தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே
முடுக்குமீண்டான்பட்டி குளத்தின் கரையில் எட்டையபுரம் பாளையக்காரர்களால் உருவாக்கப்பட்ட
சுமார்
200 ஆண்டுகள் பழமையான மடைக்கல்வெட்டை
தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கல்மடை
குளம், கண்மாய்களில் உள்ள
நீரை நிலங்களுக்கு திறந்துவிடுவதற்காக அமைக்கப்படும் அமைப்பு மடை ஆகும். இது உறுதியான கருங்கல்லினால் அமைக்கப்படும் போது நீண்ட நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
மழைக்காலங்களில் நீர்நிலைகளில் உள்ள நீரை தேவையின்றி வெளியேறாதவாறு மூட
இம்மடைகள் உதவுகின்றன. முழுவதும் கல்லினால்
அமைக்கப்படும் மடைகளை கல்மடை என்பர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராஜேந்திரன், கொல்லங்குடி காளிராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் மேற்கொண்ட களஆய்வின் போது கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி குளத்தின் மடையில் கல்வெட்டு இருந்ததைக் கண்டுபிடித்து படி எடுத்தனர்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர்கள் வே.ராஜகுரு, ஆ.மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது,
மடைத்தூண் அமைப்பு
குளத்தின் கரைக்கு
அருகிலுள்ள மடையில் 10 அடி உயரமுள்ள இரு தூண்கள் உள்ளன. இதில் கிழக்குப் பகுதியில் உள்ள தூணின் ஒரு பக்கத்தில் 4½ அடி உயரத்திற்கு மொத்தம் 25 வரிகளில் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு செய்தி
எட்டையபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர் ராச ராச ராச மானியர் செகவீர ராம எட்டப்பராசர் அவர்கள் முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள தன் மாப்பிள்ளை சொக்கையாவுக்கு இவ்வூரைத் தானமாகக் கொடுத்து இவ்வூர் குளத்தில் ஒரு கல் மடையையும் செய்து வைத்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டு முழுவதும் தமிழில் இருந்தாலும் சோமவாரமு, உத்திர நட்சேத்திரமு ஆகிய தெலுங்குச் சொற்கள் இதில் உள்ளன.
மேலும் மன்னரை அய்யர் எனக் குறிப்பிட்டுள்ளனர். எட்டையபுரம் மன்னர்களை அவர்கள் பெயருடன் அய்யன் என சேர்த்து அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஆனால் இக்கல்வெட்டில் அய்யர் என பன்மை விகுதியில் மன்னர் குறிப்பிடப்பட்டுள்ளார். இதில் மன்னரின் பொதுவான பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இதனால் மன்னர் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. மன்னரின் மாப்பிள்ளை இந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம். இக்கல் மடை உத்திர நட்சத்திரத்தில்
சுபதினத்தில் நடப்பட்டுள்ளது.
ஆண்டு
5021 என ஆண்டில் தொடங்கும் இக்கல்வெட்டு பெருமாள் துணை என முடிகிறது. இதில் 5021 விய ஆண்டு ஆனி மாதம் 28 ஆம் நாள் திங்கள் கிழமை என வரும் ஆண்டு
கலியுகம்,
சக ஆண்டு எதிலும் பொருந்தவில்லை. எனவே இதில் உள்ள விய எனும் தமிழ் ஆண்டு, மாதம், கிழமை மற்றும் எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டின்
காலம் கி.பி.1826 எனக் கணிக்கமுடிகிறது.
இக்கல்வெட்டு உருவான காலத்தில் தமிழ்நாட்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கன்பெனியின் ஆட்சி நடந்து வந்தது. எனினும் ஆங்கிலேயரின் ஆண்டு உள்ளிட்ட வழக்கத்தை இக்கல்வெட்டில் காணமுடியவில்லை.
இதில் தமிழ் எண்களையும், தமிழ் ஆண்டையும் பயன்படுத்தியுள்ளனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அமைத்த கல்மடை மூலம் எட்டையபுரம் சமஸ்தானத்தின் எல்லை
இவ்வூர் வரை பரவி இருந்ததை அறிய
முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment