியில் இராஜராஜன் பெருவழி குறிப்பிடும் கல்வெட்டு கண்டுபிடிப்பு

 

இராமநாதபுரம் மாவட்டம்,  தொண்டி அருகிலுள்ள நம்புதாளையில் இராஜராஜசோழன் பெயரில் அமைந்த ராரா பெருவழியைக் (நெடுஞ்சாலை) குறிப்பிடும், சுமார் 800 ஆண்டுகள் பழமையான பிற்காலப் பாண்டியர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

தொண்டி அருகிலுள்ள நம்புதாளை, நம்பு ஈஸ்வரர் கோயிலில் உள்ள ஒழுங்கமைவு இல்லாத ஒரு பாறைக்கல்லின் மூன்று பக்கத்தில் கல்வெட்டு உள்ளது. இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு இக்கல்வெட்டைப் படி எடுத்து ஆய்வு செய்தார். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

‘ஸ்வஸ்திஸ்ரீ’ எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் மொத்தம் 61 வரிகள் உள்ளன. பல ஆண்டுகளாக வெட்டவெளியில் கிடந்ததால் இதன் இரு பக்கங்களில் இருந்த எழுத்துகள் பெருமளவு அழிந்துவிட்டன. கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை. இது கோனேரின்மை கொண்டான் எனும் அரசனின் ஆணையாகும். இக்கோயில் நம்புதாளையில் இருந்தாலும், கல்வெட்டில் தொண்டியான பவித்ரமாணிக்கப் பட்டினத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

அரசனின் ஆணைப்படி, கங்கைநாராயண சக்கரவத்தி மற்றும் வீரசிகதேவன் ஆகியோர், இக்கோயில் இறைவன் குலசேகர பாண்டீஸ்வரமுடையார்க்கு, உள்ளூரில் விதிக்கப்படும் அந்தராயம், விளைச்சலுக்கு தக்கவாறு அரசுக்கு செலுத்தவேண்டிய கடமை, பொது செலவுக்காக விதிக்கும் வினியோகம் ஆகிய வரிகளை தானமாக வழங்கியிருக்கிறார்கள். மேலும் மடத்தை நிர்வகிப்பதற்காக சவசிஞான தேவர்க்கு இரண்டு மா அளவுள்ள நன்செய் நிலத்தையும் இவர்கள் தேவதானமாகக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் சவசிஞான தேவரால் நிர்வகிக்கப்பட்ட ஒரு மடம் இவ்வூரில் இருந்ததை அறியமுடிகிறது.

மடத்துக்கு தானமாக வழங்கிய நிலத்தின் எல்லை குறிப்பிடும் போது கிழக்கில் ராரா பெருவழி குறிப்பிடப்படுகிறது. இது இராஜராஜசோழனின் பெயரில் அழைக்கப்படும் கிழக்குக் கடற்கரைப் பெருவழியாகும். இதனால் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு ராரா பெருவழி என பெயர் இருந்ததாகக் கருதலாம்.

தற்போது நம்பு ஈஸ்வரர் என கோயில் இறைவன் அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் குலசேகர பாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இது குலசேகரப் பாண்டியன் எனும் அரசனின் பெயரால் அமைக்கப்பட்ட கோயிலாக உள்ளது. கல்வெட்டில் சொல்லப்படும் கங்கை நாராயண சக்கரவத்தி, திருப்புல்லாணி, தளிர்மருங்கூர், மேல்நெட்டூர், அருவிமலை கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். இவர் இப்பகுதியின் குறுநிலத் தலைவராகவும், அரசனின் ஆணைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


நாளிதழ் செய்திகள்










Tuesday, 20 July 2021

கல்லிலே கலைவண்ணம் கண்ட பாண்டியமன்னர்கள் - திருமாலுகந்தான் கோட்டை

 


இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகிலுள்ள திருமாலுகந்தான் கோட்டை கோயில் பாண்டிய மன்னர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ளதாக இக்கோயில் பற்றி ஆய்வு செய்த கல்லூரி மாணவி கூறினார்.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் மூலம், கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை ஆகியவற்றில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதன் தலைவர் வே.இராஜகுரு பயிற்சி வழங்கி வருகிறார். இப்பயிற்சிகளைப் பெற்ற இராமநாதபுரம் அருகேயுள்ள பால்கரையைச் சேர்ந்த, சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயிலும் மாணவி வே.சிவரஞ்சனி, திருமாலுகந்தான் கோட்டை கோயில் பற்றி ஆய்வு செய்துள்ளார். இதுபற்றி மாணவி வே.சிவரஞ்சனி கூறியதாவது,

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிதும் அறியப்படாத பழமை வாய்ந்த கோயில்களில், திருமாலுகந்தான் கோட்டை சிவன் கோயிலும் ஒன்று. இங்கு சிவன், அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதில் சிவன் சன்னதி, அடி முதல் முடி வரை கருங்கற்களால் அமைக்கப்பட்ட கற்றளியாக, பாண்டியர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலைக்குச் சான்றாக உள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இது மட்டுமே முழு கற்றளி என்பது இதன் சிறப்பு.

முற்காலப் பாண்டியர்களால் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கழுகுமலை வெட்டுவான்கோயில், திருப்பத்தூர் சிவன் கோயில் ஆகியவற்றிக்கு இணையான சிறப்புடையதாக இக்கோயில் திகழ்கிறது. இவை மூன்றும் சதுர வடிவில் அமைந்த நாகர விமானம் கொண்டவை. திருப்பத்தூர் கோயில் மூன்று தளங்களுடனும், மற்றவை இரண்டு தளங்களுடனும் உள்ளன. மூன்று கோயில்களிலும் முதல் தளத்தில் உள்ள கர்ணக்கூடு தேர் போன்ற அமைப்பிலும், வண்டிக்கூடு போன்ற அமைப்பில் உள்ள சாலை சிறிய கோயில் போன்றும் உள்ளன. இதில் சிற்பங்கள் உள்ளன.

கழுகுமலையில் உள்ள யாளி வரிசைகள் சிம்ம யாளிகளாகவும், மற்றவற்றில் மகர யாளியாகவும் உள்ளன. பூதகணங்கள் ஆடிப்பாடி மகிழும் சிற்ப வரிசை, நாசிக்கூடுகள், கொடிக்கருக்குகள் ஆகியவை மூன்று கோயில்களிலும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் கோயில் முதல் தளத்தில் உருளை போன்ற அமைப்பில் உள்ள விருத்தஸ்புடிதம் என்ற அமைப்பு, இக்கோயில் அம்மன் சன்னதியின் வெளிப்புறச்சுவரில் நீளமான தூண் போன்ற அமைப்பில் உள்ளது. கர்ணக்கூடு, சாலைக்கூடு, தேவகோட்டம், பஞ்சரம், விருத்தஸ்புடிதம் ஆகியவை சிறு கோயில்கள் போன்ற அமைப்பில் இருப்பவை. இவற்றை கோயிலின் பின்பக்கச் சுவர், விமானத்தின் மேல் தளங்களில் அமைத்து அழகுபடுத்தியுள்ளார்கள்.

          விமானத்தின் வெளிப்பகுதி சுவரில், சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன. இதில் லிங்கத்தின் மீது கால் வைத்த கண்ணப்ப நாயனார், நந்தி மேல் உமாமகேஸ்வரர் என பல சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்







முகவை எனும் பெயர் வந்ததன் காரணம்

 


முற்காலத்தில் இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில் நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால் இராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்துள்ளார்.

