மேற்குத் தொடர்ச்சி மலை இந்திய துணைக்கண்டத்தின்
மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். உலகில் பல்லுயிர்
வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்கு சுமார்
5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை
இருவாழ்விகளும் உள்ளன.
இம்மலைத்தொடர்
தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய
மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார்
1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு
சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில்
சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில்
மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம்
கேரளாவிலுள்ள ஆனைமுடி ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.
இம்மலைத்
தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இம்மலைத்தொடர் முற்காலத்தில் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் பகுதிகளோடு இணைந்திருந்தது.
150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில்
இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்துள்ளன.
சுமார்
100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை
வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும்.
இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான
சுவடுகள் காணப்படுகின்றன. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில்
அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது.
தென்னிந்தியாவின்
பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இங்கு உருவாகி
வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கியமான ஆறுகள் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி,
வைகை ஆகியவை. இவை தவிர பல சிறு ஆறுகள் இங்கு உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில்
கலக்கின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும்
மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியச்
சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.