Pages

Wednesday, 1 November 2017

அழிந்து வரும் நெய்தல் நிலத்தின் அடையாளம்!! பேரிடரைத் தடுக்கும் தாழை மரங்கள்!!! - வே.இராஜகுரு



                       இராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் தாழை
வலையில் சிந்திய மீன்களையும், இறந்து ஒதுங்கிய உயிர்களையும் கொத்தித் தின்று கொண்டிருக்கும் கடற்பறவைகளும், மீன் உலர்த்தும் மணற்பரப்பு எங்கும் நிறைந்திருக்கும் புலால் நாற்றமும் சூழ்ந்த கடற்கரையில் தான் தாழம்பூவும் மலர்ந்து இனிய மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது.  இப்பூ பூக்கும் குறுமரம் தாழை. இதை கைதை எனவும் சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.  இலக்கியங்களில் நெய்தல் திணைக்குரிய மரமாக தாழை போற்றப்படுகிறது.
    தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கும் சிற்றாறுகளால் பல உப்பங்கழிகள் இயற்கையாக உருவாகியுள்ளன. வாலிநோக்கம், நரிப்பையூர், மாரியூர், மூக்கையூர், தனுஷ்கோடி  போன்ற  பல ஊர்களின் கடற்கரைகள் அழகிய வெண்மணற்பரப்பை கொண்டு விளங்குகின்றன. இப்பகுதிகளில் சங்க இலக்கியங்கள் வருணிக்கும் நெய்தல் நிலத்தின் சுவடுகளை இப்போதும் காணலாம்.
இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளிலும், மணற்பரப்புகளிலும் இயற்கையாக வளர்ந்து மணம் பரப்பும் தாழை மரங்கள், இராமேஸ்வரம் தீவுப் பகுதிகள், மேலமுந்தல் தாழையடி ஏழுபிள்ளை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில்  காணப்படுகின்றன.
அமைப்பு
பாண்டேசி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இது, ஒருவித்திலைத் தாவரம் ஆகும். இதன் தாவரவியல் பெயர் பாண்டனஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius) ஆகும். இதன் இலையில் முள் இருக்கும். மணற்பாங்கான கடற்கரைப்பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்களில் இது அதிகளவில் வளர்கிறது. இம்மரம் 25 அடி வரை உயரமாக வளரும்.

இராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் உள்ள  கனி காய்த்துள்ள  பெண் தாழைமரம்

இதன் அடிமரத்தில் விழுதுகள் உண்டு. இது மடலாகப் பூக்கும். இதன் பூவில் ஆண் பெண் வேறுபாடு உள்ளது. ஆண் பூ தான் மணமிக்க தாழம்பூ. வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் இப்பூ ஒரே நாளில் கீழே விழுந்து விடும். ஆண்மலர் காய் காய்ப்பதில்லை. பெண் வகையில் பூவும், காயும் அன்னாசிப்பழம் போன்ற அமைப்பில் இருக்கும். இராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் பகுதியில் பெண் மரம் அதிகளவில் காணப்படுகிறது.
தாழையின் சிறப்புகள்
தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை கைதை எனவும் கூறுகிறார்கள். குறிஞ்சிப்பாட்டில் 83வது மலராகக் குறிப்பிடப்படும் கைதை, தாழையின் மலரான தாழம்பூ ஆகும். நம்புதாழை, வேதாழை, தாழையூத்து, பூந்தாழை, தாழைக்காடு, தாழையூர் என பல ஊர்கள் தாழையின் பெயரால்  உருவாகியுள்ளன.  இது நெய்தல் நிலத்திற்குரிய மரம் ஆகும். தாழம்பூ கைதகப் பூ என சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.
இலக்கியங்களில் தாழை
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தாழை குறிப்பிடப்படுகிறது. தலைவிரித்த பேய் போல தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ளதாக அகநானூறில் வெங்கண்ணனார் கூறுகிறார்.
நாரை கோதுகின்ற சிறகு போல, தாழையின் மொட்டுகள் விரிந்து மலர்வதாக  குறுந்தொகையும், தாழம்பூ அன்னப்பறவை போல மலர்வதாக சிறுபாணாற்றுப்படையும் கூறுகின்றன.  
 இலையில் உள்ள முட்கள் சுறா மீனின் பற்கள் போலவும்,  சொரசொரப்பான தாழையின் அடிப்பகுதி இறால் மீனின் முதுகு போலவும், கூர்மையான முனை  உள்ள இதன் மொட்டு  யானையின் தந்தம் போலவும்,  மலர் முதிர்ந்து தலை சாய்த்து நிற்பது மான் தலை சாய்த்து நிற்பது போலவும், தாழம்பூ மலர்ந்து மணம் பரப்புவது, விழா நடைபெறும் இடத்தில்  கமழும் தெய்வ மணம் போலவும் உள்ளதாக  நற்றிணையில் நக்கண்ணையார் கூறுகிறார்.

                                   மேலமுந்தல் தாழை மடல்கள் (இலை)

சிவனின் முடியை பிரம்மா கண்டதாகக் கூறியதற்கு பொய்சாட்சியாக தாழம்பூ இருந்ததால் சாபம் பெற்று, அம்மலர் சிவவழிபாட்டிலிருந்து விலக்கப்பட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. பின் தாழம்பூவின் வேண்டுகோளை ஏற்று மகா சிவராத்திரி மூன்றாம் ஜாமப்பூஜையில் தாழம்பூ பயன்படுத்த சிவன் அருளினார். ஆனால் உத்தரகோசமங்கை கோயிலில் மட்டும் வழிபாட்டில் தாழம்பூ சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மேலமுந்தல் தாழையடி ஏழுபிள்ளை காளியம்மன் கோயிலில் உள்ள தாழை மரம்

தாழையின் மகரந்தத்தூளை திருநீறு என்பர். நீறு பூசியும் சிவன் தலையில் அது இடம்பெறவில்லை என குமரகுருபரர் பாடுகிறார். நாலாயிரந்திவ்விய பிரபந்தம் பெரிய திருமொழியில் எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருப்புல்லாணியின் சூழலை வருணிக்கும்போது வெளுத்த மடல்களையுடைய கைதை (தாழை) இங்கு இருந்ததாக திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது அங்கு இம்மரம் இல்லை.
பயன்கள்
மணமிக்க தாழம்பூ கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அம்மைநோய் கண்ட வீட்டில் தாழம்பூவைக் கட்டித் தொங்க விடுவதால் அக்கிருமிகள் அழிகின்றன. ஓலைச் சுவடிகளை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க இப்பூ பயன்படும். இதன் காயை அழகுக்காக விழாப்பந்தலில் கட்டித் தொங்கவிடுவர். இதன் விழுது வீட்டிற்கு வெள்ளையடிக்கவும், நார் ஊஞ்சலாடவும் பயன்படுகிறது. இதன் ஓலையில் இருந்து தாழைப்பாய் உருவாகிறது. தாழம்பூவில் இருந்து வாசனைத் தைலம் எடுக்கப்படுகிறது. இதன் வேர்க்கிழங்கு மருந்தாகப் பயன்படுகிறது.
பாதுகாக்க வேண்டும்
ஐவகை நிலங்களில் முல்லை, நெய்தல், பாலை நிலப்பகுதியாக விளங்கும் இம்மாவட்டத்தில் முள்மரங்கள் வளர்ந்து செழித்திருப்பதால், பாரம்பரிய நிலம் சார்ந்த மரங்கள் அழிந்து வருகின்றன. இதனால் இயல்பான இயற்கைச் சூழ்நிலை மாறிவருகிறது. தாழை மரங்களை கடற்கரைப் பகுதிகள் முழுவதும் அடர்த்தியாக வளர்த்து மண்ணரிப்பில் இருந்தும் கடல் சீற்றத்திலிருந்தும் இப்பகுதிகளை பாதுகாக்கவேண்டும்.
நாளிதழ் செய்திகள்





இணைய இதழ்கள் 




No comments:

Post a Comment