Pages

Wednesday, 11 May 2016

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (1777 – 1819) - வே.இராஜகுரு



வாணிகம் செய்யவும், கிறித்துவத்தைப் பரப்பவும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் நாளடைவில் தமிழைக் கற்றால் தான் சமயப்பணி செய்யமுடியும் என்பதை உணர்ந்து தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அவர்கள் ஆட்சிக்காக அந்தந்த வட்டார மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு கல்லூரி (The Madras College) 1812இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரியை நிறுவியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) ஆவார்.
 இவர்தான் தமிழை நன்கு கற்று தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு தன்னுடைய மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டவர். தமிழின் மீது கொண்ட காதலால் தன் பெயரை எல்லீசன் என தமிழ்ப் படுத்திக்கொண்டார்.
கி.பி.1796 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தராகச் சேர்ந்த இவர் 1798 ல் துணைக் கீழ்நிலைச் செயலராகவும், 1801 ல் துணைச் செயலராகவும், 1802 ல் வருவாய்த்துறைச் செயலராகவும் படிப்படியாக உயர்ந்து, 1810 இல் சென்னையின் கலெக்டர் ஆனார். இவர் சென்னையில் இருந்தபோது சாமிநாதபிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றுள்ளார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை இவர் பெயரால் அமைந்துள்ளது. மதுரையில் எல்லிஸ் நகர் இவர் பெயரால் உருவாக்கப்பட்டதுதான்.
தமிழ்த்தொண்டு
எல்லீசால் இந்திய நாட்டு மொழிகளை ஆங்கிலேயருக்கு பயிற்றுவிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்ட கல்லூரிக்கு 'சென்னைக் கல்விச் சங்கம்' என்று பெயர். இக்கல்லூரியே எல்லிஸின் மொழி ஆய்வுகளுக்குக் களமாக விளங்கியுள்ளது.
இக் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றிய முத்துசாமிப் பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவர் எழுதிய நூல்களை தேடிப் பாதுகாக்கச் செய்தார் எல்லிஸ்.
எல்லிஸ் தமிழையும், வடமொழியையும் நன்கு கற்றறிந்த அறிஞர். மனுதர்ம சாஸ்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அவர் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை ஆங்கிலத்தில் 1812இல் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்டிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பே ஆங்கிலத்தில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பாகும்.
தரவுகொச்சகக் கலிப்பாவால் சில செய்யுள்களை இயற்றியுள்ளார். சீவகசிந்தாமணி, புறநானூறு, நாலடியார், மகாபாரதம் போன்ற பல தமிழ் நூல்களைப் படித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய ஏழு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அம்மொழிக் குடும்பத்திற்குத் தென்னிந்திய மொழிக் குடும்பம் எனவும் பெயரிட்டார். வடமொழிச் சேர்க்கையால் தமிழ் மொழி தோன்றவில்லை என முதன் முதலில் கூறியவரும் இவரே. எல்லீசுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவி இராபர்ட் கால்டுவெல், தன் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்னையில் வாழ்ந்து வந்த, தமிழ்க் கவிஞர் இராமச்சந்திரக் கவி ராயரின் உற்ற நண்பராக இருந்தார். இக்கவிராயரின் கவித் திறமையைப்
புகழ்ந்து, எல்லிஸ் துரை ஒருபாடல் பாடியிருக்கிறார். அது தனிப்பாடல் திரட்டில் சேர்க்கப் பட்டிருக்கிறது. அப்பாடல் இது:
செந்தமிழ் செல்வனு மோரா யிரந்தலைச் சேடனும்யாழ்
சுந்தரத் தோடிசைவல்லோனும் யாவரும் தோத்திரஞ்செய்
கந்தனைச் சொல்லுங் கவிராமச் சந்த்ரனைக் கண்டுவெட்கி
அந்தர வெற்பிழி பாதாளந் தேடி யடங்கினரே.
திருக்குறளால் கவரப்பட்டவர்
'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு'
எனும் திருக்குறளைப் படித்ததன் பயனாக 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லிசின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டாக உள்ளது.

திருவள்ளுவர் உருவ தங்கக் காசு 



இவர் சென்னையின் கலெக்டராக இருந்தபோது நாணயசாலையின்  தலைவராகவும் இருந்ததால் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார். ஆனால் அது புழக்கத்துக்கு வரவில்லை.

இராமநாதபுரத்தில் இறுதிக்காலம்
1818 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவினால் மூன்றுமாதம் பணியிலிருந்து விடுப்புக் கோரியிருந்தார். இவரது விண்ணப்பத்தின் படி இவருக்கு வயிற்று வலியும், கல்லீரலில் பிரச்சினையும் இருந்ததாகத் தெரிகிறது. விடுப்பில் இருந்தபோது, தமிழாய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும் பின்னர் அங்கிருந்து இராமநாதபுரத்துக்கும் சென்றார். இராமநாதபுரத்தில் இருந்தபோது தாயுமானவர் சமாதி போன்ற இடங்களைப் பார்வையிட்டுள்ளார். கி.பி.1819, மார்ச் 9 அன்று இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனைப் பகுதியில் தங்கி இருந்தபோது திடீரென காலமானார்.  மருந்துக்குப் பதிலாக விஷத்தை உட்கொண்டதால் இறந்ததாக இவர் இறக்கும் தறுவாயில் எழுதிய கடிதங்கள் மூலம் தெரியவருகிறது. 

இவருடைய கல்லறை இராமநாதபுரம் வடக்குத்தெருவில் உள்ள கிறிஸ்துநாதர் தேவாலய வளாகத்தில் இருந்தது. அவருடைய கல்லறைக் கல்வெட்டுக்கள் தமிழில் அழகிய கவிதை வடிவிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. இதில் அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த செய்தி சொல்லப்படுகிறது. வெள்ளைப் பளிங்குக் கற்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் தற்போது இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனையில் பாதுகாக்கப்படுகின்றன.

எங்கோ இங்கிலாந்தில் பிறந்து திருக்குறளை நன்கு கற்றுத் தேர்ந்து அக்குறளில் சொன்னது போல் நடந்து கொண்டவர். திருவள்ளுவருக்கு தங்க நாணயங்களை அச்சிட்டவர். தமிழில் செய்யுள் எழுதும் அளவுக்கு புலமை பெற்று தமிழின் தலைசிறந்த நூலாம் திருக்குறளின் சிறப்பை ஐரோப்பியர் உணரும் வண்ணம் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணியை செய்து வந்த நிலையில் தனது ஆசை நிறைவேறுமுன்னே முகவை மண்ணில் மறைந்தார்.

No comments:

Post a Comment