வைகை முகத்துவாரம்

வைகையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளதால் இராமநாதபுரத்திற்கு முகவை எனப் பெயர் ஏற்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் வைகை இராமநாதபுரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஓடுகிறது. இதன் முகத்துவாரத்தில் அழகன்குளமும் ஆற்றங்கரையும் தான் அமைந்திருக்கின்றன. இராமேஸ்வரத்திற்கு செல்லும் வழியில் இவ்வூர் அமைந்திருப்பதால் முகவை எனப் பெயர் வந்ததாகச் சொல்வதும் பொருத்தமானதாக இல்லை.

இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, முகவை என்ற பெயர் ஏற்பட்டது பற்றிக் கூறியதாவது,

சங்க இலக்கியங்களில் முகவை

புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முகவை என்ற சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி உள்ளிட்ட பல பொருளை பேரகரமுதலி குறிப்பிடுகிறது. மேலும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் முகவைப்பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டு ஆகும். எனவே முகவை என்ற சொல்லை நெல்லுடன் தொடர்புடையதாகவும், நெல் கதிரடிக்கும் இடத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

நெல்லைக் குறிக்கும் ஊர்கள்

இராமநாதபுரம் எனும் ஊர் உருவாவதற்கு முன்பு இப்பகுதி நெல் கதிரடிக்கும் பொட்டலாக இருந்துள்ளதால் முகவை என பெயர் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் பல உள்ளன. சமீபகாலம் வரை இராமநாதபுரம் பெரிய கண்மாய் மூலம் இப்பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்துள்ளது. இராமநாதபுரத்தைச் சுற்றிலும் நெல்லை நினைவுபடுத்தும் சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை, களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் முதலிய ஊர்கள் உள்ளன.

இதில் மூன்று ஊர்கள் கோட்டை என முடிகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் கோட்டை என முடியும் ஊர்களில் எங்கும் கற்கோட்டைகள் இல்லை. அவை பாரம்பரிய நெல்லின் பெயரில் அமைந்த நெல் விளையும் கோட்டைகளாக இருந்துள்ளன. எனவே சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை ஆகிய ஊர்கள் நெல்லால் தான் இப்பெயர் பெற்றுள்ளன என அறிய முடிகிறது. அதேபோல் களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் ஆகிய ஊர்களும் நெல்லைக் குறிக்கும் பெயரில் தான் அமைந்துள்ளன.

அக்காலகட்டத்தில் சுற்றியுள்ள இவ்வூர்களில் விளைந்த நெல்லை, கதிரடிக்கும் மையமாக இருந்த பொட்டல் பகுதி (தற்போதைய இராமநாதபுரம் நகரம்) முகவை என அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும் கிழவன் சேதுபதி காலத்தில் இப்பகுதியில் தோண்டப்பட்ட ஊருணி முகவை ஊருணி என்றே அழைக்கப்படுகிறது. கி.பி.1711-ம் ஆண்டு அவர் வழங்கிய செப்பேட்டில் இராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் இருக்குமிடமும் முகவை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

கி.பி.1601-ல் சேதுபதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இராமநாதபுரம் என்னும் ஊர் இருந்துள்ளது. கி.பி.1607-ல் திருமலை உடையான் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் இராமநாதபுரம் எனும் ஊர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. அப்போது சேதுபதிகளின் தலைநகரம் போகலூர் என்பது கவனிக்கத்தக்கது.

இராமநாதபுரம் நகரம் உருவாவதற்கு முன், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில், களத்தாவூர், அச்சுந்தன்வயல், சூரங்கோட்டை ஆகிய ஊர்கள் சிறப்புற்று இருந்துள்ளன. எனவே சேதுபதிகளுக்கு முன்பே விஜயநகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிகாலத்தில், முகவைப் பகுதியில், ஊர் உருவாக்கப்பட்டபோது இராமநாதபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலும் இராமநாதபுரம் எனும் ஒரு ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்






முதுகுளத்தூர் அருகே சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

 



இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதுகுளத்தூர் அருகே உள்ள கருங்கலக்குறிச்சி கண்மாய் பகுதியில் வாழவந்தாள் அம்மன் கோயில் எதிரில் பண்ணைக்குட்டை தோண்டியபோது அதிகளவில் பானை ஓடுகள் வெளிவந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுருவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் அக்கண்மாய்ப் பகுதியில் ஆசிரியர் சண்முகநாதனுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்தபின் தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

பண்ணைக்குட்டை தோண்டிய பகுதியில்,  ஒரு நுண்கற்காலக் கருவி,  வழுவழுப்பான மற்றும் சொரசொரப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், தடித்த மற்றும் வழுவழுப்பான சிவப்பு நிற பானை ஓடுகள், தரையில் பதிக்கப்படும் சுடுமண் ஓடுகள், சுடுமண்ணால் ஆன விளக்குகள், குழாய், மூடிகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், துளையுள்ள பானை ஓடு, சிறிது உடைந்த சிவப்புநிற சிறிய குவளை, மான் கொம்பின் உடைந்த பகுதிகள், அரைப்புக் கல் மற்றும் குழவி, பெரிய செங்கல், குறியீடுகளுள்ள இரு பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் மற்றும் பண்ணைக்குட்டை பகுதிகளில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட பழம் பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு ஊர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது.



இங்கு கிடைத்த ஒரு முழு செங்கலின் நீளம் 29 செ.மீ., அகலம் 15 செ.மீ., உயரம் 7 செ.மீ. ஆகும். இது கி.பி.1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இதேபோன்ற செங்கல் கமுதி அருகே பேரையூரிலும் கிடைத்துள்ளது. இரு கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் ஆங்கில எழுத்துகளான ‘E, H’ போன்ற குறியீடுகள் உள்ளன. இதில் ‘E’ போன்ற குறியீடு அழகன்குளம் அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரைப்புக்கல் சிவப்பு நிற கல்லிலும், குழவி கருங்கல்லிலும் செய்யப்பட்டுள்ளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன.  பொதுவாக மான்களின் கொம்புகளைக் கொண்டு அவற்றை இரலை மான், உழை மான் என இரு வகையாகப் பிரிப்பர். இதில் இரலை மானின் கொம்புகள் உள்துளை இல்லாமல் உள்ளே கெட்டியாக இருக்கும். இதன் கொம்பில் கிளைகள் இருக்காது. இவற்றின் கொம்பு கீழே விழுந்து புதிய கொம்பு முளைக்காது.

ஆனால் உழை மானின் கொம்புகள் உள் துளையுடையவை. கீழே விழுந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இவற்றின் கொம்புகளில் கிளைகள் உண்டு. கீழே விழுந்த உழை மானின் கொம்புகளை மருந்தாகப் பயன்படுத்துவர். கெட்டியான இரலை மானின் கொம்புகளை ஆயுதமாகப் பயன்படுத்துவர்.

இவ்வூரில் கிடைத்த உள்துளையுடன் உள்ள கொம்புகளைக் கொண்டு இவை உழை எனும் புள்ளிமானின் கொம்புகள் என்பது உறுதியாகிறது. மேலும் இவ்வூருக்கு அருகில் இம்மானின் பெயரில் உழையூர் என்ற ஒரு ஊர் உள்ளது.  மேலக்கொடுமலூர் கோயில் கல்வெட்டில் வடதலைச் செம்பிநாட்டு உழையூர் என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரகோசமங்கை அருகில் உள்ள கீழச்சீத்தை என்ற ஊரில் மேற்பரப்பாய்வில் கண்டெடுக்கப்பட்ட மான் கொம்புகள் உள்துளை இல்லாதவை. எனவே அவை இரலை மானின் கொம்புகள் என்பதை அறியமுடிகிறது. இரலை மானை புல்வாய் எனவும் அழைப்பர். அம்மானின் பெயரில் கமுதி அருகில் புல்வாய்க்குளம் என்ற ஊர் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்