இராமநாதபுரத்தில் கோட்டை இருந்ததற்கு அடையாளமாக இருக்கும் மூலைக்கொத்தளம்
|
கி.பி.1678 முதல் கி.பி.1710 வரை ஆட்சி செய்த ரெகுநாத கிழவன்
சேதுபதியின் காலத்தில் தான் இராமநாதபுரம் சேதுபதிகளின் தலைநகரானது.
கி.பி. 1168 இல் மதுரை பராக்கிரமபாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு
ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரம பாகுவின் படை, போரிட்ட இடங்களில் இராமநாதபுரம்
சூரன்கோட்டையும் ஒன்றாக இலங்கையின் மகாவம்சம் கூறுகிறது.
பாண்டியர் காலத்தில் மண்கோட்டையாக இருந்த இதனுள் அரண்மனையும் இருந்துள்ளது.
கி.பி.1678-80 இல் கிழவன் சேதுபதி செங்கல் மற்றும் கற்களைக் கொண்டு 27 அடி உயரமும்
5 அடி அகலமும் கொண்ட மதில் சுவர் எழுப்பி ஒரு கோட்டை கட்டி அதைச் சுற்றி அகழி
வெட்டி பாதுகாப்புக்காக 42 சிறிய படைக் கூட்டங்களை நியமித்திருந்தார்.
மதுரையிலிருந்து இராமநாதபுரம்
வரும் வழியில் கூரிச்சாத்த அய்யனார் கோயில் அருகே இக்கோட்டையின் ஒரு கொத்தளம்
இப்போதும் உள்ளது. இது மூலைக் கொத்தளம் எனப்படுகிறது. இக்கொத்தளத்தில் 9
பீரங்கிகள் வைக்கும் அமைப்பு இருந்துள்ளது. கோட்டையின் காவலராக உள்நாட்டு
காலாட்படையின் ஒரு பிரிவு பொறுப்பேற்றிருந்தது.
கி.பி.1726 இல் தஞ்சாவூர்ப் படை இராமநாதபுரம் வந்து தண்டத்தேவர் என்ற
சேதுபதி மன்னரைக் கைது செய்து கோட்டையை அழித்தது. ரிபெல் முத்துராமலிங்க
சேதுபதியின் காலத்தில் கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
கி.பி.1772 இல் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளும்,
ஆர்க்காடு நவாபும் இக்கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டனர். ஆங்கிலேயத் தளபதி
மார்டின்ஸ் இதை ஆக்கிரமித்து கோட்டைக்குள் தனக்கென ஒரு மாளிகை கட்டிக்கொண்டு
வாழ்ந்தார்.
கோட்டையின் உள்ளே கிழவன் சேதுபதியால் கட்டப்பட்ட இராமலிங்கவிலாசம்
என்ற அரண்மனை உள்ளது. மேலும் கோட்டைக்குள் சிவன் கோயில், பெருமாள் கோயில்,
சுப்ரமணியசாமி கோயில், இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், ஆயுதசாலை, அந்தப்புரம், முகவை
ஊரணி, பிராட்டஸ்டன்ட் தேவாலயம் ஆகியவையும் உள்ளன. இக்கோட்டை செவ்வக வடிவில் இரண்டு
கிலோமீட்டர் சுற்றளவில் இருந்துள்ளது. அது ஒரு காலத்திலும் விரிவாகவோ பிரமாதமாகவோ
இருந்ததில்லை என ஆங்கிலேயர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கோட்டையின் வாசலில்
கோட்டை வாசல் பிள்ளையார் கோயில் உள்ளது.
ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியிடம்
பேஷ்குஷ் (அன்பளிப்பு) தொகை வசூலித்துத் தர ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட தளபதி
மார்டின்ஸ் மூலம் மன்னரைத் தங்களின் மதமாற்ற வேலைக்கும் வணிகத்திற்கும் ஒத்துழைக்க
நிர்பந்தித்தார்கள். அவர் அதை ஏற்காததால் கி.பி.1795 பிப்பிரவரி 8 ஆம் நாள்
ஆங்கிலேயர் படை இக்கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு மன்னரை திருச்சி சிறையில்
அடைத்தது. இராமநாதபுரம் கோட்டையின் சுவரும் கொத்தளங்களும் கி.பி. 1803 – 04 இல்
ஆங்கிலேயர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இன்று இராமநாதபுரத்தில் கோட்டை
இருந்ததற்கு அடையாளமாக இருப்பது மூலைக்கொத்தளம் மட்டுமே.
No comments:
Post a Comment