Pages

Wednesday 11 May 2016

திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டத்தில் சமண தீர்ந்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு



 
இரண்டாண்டுக்கு முன்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் செல்லும் வழியில் கொட்டகுடி ஆற்றின் கரையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தலைப்பகுதி இல்லாத யோக நிலையில் உள்ள சமண தீர்ந்தங்கரர் சிலை ஒன்றும், நின்ற நிலையில் கால் பகுதி சிலை ஒன்றும்  உள்ளதை திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு கண்டுபிடித்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சமண சமயம் பரவி இருந்ததற்கான அடையாளம் இதுவரை பெரிய அளவில் கிடைக்கவில்லை. சைவ, வைணவ சமயங்கள் தழைத்தோங்கிய சமய மறுமலர்ச்சிக் காலத்தில், சமண மதம் வலுவிழந்து, அதைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டு நீர்நிலைகளில் எறிவது வழக்கமாக இருந்துள்ளது. அதே போல் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சமணர் கோயிலில் உள்ள சிலைகள் இந்த ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம். உப்பு நீரால் சிலை அரிக்கப்பட்டுள்ளதால் அச்சிலையின் பின்பகுதியில் உள்ள கல்வெட்டுக்கள் வாசிக்க இயலாத அளவிற்கு அழிந்துள்ளது. பீடத்தின் மீது மூன்று உருவங்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் அமர்ந்த நிலையில் உள்ள தீர்ந்தங்கரர் சிற்பம் மிக நேர்த்தியாக உள்ளது.
இம்மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழ்ச்சாக்குளம், பசும்பொன் ஆகிய ஊர்களில் இதற்கு முன்பு சமண தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்துள்ளது. தற்போது திருப்புல்லாணி பகுதியிலும் இது போன்ற சிலைகளின் உடைந்த பாகங்கள் கிடைப்பது இப்பகுதியில் சமணம் பரவி இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மேலும் சமணர்கள் கடல் தாண்டிச் செல்வதில்லை என்பதால் அம்மதம் வெளிநாடுகளில் பரவவில்லை. இராமநாதபுரம் மாவட்டத்தில் சமண தீர்ந்தங்கரர் சிலைகள் கிடைத்துள்ள பல பகுதிகள் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
தற்போது ஆற்றின் கால்வாயில் விழுந்து கிடக்கிறது

இராமநாதபுரம் மாவட்டத்தில் சமண சமயம் இருந்ததற்கான அடையாளமாக இருக்கும் இந்த சிலையை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினர் கைப்பற்றி பாதுகாக்க வேண்டும் என திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம் அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment