தமிழர்கள் தாம் குடியிருந்த ஊர்களுக்கு காரணம் கொண்டே பெயர் சூட்டி
உள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் அவர்கள் பெயர் வைத்திருக்கும் காரணம் நம்மை பிரமிக்க
வைப்பதாகவே உள்ளது.
அவ்வகையில் வாடி எனப்பெயர் வைக்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும்
எனக் காணலாம். ஏர்வாடிக்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது என நண்பர் ஒருவர் என்னிடம்
கேட்டதும் அதுபற்றிய சிந்தனையே எனக்கு பல நாட்களாய் இருந்தது. வாடி என்பது வாடா
என்ற தெலுங்குச் சொல்லில் இருந்து உருவானதாக ஒரு நூலில் படித்தேன்.
மதுரை பகுதிகளில் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு
அவ்வாறு பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இம்மாவட்டக் கடற்கரை பகுதிகளில் வாடி
என்பது மீனவர் குடியிருப்பையே குறிக்கிறது. ஏனெனில் ஏர்வாடி போன்ற பல கடற்கரைப் பகுதிகளில் தெலுங்கு
பேசும் மக்கள் குடியிருக்கவில்லை.
உடனே கருவாடு என்ற சொல் எப்படி உருவாகி இருக்கும் என ஆய்வு செய்தேன்.
மீனை சூரிய ஒளியில் கருகி வாடச் செய்வதால்
கருவாடு உண்டாகிறது.
அதேபோல் மீனவர்கள் கடற்கரையில் மீனை வாடச் செய்யும் இடத்துக்கு ‘வாடி’
எனப் பெயராகி பின்பு அதுவே அவர்களின் குடியிருப்புக்கும் ஆகி இருக்க வேண்டும் எனப்
புரிந்துகொள்ள முடிந்தது.
மேலும் தமிழ் அகராதியில் வாடி என்பதன் பொருளாக தோட்டம், மதில், முற்றம்,
வீடு, மீன் உலர்த்துமிடம், பட்டி, சாவடி, காணிக்காரரின்
புல்வேய்ந்த மூங்கிற் குடிசை, அடைப்பிடம், விறகு மரம் முதலியன விற்குமிடம் என உள்ளது.
ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் வாடி என முடியும் ஊர்கள் அனைத்தும் கடற்கரையோரப்
பகுதிகளாகவே உள்ளன. எனவே இங்குள்ள வாடி என்பது மீனவர் குடியிருப்பையே குறிக்கிறது
என உறுதியாகக் கொள்ளலாம்.
இம்மாவட்டத்தில் ஏர்வாடி, அலவாய்க்கரைவாடி, தொத்தன்மகன்வாடி, முள்ளுவாடி,
தெற்குவாடி, நொச்சிவாடி, இடையர்வாடி, சித்தூர்வாடி, கோகுலவாடி, திருவாடி, குருவாடி
என பல ஊர்கள் வாடி எனப் பெயர் பெற்று விளங்குகின்றன.
ஏர்வாடி என்பதை ஏர் (ஏறு) +
வாடி எனப் பிரித்தால் ஏர் (ஏறு) என்பது உயரமானது எனவும் வாடி கருவாடை உலரவைக்கும்
இடம் எனவும் பொருளாகி கருவாடு உலரவைக்கும் உயரமான பகுதி எனப் பொருள் கொள்ளலாம். ஏர்வாடி
அப்பகுதியில் கொஞ்சம் உயரமான பகுதி தான்.
கீழக்கரை அருகில் உள்ள முள்ளுவாடி முள் சூழ்ந்த வாடி என்பதால் அப்பெயர்
பெற்றிருக்கலாம். அலவாய்க்கரைவாடியில் உள்ள அலைவாய்கரை என்பது அலவாய்க்கரை ஆகி
விட்டது. அலைவாய் என்பது கடலைக் குறிக்கும் சொல் ஆகும். கடற்கரை ஓரத்தில் உள்ள
வாடி என்பது இதன் பொருள். (திருச்செந்தூருக்கு திருச்சீரலைவாயில் என ஒரு பெயர்
உண்டு)
ஏர்வாடி அருகே உள்ள தொத்தன்மகன்வாடி என்பது தொத்தன்மகன் என்பவருக்குச் சொந்தமான வாடியாக
இருந்திருக்கலாம். பாம்பன் அருகில் உள்ள தெற்குவாடி என்பது ஊருக்கு தெற்கு
திசையில் அமைந்த வாடியாக இருக்கும். நொச்சிவாடி என்பது நொச்சி என்ற தாவரம் அதிகமாக
இருந்த பகுதி என்பதால் அப்பெயர் பெற்றிருக்கும்.
இடையர்வாடி (வேதாளை), கோகுலவாடி (சித்தார்கோட்டை) ஆகியவை யாதவர்கள்
அதிகமாக வசிக்கும் வாடி என்பதால் அப்பெயர் பெற்றுள்ளது. சித்தூர்வாடி என்பது சிறிய
ஊர் வாடி என்பதால் அப்பெயர் பெற்றுள்ளது. உப்பூர் அருகே உள்ள இவ்வூரில் உள்ள ரோமன்
கத்தோலிக்க தேவாலயம் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில்
பழமையானது ஆகும்.
அதேபோல் சாயல்குடி அருகில் உள்ளது குருவாடி. இதை குருவு + ஆடி என்பது
குருவாடி எனப் பிரிக்கலாம். குருகு என்ற சொல் பேச்சு வழக்கில் குருவு ஆகியுள்ளது. குருகு
என்பது அன்றில், கொக்கு, நாரை போன்ற பறவைகளைக் குறிக்கும் சொல் ஆகும். அதன் அருகில்
உள்ள மற்றொரு ஊர் கொக்காடி. இதை கொக்கு + ஆடி எனப் பிரிக்கலாம். கொக்கு நடமாடும் பகுதி
என்பதால் கொக்காடி என பெயர் வைத்திருப்பார்கள். இவ்வூர்கள் இரண்டுக்கும் பறவைகளைக்
கொண்டே பெயர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்திரக்குடி அருகில் உள்ள திருவாடி, என்பதில் உள்ள வாடி என்பது சாவடி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
14.05.2016 இராமநாதபுரம்
No comments:
Post a Comment