Pages

Showing posts with label சக்கரக்கோட்டை. Show all posts
Showing posts with label சக்கரக்கோட்டை. Show all posts

Sunday, 5 October 2025

உயிர் கொடுத்து ஊர் காத்த ‘மடைச்சி’ சாத்தாயி - வே.இராஜகுரு

 


இராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள் இருக்கும் பழமையான சாத்தாயி கோயிலைப் பாதுகாக்க இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இராஜசூரியமடை அருகில் சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கில் பாழடைந்த நிலையில் சாத்தாயி கோயில் உள்ளது. இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீர்தான் அனைத்திற்கும் ஆதாரமானது. நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் சங்கிலித் தொடர் போன்ற கண்மாய்களை எட்டாம் நாள் பிறை வடிவில் பாண்டியரும், சேதுபதிகளும் அமைத்து விவசாயத்தைப் பெருக்கினர்.



கண்மாய்களிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற மடை அமைப்பர்.  வைரம் பாய்ந்த பனை மரங்களின் உள் தண்டை நீக்கி அதை கண்மாய் கரையில் பதித்து, கோரை, நாணல், களிமண் கொண்டு அதை அடைத்து ஆரம்பகால மடைகள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு பாறை, மரம், சுண்ணாம்பு, செங்கல் போன்றவை பயன்படுத்தி கட்டப்பட்ட மடைகள் வந்தன.

பாசனத்துக்காகவும், வெள்ளம் ஏற்படும்போதும் ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையைத் திறந்து மூடும் பணி செய்தவர்களை மடையர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. வெள்ளம் ஏற்படும்போது கண்மாயில் நீர் நிரம்பி கரை உடைந்து ஊர் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும். அச்சமயங்களில் இவர்களின் பணி மகத்தானது. இப்பணியை எல்லோராலும் செய் முடியாது. இதில் பயிற்சி பெற்றவர்களே இதைச் செய்ய முடியும். சில சமயங்களில் இப்பணி அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும்.

அவர், வெள்ளக்காலத்தில் நிரம்பியுள்ள கண்மாய் நீரில் மூழ்கி மூச்சடக்கி, நீருக்கடியில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்துவிடுவார். அச்சமயம் வேகமாக வெளியேறும் நீர் அவரை உள் இழுக்கும். அதில் தப்பிப் பிழைத்தால் அவர் வீடு திரும்புவார். இல்லையேல் ஊருக்காக தன் இன்னுயிர் கொடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் மன்னர்களால் போற்றப்படுவார். தெய்வமாக வணங்கப்படுவார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகில் முதுகுடியில் குளத்தை திறக்கும் பணி செய்த போது ஊரின் நலனுக்காகத் இன்னுயிர் நீத்த பெருந்தேவப்பள்ளனின் பிள்ளைகளுக்கு, அவ்வூரார் கி.பி.1302-ல் உதிரப்பட்டியாக நிலம் வழங்கியுள்ளனர்.

சங்க காலத்திலேயே மடை அடைக்கும் பணியை பெண்களும் செய்துள்ளதை கீழடியில் கிடைத்த பானை ஓட்டில் எழுதப்பட்ட ‘மடைச்சி’ என்ற சொல் உணர்த்துகிறது.

இராமநாதபுரம் அருகே, வட்டவடிவமான சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கிலுள்ள இராஜசூரியமடை, தனுக்காத்தமடை, பால்கரை ஆகிய ஊர்களின் விவசாயத்துக்காக சேதுபதி மன்னர்கள் புதிய மடைகளை அமைத்துள்ளனர்.  இதில் ராஜசூரியமடை, கி.பி.1676-ல் ராமநாதபுரத்தை ஆண்ட இராஜசூரிய சேதுபதி பெயராலும், அதன் அருகில் தனுக்காத்தமடை தளவாய் சேதுபதியின் தங்கை மகன் தனுக்காத்ததேவர் பெயராலும் உருவாக்கப்பட்டுள்ளது. மடைகளின் அருகில் உருவான ஊர்களும் அதன் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

இராஜசூரியமடை அருகில், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள், மடைத்தூண்களைக் கொண்டு அமைத்த பழமையான ஒரு சிறிய கோயில் உள்ளது. சிற்பம் ஏதுமில்லாத இக்கோயில், மடையைத் திறந்து மூடும் பணியைச் செய்தபோது, இறந்துபோன சாத்தாயி என்ற இளம் பெண்ணுக்கானது ஆகும்.

கிழவன் சேதுபதி காலத்தில், ஒரு மழைநாளில், உடையும் நிலையில் இருந்த சக்கரக்கோட்டைக் கண்மாயின் தெற்கு மடைக்குப் பொறுப்பாளரான சாத்தாயி, மடையைத் திறந்து நீரை வெளியேற்றியபோது, நீரில் மூழ்கி, உயிரிழந்துள்ளார். அதை நினைவு கூறும் விதத்தில், அவர் இறந்த இடத்தில், மடை போன்ற அமைப்பில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டில் இருந்த இக்கோயில் தற்போது பழுதடைந்தநிலையில் உள்ளது. சாத்தாயி போன்ற ஒரு ‘மடைச்சி’ பெண் இல்லாததால் இராஜசூரியமடை அருகில் இருந்த தனுக்காத்தமடை என்ற ஊர், சக்கரக்கோட்டைக் கண்மாய் உடைந்ததால் 1980-ல் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

இதுபோல மடையைத் திறக்கும்போது இறந்துபோய் ஊரைக் காத்தவர்களை மடைக்கரையான் என்ற பெயரிலும் தெய்வமாக மக்கள் பல ஊர்களில் வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்




Tuesday, 20 July 2021

முகவை எனும் பெயர் வந்ததன் காரணம்

 


முற்காலத்தில் இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில் நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால் இராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்துள்ளார்.

வைகை முகத்துவாரம்

வைகையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளதால் இராமநாதபுரத்திற்கு முகவை எனப் பெயர் ஏற்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் வைகை இராமநாதபுரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஓடுகிறது. இதன் முகத்துவாரத்தில் அழகன்குளமும் ஆற்றங்கரையும் தான் அமைந்திருக்கின்றன. இராமேஸ்வரத்திற்கு செல்லும் வழியில் இவ்வூர் அமைந்திருப்பதால் முகவை எனப் பெயர் வந்ததாகச் சொல்வதும் பொருத்தமானதாக இல்லை.

இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, முகவை என்ற பெயர் ஏற்பட்டது பற்றிக் கூறியதாவது,

சங்க இலக்கியங்களில் முகவை

புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முகவை என்ற சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி உள்ளிட்ட பல பொருளை பேரகரமுதலி குறிப்பிடுகிறது. மேலும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் முகவைப்பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டு ஆகும். எனவே முகவை என்ற சொல்லை நெல்லுடன் தொடர்புடையதாகவும், நெல் கதிரடிக்கும் இடத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

நெல்லைக் குறிக்கும் ஊர்கள்

இராமநாதபுரம் எனும் ஊர் உருவாவதற்கு முன்பு இப்பகுதி நெல் கதிரடிக்கும் பொட்டலாக இருந்துள்ளதால் முகவை என பெயர் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் பல உள்ளன. சமீபகாலம் வரை இராமநாதபுரம் பெரிய கண்மாய் மூலம் இப்பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்துள்ளது. இராமநாதபுரத்தைச் சுற்றிலும் நெல்லை நினைவுபடுத்தும் சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை, களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் முதலிய ஊர்கள் உள்ளன.

இதில் மூன்று ஊர்கள் கோட்டை என முடிகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் கோட்டை என முடியும் ஊர்களில் எங்கும் கற்கோட்டைகள் இல்லை. அவை பாரம்பரிய நெல்லின் பெயரில் அமைந்த நெல் விளையும் கோட்டைகளாக இருந்துள்ளன. எனவே சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை ஆகிய ஊர்கள் நெல்லால் தான் இப்பெயர் பெற்றுள்ளன என அறிய முடிகிறது. அதேபோல் களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் ஆகிய ஊர்களும் நெல்லைக் குறிக்கும் பெயரில் தான் அமைந்துள்ளன.

அக்காலகட்டத்தில் சுற்றியுள்ள இவ்வூர்களில் விளைந்த நெல்லை, கதிரடிக்கும் மையமாக இருந்த பொட்டல் பகுதி (தற்போதைய இராமநாதபுரம் நகரம்) முகவை என அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும் கிழவன் சேதுபதி காலத்தில் இப்பகுதியில் தோண்டப்பட்ட ஊருணி முகவை ஊருணி என்றே அழைக்கப்படுகிறது. கி.பி.1711-ம் ஆண்டு அவர் வழங்கிய செப்பேட்டில் இராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் இருக்குமிடமும் முகவை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

கி.பி.1601-ல் சேதுபதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இராமநாதபுரம் என்னும் ஊர் இருந்துள்ளது. கி.பி.1607-ல் திருமலை உடையான் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் இராமநாதபுரம் எனும் ஊர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. அப்போது சேதுபதிகளின் தலைநகரம் போகலூர் என்பது கவனிக்கத்தக்கது.

இராமநாதபுரம் நகரம் உருவாவதற்கு முன், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில், களத்தாவூர், அச்சுந்தன்வயல், சூரங்கோட்டை ஆகிய ஊர்கள் சிறப்புற்று இருந்துள்ளன. எனவே சேதுபதிகளுக்கு முன்பே விஜயநகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிகாலத்தில், முகவைப் பகுதியில், ஊர் உருவாக்கப்பட்டபோது இராமநாதபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலும் இராமநாதபுரம் எனும் ஒரு ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்