தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலுள்ள, முற்காலப் பாண்டியர்களால்
கட்டப்பட்ட மிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வெட்டுவான்கோயில் மற்றும் சமணச் சின்னங்களை
உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் தொல்லியல்
ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்களை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை நடத்தி வருகிறது. 12வது மரபுநடை
நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 30.06.2019 அன்று
நடந்தது. மரபுநடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும்
வரவேற்றார்.
இந்நிகழ்வுக்குத்
தலைமை வகித்த தொல்லியல் ஆய்வாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான வே.இராஜகுரு கூறியதாவது,
கழுகுமலையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களான வெட்டுவான்
கோயில், முருகன் கோயில், சமணப்பள்ளி ஆகியன முற்காலப்
பாண்டியரின் கலைப்பாணிக்கு ஆதாரமாக உள்ளன. கடினமான பாறை
அடுக்குகளால் ஆன ஒரு பெரிய மலைப்பாறையில் 7.50 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக
வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாகச் செதுக்கியுள்ளனர். இது எல்லோராவிலுள்ள
கைலாசநாதர் கோயில் போன்றது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே
இது ஒன்றுதான் என்பது இதன் சிறப்பு.
இக்கோயில் சிற்ப வேலைப்பாடு நிறைந்த ஒற்றைக் கற்கோயிலாகும். இதில் கருவறையும்
அர்த்தமண்டபமும் உள்ளன. கோயில்பணி முற்றுப்பெறவில்லை. இக்கோயில் இரண்டு தளங்கள்
உள்ள துவிதள விமானமாக உள்ளது. இதன் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி,
திருமால், விசாபகரணர், அக்கமாலை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.
கிரீவத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம்
வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர். இந்தியக் கோயில்களில் இந்தக்
கோயிலில்தான் மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சிற்பங்கள்
அனைத்தும் புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கின்றன. திராவிடவகை விமானத்துக்கு, மிகப்பெரிய
நாசிக்கூடுகளும், கொடிக்கருக்குகளும், மகரதோரணங்களும் அழகு சேர்க்கின்றன.
கற்றளிக் கோயில்கள் கீழிருந்து திட்டமிட்டுக் கட்டி மேல் எழுப்பப்படுபவை. ஆனால்
இந்த ஒற்றைக் கற்றளி, தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இறந்த
குரவர், சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக, மலையின் கிழக்குச் சரிவில் 100க்கும்
மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இவை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் விவரங்கள் வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்ட சமணப்பள்ளியும்
செயல்பட்டு வந்துள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இவை அழகு வாய்ந்தவை.
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், கங்கைகொண்ட
சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய
கோயில்கள் யுனொஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக
அறிவிக்கப்பட்டுள்ளன. இவை சோழர், பல்லவர்களின்
கலைப் படைப்புகளாக உள்ளன. இதனால் இவை உலக அளவில் கவனம் பெறுகின்றன. ஆனால்
முற்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியில் அமைந்த மரபுச் சின்னங்களிலே மிகச் சிறந்து
விளங்கும் கழுகுமலை வெட்டுவான்கோயில் மற்றும் சமணச் சிற்பங்களை உலக அளவில் பிரபலப்படுத்த இவற்றை உலகப்
பாரம்பரியச் சின்னங்களாக்க
உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசைக் கேட்டுக்
கொள்வதாகக் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மரபுநடை
அமைப்பாளர்கள் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், முனியசாமி, சந்தியா,
ரோகிணி ஆகியோர் செய்தனர். திருப்புல்லாணி அரசு
மேல்நிலைப்பள்ளி, தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கழுகுமலையில் உள்ள வெட்டுவான்கோயில், சமணப்பள்ளி,
முருகன் கோயில் ஆகியவற்றை அனைவரும் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment