Pages

Saturday 21 October 2017

திருவாடானை அருகே மேல அரும்பூரில் சேதுபதிகள் கால சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு




சேதுபதிகள் கால சூலக்கல் கல்வெட்டை படி எடுக்கும் வே.இராஜகுரு, பெத்தையா, மோ.விமல்ராஜ் ஆகியோர்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மேலஅரும்பூர் கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குளக்கரையில் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுள்ள சூலக்கல், சோழர்காலத்தைச் சேர்ந்த இரு சூலக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்லைக்கல்
மன்னர்கள், கோயில்களில் தினசரி வழிபாடு நடைபெறுவதற்காக விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி கோயில்களுக்கு அவற்றைத் தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். அவ்வாறு வழங்கிய நிலத்தின் நான்கு மூலைகளிலும் எல்லைக்கல் நட்டுவைப்பார்கள். சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் திரிசூலம் பொறித்த கல்லும் திருமால் கோயிலுக்கு சங்கு சக்கரம் பொறித்த கல்லும் நடுவர்.    
இந்நிலையில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு,  ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் மேற்கொண்டிருந்த களஆய்வின் போது, மேலஅரும்பூரைச் சேர்ந்த பெத்தையா அவ்வூரில் பழமையான கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் இருப்பதாகச் சொன்னார். அங்கு ஆய்வு செய்தபோது அதன் குளக்கரையில் கல்வெட்டுடன் கூடிய ஒரு சூலக்கல்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,
சூலக்கல் அமைப்பு
“மேலஅரும்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட சூலக்கல் புல்லுகுடி சிவன்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் இருந்தது ஆகும். 2.5 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள கல்லின் நடுவில் திரிசூலமும், அதன் இடது வலது புறங்களில் சூரியனும், பிறையும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்லின் நான்கு பக்கமும் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு செய்தி
கி.பி.1711 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெயரால் விளத்தூர் திருவினாபிள்ளை என்பவர்  புல்லுகுடியில் உள்ள கயிலாசநாதசுவாமி கோயிலுக்கு அரும்பூரில் உள்ள நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். இதை செப்புப்பட்டயமாக சாமபிறான் (மந்திரி) கொடுத்துள்ளார் என்பதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இடப்பற்றாக்குறை காரணமாக தகவல்களும்,  பெயர்களும் சுருக்கமாக வெட்டப்பட்டுள்ளன. மன்னர் பெயர் விசையரனாத சேதுபதி காத்த தேவர் என உள்ளது.
கல்வெட்டில் தானம் வழங்கப்பட்ட  நிலம் எங்குள்ளது என்ற தகவல் இல்லை. தானம் கொடுத்த நிலத்தில் எல்லைக்கற்கள் நடுவது வழக்கம் என்பதால் மேலஅரும்பூரில் சூலக்கல் உள்ள நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.  
சேதுபதி கால சூலக்கல்
 கி.பி.1201 ஆம் ஆண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டில் புலிகுடி என இருந்த ஊர், சேதுபதிகள் காலத்தில் புல்லுகுடி என மாறியுள்ளது. புல்லுகுடி மேலஅரும்பூரிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ஆண்டு
தமிழ் ஆண்டு விகாரி தை மாதம் 26 ஆம் நாள் தானம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆங்கில ஆண்டு கி.பி.1720 ஆகும். ஸ்ரீமது எனத் தொடங்கும் இக்கல்வெட்டு, சந்திராதித்தவர்க்கு என முடிகிறது. இக்கல்வெட்டில் 32 வரிகள் உள்ளன. இரண்டு மூன்று எழுத்துகள் ஒரு வரியாக உள்ளது. சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த முதல் சூலக்கல் கல்வெட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவன்கோயில் பின்புறம் உள்ள சூலக்கல்
 சோழர்கால சூலக்கற்கள்
மேல அரும்பூர் உத்தமபாண்டீஸ்வரர் கோயில் பின்புறம் ஒன்றும்,  கருப்பசாமி கோயில் குளத்தில் ஒன்றுமாக மேலும் இரண்டு சூலக்கற்கள் இங்கு உள்ளன. இவை சோழர்கால கலை அமைப்பில் உள்ளன. இவ்வூர் அல்லது புல்லுகுடி சிவன் கோயிலுக்கு பிற்காலச் சோழர் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்டு இந்த சூலக்கற்கள் நடப்பட்டிருக்கலாம். இவற்றில் கல்வெட்டுகள் எதுவும் இல்லை.

கருப்பசாமி கோயில் குளத்தில் உள்ள சூலக்கல்


நாளிதழ் செய்திகள்
 









No comments:

Post a Comment