இராமநாதபுரத்தில்
இருந்து 9 கி.மீ.
தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு
மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி
உயர்நிலைப்பள்ளி ஆகி 52
ஆண்டுகள் ஆன சிறப்பு பெற்றுள்ளது. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் கொண்டுள்ள 108 திவ்விய தேசங்களில் 44 வதாகப்
போற்றப்படுவது திருப்புல்லாணி ஆகும். இக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள இப்பள்ளி
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி ஆகும்.
இவ்வூர்
பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த இராயர் சத்திரத்தில் 12.05.1949 அன்று தொடக்கப்பள்ளி முதன்முதலில் தொடங்கப்பட்டது. இப்பள்ளி 27.06.1963 இல் பெருந்தலைவர் காமராஜர்
ஆட்சிக்காலத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்பு தற்போது
தொடக்கப்பள்ளி உள்ள இடத்தில் அரசால் 1950 இல்
கட்டப்பட்ட ஒரு கட்டடம் மற்றும் சோமசுந்தரம் சேர்வை என்பவரால் 1960 இல் கட்டி வழங்கப்பட்ட ஒரு கட்டத்திலும் பள்ளி செயல்பட்டு வந்தது.
இவ்வூரைச்
சேர்ந்தவரான இராமநாதபுரம் ஜெகன் திரையரங்க உரிமையாளர் ஜெகநாதன் அவர்கள்
இப்பள்ளிக்கு ரூ.10 இலட்சம்
மதிப்பில் நான்கு வகுப்பறைக் கட்டடம் கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளதால் 1999 இல் அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளியின் பெயரை சுரேஷ் சுதா
அழகன் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளி என தமிழகஅரசு பெயர் மாற்றம் செய்தது.
இப்பள்ளி
2006 இல் மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 500 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையம்
செயல்படுகிறது. இப்பள்ளியில் பயின்ற பலபேர் பலவித உயர்ந்த நிலையில் உள்ளனர்.
தற்போது
இப்பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கும் திருமதி மு.பிரேமா அவர்கள் இப்பள்ளிக்கு
வந்தது முதல் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக அரும்பாடுபட்டு வருகிறார். இதன்
காரணமாக, 1963 முதல்
உயர்நிலைப்பள்ளியாக செயல்படத்தொடங்கி ஐம்பது ஆண்டுக்கும் மேல் ஆன நிலையில் சென்ற 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் முதன்முதலில் நூறு சதவீத
தேர்ச்சியை இப்பள்ளி அடைந்து சாதனை படைத்தது. இப்பள்ளியில் பயிலும் பல மாணவர்கள்
முதல் தலைமுறை மாணவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
சென்னையில்
வசிக்கும் இப்பள்ளியின் பழைய மாணவி கெளரி என்பவர் ஒவ்வொரு ஆண்டும் பன்னிரண்டாம்
வகுப்பில் முதலிடம் பெறுபவர்க்கு ரூ.5000 மும்
இரண்டாமிடம் பெறுபவர்க்கு ரூ.3000 மும்
மூன்றாமிடம் பெறுபவர்க்கு ரூ.2000 மும்
ரொக்கப்பரிசு வழங்கி வருகிறார்.
இப்பள்ளி
பழைய மாணவர் சங்கத் தலைவர் மலைக்கண்ணன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு
மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்க்கு ரூ.2000 மும் இரண்டாமிடம் பெறுபவர்க்கு ரூ.1500 மும் மூன்றாமிடம் பெறுபவர்க்கு ரூ.1000 மும் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறார்.
இந்த
ஆண்டு 2016 ஆண்டு
மார்ச்சில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்
69 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97 ஆகும்.
476 மதிப்பெண் பெற்று சரண்யா என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம்
பெற்றுள்ளார். இம்மாணவியின் தந்தை கணபதி திருப்புல்லாணியில் ஆட்டோ டிரைவராக
உள்ளார். தன் மகள் அதிக மதிப்பெண் பெற்றது தனக்குப் பெருமை என்று கூறினார்.
முதலிடம் பெற்ற சரண்யா
|
இம்மாணவி பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் 95 ஆங்கிலம் 88 கணிதம் 96 அறிவியல் 99 சமூக
அறிவியல் 98 மொத்தம்
476
இரண்டாமிடம் பெற்ற அல்ஸொய்மா என்ற மாணவியின்
மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 99
ஆங்கிலம் 86 கணிதம் 88 அறிவியல் 97 சமூக
அறிவியல் 97 மொத்தம்
467
இரண்டாமிடம் பெற்ற அல்ஸொய்மா
|
மூன்றாமிடம் பெற்ற அபினா என்ற மாணவியின் மதிப்பெண்கள்
விவரம்: தமிழ் 97 ஆங்கிலம்
91 கணிதம் 89 அறிவியல்
91 சமூக அறிவியல் 98 மொத்தம்
463
மூன்றாமிடம் பெற்ற அபினா
|
பள்ளி அளவில் மூன்றாமிடம் பெற்ற அபினா என்ற
மாணவி ஆங்கிலப் பாடத்தில் 91
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் பள்ளி அளவில் ஆங்கிலப் பாடத்தில் பெற்ற அதிக மதிப்பெண்
இது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பள்ளி உயர்நிலைப்பள்ளியாகி 52 ஆண்டுகள் அடைந்துவிட்ட நிலையில் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் 95.2% மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறை. 400 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 17 பேர்.
மிகவும்
பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களே அதிகஅளவில் இப்பள்ளியில் பயிலுகிறார்கள்.
அடிப்படைத்திறன்களைக் கூட அடைந்திராத இம்மாணவர்களை தேர்வில் தேர்ச்சி பெறச்செய்ய
மிக அதிக அளவிலான முயற்சிகளை ஆசிரியர்கள் எடுக்கிறார்கள். தேவை ஏற்படும்போது சனி,
ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை
நாட்களிலும் கூட சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களை தேர்ச்சி
பெறவைப்பதிலும் பெற்றோர்களை பள்ளிக்கு வரவைத்து அவர்களின் ஒத்துழைப்பை பெற்று
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமையாசிரியர்
திருமதி மு.பிரேமா அவர்கள் தொடர் முயற்சி எடுத்து வருகிறார்கள். பள்ளியில்
கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மாணவியர், மாணாக்கர், ஆசிரியர்களுக்கு என தனித்தனியாக
ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அமைக்கப்பட்ட
உப்புநீரை குடிநீராக்கும் இயந்திரம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் தினசரி வழங்கப்படுகிறது. பள்ளிவளாகம் முழுவதும் மரங்கள் நடப்பட்டு
பசுஞ்சோலையாகத் திகழ்கிறது.
தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா
|
தமிழாசிரியர்களாக
திருமதி மாலா மற்றும் திருமதி கிருஷ்ணவேணி அவர்களும், ஆங்கில ஆசிரியராக திரு
வே.இராஜகுரு அவர்களும், கணித ஆசிரியர்களாக திருமதி த.கலையரசி மற்றும் திரு பாலாஜி அவர்களும்,
அறிவியல் ஆசிரியராக திரு கோ.இராமு அவர்களும், சமூக அறிவியல் ஆசிரியர்களாக திருமதி
ஹெலன் ஜாய்ஸ் நிர்மலா மற்றும் திருமதி வரலட்சுமி அவர்களும் இந்த ஆண்டு பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கு பாட ஆசிரியர்களாக பணியாற்றினார்கள். பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி
பெறச்செய்த அனைத்து ஆசிரியர்களையும் தலைமையாசிரியர் பாராட்டினார்கள்.
வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றி
Delete