Pages

Wednesday 11 May 2016

தொன்மையான திருப்புல்லாணி பொன்னம் கழிகானல் நீரோடை - வே.இராஜகுரு 
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள்  கோயில்
இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 9 கி.மீ தொலைவில் உள்ளது திருப்புல்லாணி. வடமொழியில் இவ்வூரை தர்ப்பசயனம் என்பர். இவ்வூரில் ஆதிஜெகநாதப் பெருமாளுக்குக் கோயில் உள்ளது. பாண்டி நாட்டில் உள்ள பதினெட்டு திவ்ய தேசங்களில் மிகவும் தொன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்தது இவ்வூர். இது திருமங்கையாழ்வாரால் 21 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லற் பொருட்டு இராமபிரான் வானர சேனையுடன் இலங்கைக்குச் செல்லும் வழியில், தென்கடற்கரை அடைந்து (சேதுக்கரை) கடலைக் கடக்க வழி சொல்லவேண்டும் என்று அக்கடலரசனான வருணணைப் வேண்டி, 7 நாட்கள் நாணல் புல்லைத் தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால் இது திருப்புல்லணை எனவும் தர்ப்பசயனம் எனவும் அழைக்கப்பட்டது. வடமொழியில்  தர்ப்பை என்பது புல்லையும் சயனம் என்பது உறக்கத்தையும் குறிக்கிறது.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கையாழ்வார் தனது பாசுரங்களில் புல்லாணி என்றே இவ்வூரைக் குறிப்பிடுகிறார். இதை புல் + ஆணி எனப்பிரித்து புல் நிறைந்த அழகிய ஊர் எனக் கொள்ளலாம். ஆணி என்பது மிகுதி காட்டும் விகுதி ஆகும். புல்லங்காடு, புல்லாரண்யம் ஆகியவை இவ்வூருக்கு வழங்கப்படும்  வேறு பெயர்கள்.
நாலாயிரந்திவ்விய பிரபந்தம் பெரிய திருமொழியில் எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருப்புல்லாணியின் சூழலை கீழ்க்கண்டவாறு திருமங்கையாழ்வார் வருணிக்கிறார். “மது ஒழுகுகின்ற மலர்களையுடைய செங்கழுநீர்களும் (அல்லி மலர்கள்), வெளுத்த மடல்களையுடைய கைதையும் (தாழை போன்ற தாவரம்), பலவகையான பறவைகளும், சேறுமிக்க வயல்களும், முத்துப் போன்ற பூக்களை உடைய புன்னை மரச்சோலைகளும், பொன் போன்ற மலர்களை உதிர்க்கும் அழகிய சுரபுன்னை மரங்களும், புலால் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளும், அழகிய மணிமாடங்களும்   சூழ்ந்த புல்லாணியில், முத்துக்களுடன் கலந்து அதிகமான வெண்மணற்களை மேலே எறட்டிக் கொண்டு வரும் வெளுத்த கடல் அலைகள் குதிரை போல் தாவி வந்து சங்குகளையும் இரத்தினங்களையும் ஒதுக்கித்தள்ளும். இங்குள்ள பொன்னம் கழிகானலில் பலவிதமான பறவையினங்கள் தங்கி இருக்கும்”

பொன்னம் கழிகானல் ஓடை. திருப்புல்லாணி கோயிலின் மேற்குப்பகுதியில் இவ்வோடை தூர்வாரப்பட்டு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

 
அவரால் குறிக்கப்படும் பொன்னம் கழிகானல் என்பது ஒரு நீரோடை ஆகும். இது இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் உற்பத்தியாகி,  அங்கிருந்து கீழக்கரை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி, இராஜசூரியமடை, தாதனேந்தல், பள்ளபச்சேரி வழியாக திருப்புல்லாணி  செல்கிறது. இவ்வூர் கோயிலின் மேற்குப் பக்கமாக ஓடி வலையனேந்தலைச் சுற்றி வந்து  கோரைக்குட்டம் என்ற இடத்தில் வைகையின் கிளை ஆறான கொட்டகுடி ஆற்றில் இணைந்து சேதுக்கரை கடலில் கலக்கிறது. திருமங்கையாழ்வார் காலத்தில் திருப்புல்லாணி  கோயிலின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் கடல் நீர் நிறைந்த உப்பங்கழியாக இவ்வோடை ஓடியிருந்திருக்க வேண்டும்.  இவ்வோடையின் கரையில் அமைந்திருந்த சோலையில் பலவிதமான பறவைகள் தங்கி இருந்திருக்கும் என நாம் ஊகிக்கமுடிகிறது. பொன்+அம்+கழிகானல் எனப்பிரித்து பொன் நிறமுடைய அழகான உப்பங்கழி என இதைப் பொருள் கொள்ளலாம். 

தூர்வாரப் படாத பகுதி

தற்போது இவ்வோடையின் ஒரு பகுதி மட்டும்  தூர்வாரப்பட்டு, மழைநீரை தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு பாரம்பரியப் பெருமை கொண்ட பொன்னம் கழிகானல்  நீரோடையை அது தொடங்கும் இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரை முழுஅளவில் ஆழப்படுத்தி பழமை மாறாமல் அதன் புனிதம் காக்கப்படவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகையின் கிளை ஆறான கொட்டகுடி ஆறு

No comments:

Post a Comment