கோயில்,
பள்ளிவாசல், தேவாலயம் போன்ற ஆன்மீகத் தலங்களுக்கும், தனி நபர்களுக்கும் தானம்
வழங்கி சேது நாட்டில் ஆன்மீகம், கலை,
தமிழுக்கு தொண்டு செய்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள்.
அதேபோல் ஆங்கிலக்
கிழக்கிந்திய கம்பெனியால் தொடங்கப்பட்ட தமிழ் வழிப் பள்ளிக்கு கட்டடம் கட்ட, கி.பி.1846
முதல் கி.பி.1862 வரை சேது நாட்டை ஆண்ட சேதுபதி இராணி பர்வதவர்த்தினி நாச்சியார் பொருளுதவி
வழங்கியுள்ளார். இச்செய்தி சொல்லும் கல்வெட்டு பரமக்குடி அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரானைட்
கல்லால் ஆன இப்பலகைக் கல்வெட்டை ஆய்வு செய்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி
தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு
இந்தக் கல்வெட்டைப் படியெடுத்தார்.
அதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் கி.பி.1826 இல் சென்னை மாகாண கவர்னராக
இருந்த சர் தாமஸ் மன்றோ பரிந்துரையின் படி கல்வி முறையை
சீர்திருத்த ஒரு பொதுக்கல்விக்
குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி, மாவட்டத் தலைநகரங்களில் இரண்டு உயர்நிலைப்
பள்ளிகளையும், தாலுகா தலைநகரங்களில் ஒரு தொடக்கநிலைப்
பள்ளியையும் நிறுவ உத்தரவிடப்பட்டது. அப்போது இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்
உள்ளிட்ட பல மாவட்டங்கள் மதுரை மாவட்டத்திலேயே இருந்தன. எனவே மதுரையில் மாவட்ட
உயர்நிலைப்பள்ளிகள் இரண்டு தொடங்கப்பட்டன. இங்கு ஆங்கிலமும், தமிழும் கற்பிக்கப்பட்டன.
தாலுகா
தலைநகரங்களான பரமக்குடி, சிவகங்கையில் தலா ஒரு தாலுகா பள்ளி தொடங்கப்பட்டன. அங்கு
தமிழ் வழிக் கல்வி மட்டுமே போதிக்கப்பட்டது. அச்சமயம் அப்பகுதிகளில் இயங்கி வந்த
திண்ணைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட பாடங்களே இங்கும் கற்பிக்கப்பட்டன.
இப்பள்ளிகளுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லாததால் இவை கி.பி.1836 இல்
மூடப்பட்டன. பின்னர் சில ஆண்டுகள் கழித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து, மெக்காலேயின்
ஆங்கிலவழிக் கல்வியையும் கற்பிக்கும்
பள்ளிகளாக அவை மீண்டும் தொடங்கப்பட்டன.
கல்வெட்டு |
இந்நிலையில்
ஆங்கிலேயர்கள் இராமநாதபுரம் சேதுநாட்டை கி.பி.1803 இல் ஜாமீன்தார் அந்தஸ்துக்கு
குறைத்தார்கள். அதன் முதல் ஜமீந்தாரினியாக மங்களேஸ்வரி நாச்சியார்
நியமிக்கப்பட்டார். அதன்பின் பட்டத்துக்கு வந்த அண்ணாசாமி சேதுபதி, இராமசாமி
சேதுபதி, முத்துவீராயி நாச்சியார் ஆகியோருக்குப் பின் கி.பி.1846
இல் ஆட்சிக்கு வந்த பர்வதவர்த்தினி
நாச்சியார் வாரிசு பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தைத் தொடர்ந்து நாடி வந்தார்.
இத்தகைய
சூழலில் மக்களிடையே கல்வியறிவை வளர்க்கவும், பரமக்குடி தாலுகா பள்ளியை தொடர்ந்து
நடத்திடவும் வேண்டி சேதுபதி இராணி பர்வதவர்த்தினி நாச்சியார் வழங்கிய பொருளுதவி
மூலம் கி.பி.1856 இல் அப்பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு
தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டில்
ராணி சேதுபதி ஹிரண்ய கர்ப்ப யாஜி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். மன்னர்கள் பொன்னால்
செய்யப்பட்ட பசு உருவத்தின் உள்ளே இருந்து யாகம் செய்து அது முடிந்தபின்
அவ்வுருவத்தை பிரித்து பிராமணர்களுக்குத் தானமாக வழங்குவார்கள். இந்த யாகம் செய்த
மன்னர்கள் ஹிரண்ய கர்ப்ப யாஜி என அழைக்கப்படுவார்கள்.
சேதுபதி
மன்னர்களில் ஹிரண்ய கர்ப்ப யாகம் செய்தவர் போகலூரைத் தலையிடமாகக் கொண்டு ஆண்ட
திருமலை ரெகுநாத சேதுபதி ஆவார். அதனால் அவருக்குப் பின் வந்த அனைத்து சேதுபதிகளும்
ஹிரண்ய கர்ப்ப யாஜி என கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்படுகிறார்கள்.
பரம்பை மரம் |
பரம்பை மர முட்கள் |
பரமக்குடி
இக்கல்வெட்டில் பரம்பைக்குடி எனக் குறிக்கப்பட்டுள்ளது. பரம்பை மரங்கள் நிறைந்த
பகுதி என்பதால் இவ்வூருக்கு பரம்பைக்குடி என பெயர் ஏற்பட்டுள்ளது. பரம்பை, பரமன்
வேலம், வெள்வேலம் என அழைக்கப்படும் இம்மரங்கள் வேல மரங்களில் ஒருவகை ஆகும். வெள்ளை நிற
தண்டுடைய இம்மரங்கள் மருத்துவ குணம் நிறைந்தவை.
பரமக்குடி
தாலுகா முன்சீப்பாகவும், நீதிபதியாகவும் இருந்த
வில்லியம் போவாலது என்ற ஆங்கிலேயர் மேல்
விசாரணை செய்ததன் பேரில் இக்கட்டடம் கட்டப்பட்டது என கல்வெட்டில்
குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆங்கிலத்திலும் தமிழும் உள்ளன.
இக்கல்வெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த நிலையில் இடிக்கப்பட்டுவிட்டது.
ஓடு வேயப்பட்ட கட்டடமாக இருந்த இதன் அடிப்பகுதி இப்பொழுதும் இங்கு உள்ளது. வணிகம்
செய்ய வந்த ஆங்கிலேயர்கள் தமிழ் வழிப் பள்ளிகளைத் திறந்ததற்க்கும் பள்ளிக்கூடம்
ஒன்றுக்கு சேதுபதிகள் தானம் வழங்கியதற்கும் இக்கல்வெட்டு சான்றாக விளங்குகிறது.
எனவே பள்ளி நிர்வாகத்தினர் இதை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என அவர்
கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment