Pages

Wednesday 11 May 2016

கமுதிக்கோட்டை - வே.இராஜகுரு




சேதுபதிகளின் கோட்டைகள் 
கி.பி. 1601 முதல் சேதுநாட்டை ஆளத் தொடங்கிய சேதுபதி மன்னர்களின் முதல் தலைநகராக இருந்தது சத்திரக்குடி அருகில் உள்ள போகலூர் ஆகும். 5 சேதுபதி மன்னர்களுக்குப் பின் ரெகுநாத கிழவன் சேதுபதியின் காலத்தில் அவர்களின் தலைநகர்  இராமநாதபுரத்திற்கு மாறியது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், மானாமதுரை, இராமநாதபுரம் மாவட்டம் போகலூர், அத்தியூத்து, கமுதி, பாம்பன், இராமநாதபுரம், செங்கமடை, ஓரியூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே பாண்டியர்களால் கட்டப்பட்ட மண்கோட்டைகளை, கற்கோட்டைகளாக மாற்றியும், புதிய கோட்டைகளை அமைத்தும் ஆட்சியாண்டுள்ளார்கள் சேதுபதி மன்னர்கள்.

முத்து விஜய ரெகுநாத சேதுபதி
 கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜய ரெகுநாத சேதுபதி என்ற உடையத்தேவர், கமுதி, பாம்பன், ஆர்.எஸ்.மங்கலம் அருகே  செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டியுள்ளார். இக்கோட்டைகள் பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. கமுதிக்கோட்டை வட்டவடிவிலும், செங்கமடை கோட்டை அறுங்கோண வடிவிலும் கட்டப்பட்டுள்ளன. பாம்பன் கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது போக எஞ்சி இருந்ததும் 1964 இல் வீசிய புயலில் அழிந்து விட்டது. இதனால் அதன் வடிவமைப்பைத் தெரிந்துகொள்ள இயலவில்லை.

கமுதிக்கோட்டை
கமுதிக்கோட்டை மூன்று சுற்று மதில்களுடன் காணப்படுகிறது. குண்டாற்றின் கரையில் மேட்டுப் பகுதியில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குண்டாற்றின் கரையில் பலவிதமான பாறைகள் உள்ளன. இப்பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவில் பாறைகள் தற்போதும் அப்பகுதியில் கிடப்பது இதை உறுதியாக்கிறது.
இரும்பு மூலப்பொருள்கள் கோட்டை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் கிடைப்பதன் மூலம் பழங்காலம் முதல் இங்கு இரும்பு உருக்காலை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
வீரர்கள் நின்று கண்காணிக்கும் வகையில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நாட்டு வீழி, துரட்டி ஆதண்டை போன்ற மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன.
இக்கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான பாறைகற்களைக் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை அப்பகுதியிலேயே தயாரித்து சுட்டு பயன்படுத்தியுள்ளனர். மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்தபின் அதில் ஏற்பட்ட பள்ளம் இக்கோட்டைக்கு அகழி போன்று அமைந்துள்ளது. கோட்டையின் உள்ளே கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஒரு திருமண மண்டபமாக செயல்படுகிறது. இதன் வெளிப்பகுதியில் சக்கம்மா, வீரபத்திரசாமி ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன.
இது சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டடுக்கு வரிசைகளில் பாதுகாப்பு இருந்துள்ளது. இப்பகுதியில் அழகிய மதிலும் கட்டடங்களும் இருந்துள்ளன. இக்கோட்டையின் மேற்கே குண்டாற்றின் கரையில் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.
கி.பி 1877 ஆம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தின் காரணமாகவோ, பெயர்த்தெடுத்ததன் காரணமாகவோ இக்கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கற்கள் தற்போது பெருமளவில் இல்லை. கற்கள் பெயர்ந்து போன நிலையில் கற்கோட்டையாக இல்லாமல் வெறும் செங்கல் கோட்டையாகவே இப்போது காட்சியளிக்கிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கற்கள் குண்டாறு மதகு அணையின் அருகில் சிதறிக் கிடக்கின்றன. கோட்டையில் இருந்த கற்களை பெயர்த்து எடுத்து கமுதி குண்டாற்றில் பாலம் கட்ட ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் கைப்பற்றிய பின்பு, 25.08.1801 இல் அவர்கள் இக்கோட்டையும் கைப்பற்றிக்கொண்டனர். பின்பு அவர்களிடமிருந்து மருது சகோதரர்கள் இக்கோட்டையைக் கைப்பற்றினர். ஆனால் மீண்டும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர்  கைப்பற்றி இதை இடித்து விட்டனர். அவர்கள் இடித்தது போக எஞ்சிய கோட்டையின் பகுதிகளே தற்போது நாம் காணும் இக்கோட்டை. 
கி.பி.1798 செப்டம்பர் 9 இல் கட்டபொம்மன் ஜாக்சன் துரையைச் சந்திக்க இராமநாதபுரம் வந்தபோது இக்கோட்டையில் தங்கிச் சென்றதால் இதை கட்டபொம்மன் கோட்டை எனவும் கூறுகின்றனர். இக்கோட்டை தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது. கோட்டை உள்ள இப்பகுதி கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது.

வட்ட வடிவமான கமுதிக் கோட்டை  - பறவைப் பார்வை
 
கோட்டையில் இருந்த இரண்டடுக்கு பாதுகாப்பு அமைப்பு
 
பாறை வெட்டி எடுக்கப்பட்ட பகுதி அகழி போல அமைந்துள்ளது
 
கண்காணிப்புக் கோபுரபகுதியில் உள்ள நாட்டுவீழி மூலிகை செடி
 
கோட்டையின் உள்பகுதி


No comments:

Post a Comment