Pages

Saturday 22 August 2015

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே சுமார் 23௦௦ ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த இரு ஊர்கள் கண்டுபிடிப்பு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்யக் கோரிக்கை

  
கானத்திடல் பகுதியில் உள்ள பண்ணைக்குட்டை
தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களில் மிகப்பழமையானவர்கள் பாண்டியர்களே. பாண்டிய மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாக இராமநாதபுரம் மாவட்டம் விளங்குகிறது. இராமேஸ்வரம் போன்ற ஊர்களின் இராமாயணத் தொடர்புகளால் உலகப்புகழ் பெற்ற இம்மாவட்டத்தின் தொன்மையான வரலாறு, அழகன்குளம் மற்றும் தேரிருவேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

      அழகன்குளம் கி.மு.500 முதல் கி.பி.1200 வரை வெளிநாடுகளுடன் வாணிபம் செய்து பிரபலமாக இருந்த துறைமுக நகரம் ஆகும். தேரிருவேலி வரலாற்றுக் காலமான கி.மு.300 முதல் கி.பி.300 வரை மக்கள் வாழ்ந்த ஒரு ஊர் ஆகும்.
      ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம், தேரிருவேலி ஆகிய இரு இடங்களும் ரோமானியர் வணிக மையம் என்பது அறியப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரை அருகில் கீழடியில் மத்திய தொல்லியல் துறையால் செய்யப்பட அகழாய்வு மூலம் அப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வைகையின் கரையில் 293 சங்ககால ஊர்கள் இருந்ததை மத்திய  தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

      இராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணி செல்லும் வழியில் கீழச்சீத்தை என்ற ஊரில் கானத்திடல் என்ற பகுதியில் பண்ணைக் குட்டை தோண்டிய இடத்தில், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றப் பொறுப்பாசிரியர் (Convener of Heritage Club)  வே.இராஜகுரு, இராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் க.இராஜமோகன், தொன்மைப் பாதுகாப்பு மன்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் முத்துக்குமார், இராபிட் ராஜ்குமார், விஜயகுமார், அழகேஸ்வரன், முரளிதரன், சக்திமுருகன், இரமேஸ்கண்ணன்,

பதினோராம் வகுப்பு மாணவன் முனியசாமி ஆகியோர் கள மேற்பரப்பாய்வு (Field Exploration) செய்தபோது, ரோமானிய ரௌலெட்டட் ஓடுகள் (Roman Rouletted Sherds), சீன போர்சலின் ஓடுகள் (Chinese Porcelain Sherd), கருப்பு சிவப்பு பானை ஓடுகள் (Black and Red Ware), சிவப்பு பானை ஓடுகள் (Red Ware), சிறு இரும்புக்கோடரி (Iron Axe), இரும்புத்தாதுக்கள் (Iron Ore), இரும்புக்கழிவுகள் (Iron Slags), குறியீடு உள்ள பானை ஓடுகள் (Pot Sherds with Graffiti Marks), நெசவுத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் தக்களி (Spindle Whorls), பாண்டி ஆட்டத்துக்குரிய சில்லுகள் (Hopscotches), சுடுமண் விளக்கு (Terracotta lamp), மான்கொம்புகள் (Deer Horns), மணிகள் செய்யப் பயன்படும் கற்கள், தேய்ப்புக் கற்கள் (Rubbing Stones), சங்குகள் (Conches), பவளப்பாறைகள் (Coral Reefs) ஆகியவற்றைக் கண்டு பிடித்தனர்.


கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்
அப்பகுதியில் 2 கி.மீ. சுற்றளவில் இத்தகைய ஓடுகள்  சிதறிக் கிடக்கின்றன. இங்கு கண்டெடுத்த பழம்பொருள்களைக் கொண்டு இங்கு சங்ககாலத்தில் ஒரு நகரம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கருப்பு சிவப்பு பானை ஓடுகள்  கி.மு.300 முதல் கி.பி.200 வரையிலான சங்ககாலத்தில் மக்களால் அதிகமாகப்  பயன்படுத்தப்பட்டதால் இதை சங்ககாலப் பானை ஓடுகள் என்றே தொல்லியல் வல்லுநர்கள் அழைக்கிறார்கள்.
   


சுடுமண் விளக்கு

      ரோமானிய ரௌலெட்டட் ஓடுகள், சீன போர்சலின் ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளதன் மூலம் இவ்வூரார், ரோமானியர் மற்றும் சீனர்களுடன் வணிகம் செய்திருப்பது உறுதியாகிறது. இம்மாவட்டத்தின் பழமையான ஊர்களாக அறியப்பட்டுள்ள  அழகன்குளம், தேரிருவேலி ஆகியவை ரோமானிய வணிக மையங்களாகும். ரோமானியர் கி.மு.300 முதல் கி.பி.100 வரை தமிழகத்துடன் வணிகம் செய்துள்ளனர். சீனர்கள் தமிழகத்துடன் கி.பி. 1௦௦௦ முதல் கி.பி.12௦௦ வரை நேரடி வணிகம் செய்துள்ளனர். எனவே இவ்வூர் கி.மு.300 முதல் கி.பி.1200 வரையிலான காலத்தில் சுமார் 15௦௦ ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கி இருந்திருக்கும்.
  


      இங்கு நெசவுத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் தக்களி கிடைத்துள்ளது. இதைக்கொண்டு நூல் நூற்கப் பயன்படுத்தி இருக்கலாம். இந்நூலைக் கொண்டு ஆடை நெய்து இருக்கலாம்.  அழகன்குளம், தேரிருவேலியிலும் இத்தகைய தக்களிகள் கிடைத்துள்ளன.

      சிறிய அளவிலான இரும்புக்கோடரி, இரும்புத்தாதுக்கள், இரும்புக்கழிவுகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடைபெற்று இருந்திருக்கும்.
  



சங்குகள், பவளப்பாறைகள், மான் கொம்புகள் கிடைத்ததன் மூலம் இவற்றை  இவ்வூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பார்கள் என அறிய முடிகிறது.  தமிழகத்திலிருந்து மான்கொம்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டதை சங்கப்பாடல்கள் மூலம் அறியலாம்.
    



      மணிகள் செய்யப் பயன்படுத்தும் கற்கள், தேய்ப்புக் கற்கள் கிடைத்துள்ளதால் இங்கு மணிகள் தயாரிக்கும் தொழில் நடந்திருக்கலாம். சுடுமண்ணலான விளக்கும் உடைந்த சுடுமண் உருவங்களும் கிடைத்துள்ளன.




            கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், பழுப்பு நிற பானை ஓடுகள் சிலவற்றில் குறியீடுகள் காணப்படுகின்றன. திரிசூலம் (Trident) குறியீடு இரண்டிலும், ஏணி (Ladder) குறியீடு இரண்டிலும் உள்ள ஓடுகள் கிடைத்துள்ளன. இத்தகைய குறியீடுகள் அழகன்குளத்திலும் கிடைத்துள்ளன. இதுபோன்ற குறியீடுகளில் இருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

      மேலும் கீழச்சீத்தையில் இருந்து 2 கி.மீ.  தூரத்தில் உள்ள வெள்ளா மறிச்சுக்கட்டி கண்மாயில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் கூரை ஓடுகள் கிடைத்துள்ளதால் அந்த இடத்திலும் சங்ககாலத்தில் ஒரு ஊர் இருந்திருக்கும் என அறியமுடிகிறது.

      இவ்விரு இடங்களும் தேரிருவேலியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளன. இது மதுரை செல்லும் வணிகப்பாதையாக இருந்திருக்கலாம். எனவே இப்பகுதியில் தொல்லியல் துறையினர் முழு அளவிலான அகழாய்வு செய்து இவ்வூர் பற்றிய வரலாற்றுச் சிறப்பை அனைவரும் அறியச் செய்யவேண்டும்.

 கள மேற்பரப்பாய்வு பணியில்  திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு  மன்றத்தினரும் மருத்துவரும் 






 
 

Saturday 8 August 2015

‘பேக்கரும்பு’ பெயர் காரணம் - தி இந்து

அப்துல் கலாம் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் ராமேசுவரத்தையொட்டிய பேக்கரும்பு என்கிற இடமாகும். இந்த பேக்கரும்பு பெயர் காரணம் குறித்து, ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.இராஜகுரு கூறியதாவது: 


இராமேசுவரம் தீவில் வேளாண் தொழில் செய்வதற்கு கலப்பையைப் பயன்படுத்துவது இல்லை. ராமரின் பாதங்கள் பட்ட புண்ணிய பூமியில், ஏர் பூட்டி உழும் தொழில் செய்யக் கூடாது. மீறி செய்தால் லிங்கம் முளைக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.
ராமேசுவரம் அருகே 4 கி.மீ தொலைவில் பஞ்ச கல்யாணி ஆற்றையொட்டி எருவை என்ற செடியினத்தின் ஒருவகை புல் வளர்கிறது. நாணல் செடி போல வளரும் இது துளை உடைய செடி இனமாகும். இந்த புல் கரும்பைப் போல காணப்பட்டதால் ‘பேக்கரும்பு’ (பே-என்றால் இல்லை என்று பொருள்) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இப்பகுதியில் குடியிருப்புகள் உண்டான பிறகு, மக்கள் அந்த பகுதியையே ‘பேக்கரும்பு’ என்று அழைத்ததாக கூறினார்.

உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு அமைக்கப்பட்ட மாலைக்கோயில்கள் - வே.இராஜகுரு



போர், பூசல் மற்றும் பிற காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்ககாலம் முதல் தமிழரிடையே காணப்படும் வழக்கம்.
நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால்  இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோயில் மாலைக்கோயில் எனப்படுகிறது.
இது நடுகற்களின் வகைகளில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் அமைக்கப்படும் நடுகல் சிற்பத்தில் கணவனுடன் மனைவி இருப்பது போன்று அமைக்கப்படும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதைக்காட்ட சிலையில் அவள் கையை உயர்த்தி இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.  கையில் வளையல் போன்ற அணிகலன்கள் அணிந்தவளாக அப்பெண் காணப்படுவாள். மனைவியின் உருவம் வீரனின் உருவத்தை விடச் சிறியதாகவோ கைகள் மட்டுமோ அமைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
இத்தகைய நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோயிலாக அமைத்து வழிபட்டு வருவது வழக்கம். இதை மாலையீடு, மாலையடி, தீப்பாய்ஞ்ச அம்மன் கோயில், மாலைக்காரி, சீலைக்காரி அம்மன் கோயில் என்றும் அழைப்பர்.
இறந்த மனிதனின் உருவத்தை கல்லில் வடிக்கும் போது அவ்வுருவத்துக்குக் காது, கழுத்து, கை, கால் போன்ற உறுப்புகளில் ஆபரணங்கள் அணிவித்தும் தலையில் அழகான கொண்டையைச் செதுக்குவதும் இருந்துள்ளது. தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்று சிற்பம் செதுக்கும் முறை நடுகல்லில் இல்லை. மாலை என்பதற்கு பெண் எனவும் பொருளுண்டு.
நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் விதவைப்பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் கணவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாக போற்றிக்கொண்டாடினார்கள்.இதனால் அவர்களாகவே உடன்கட்டை ஏற விரும்பி இருந்திருக்கலாம். மேலும்  மன்னர்கள், போர்வீரர்கள் மட்டுமின்றி உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் மனைவியரும்  நாயக்க மன்னர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறி உள்ளனர். கிழவன் சேதுபதி இறந்தபின்  அவரின் 47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியதாக வரலாறு உள்ளது.
      திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான வே.இராஜகுரு,  இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் நான்குகால் மண்டபம் போன்ற அமைப்பில்  இருந்த மூன்று பழமையான கட்டடங்களை ஆய்வு செய்தபோது அவை மாலைக்கோயில்கள் என கண்டறிந்தார். 

நரிப்பையூர் தரவையில் உள்ள 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  மாலைக்கோயில்

பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் இரண்டு மாலைக்கோயில்களும், கிழக்குக் கடற்கரைச்சாலையில் தரவைப் பகுதியில் ஒரு மாலைக்கோயிலும்  உள்ளன. இருகோயில்களில் நடுகல்  சிற்பம் ஏதுமில்லை. மற்றொன்றில் பாதி உடைந்த நிலையில் கருங்கல்லிலான நடுகல் உள்ளது.
இந்த நடுகல்லில், நிற்கும் வீரனின் சிற்பம் உள்ளது. உடைந்து போன பகுதியில் பெண்ணின் சிற்பம் இருந்திருக்கலாம். உள்ளூர் மக்கள் இக்கோயில்களை மாலையடி என அழைக்கிறார்கள். இக்கோயில்கள் தற்போது மக்கள் வழிபாட்டில் இல்லை. அது தொடர்பான தகவல்கள் வேறு எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. இவற்றில்  கல்வெட்டுகள் எதுவும்  இல்லாததால் இது யாருக்காக கட்டப்பட்ட  மாலைக்கோயில்கள் என அறிய முடியவில்லை.
 

பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பாண்டியர் கால மாலைக்கோயில்



இதில் இரண்டு கோயில்கள் கோபுரம் போன்ற அமைப்புடனும் ஒன்று மொட்டைக் கோபுரமாகவும் உள்ளன. கோபுரம் இல்லாத மாலையடி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கட்டடக்கலை அமைப்பில் உள்ளது. இதன் நடுவில் சிலை இருந்து வழிபட்டதற்கான தடயம் உள்ளது.


பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஒரு மாலைக்கோயில். இதில்  நடுகல் உள்ளது

பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு மாலைக்கோயிலில் பாதி உடைந்த நிலையில் உள்ள நடுகல்

மற்ற இரண்டும் 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம். இம்மூன்று கோயில்களும்   மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன. 
கொக்கரசன்கோட்டை மாலைக்காரி கோயில்

இதேபோல் சாயல்குடி அருகே கொக்கரசன்கோட்டை என்ற ஊரில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு மாலைக்காரியம்மன் கோயில் உள்ளது. இவ்வூரில் வசதி வாய்ப்புடன் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், குதிரையில் வந்தபோது இடறி விழுந்து இறந்துவிட்டார். அவருடன் அவர் மனைவியும் உடன்கட்டை ஏறினார். இதனால் அப்பெண்ணின் விருப்பப்படி அவருடைய வம்சாவளியினர் இக்கோயிலைக் கட்டி குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இக்கோயில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் தற்போதும் வழிபாட்டில் உள்ளது.
 

கொக்கரசன்கோட்டை மாலைக்காரியம்மன் தன் கணவனுடன் கையை மேலே உயர்த்திய நிலையில் கையில் வளையல்களுடன்

  
           தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் என்ற ஊரில் சிவபெருங்குன்றம் என்ற பகுதியில் ஒரு மாலைக்கோயில் உள்ளது.  இது வேட்டைக்குப் போன போர் வீரன் ஒருவன்,  பாம்பு கடித்து இறந்த பின்பு அவன் மனைவி அவனுடன் உடன்கட்டை ஏறி இறந்ததின் நினைவாக அமைக்கப்பட்ட மாலைக்கோயில் ஆகும்.  மறவர் சமுதாயத்தினரின் குலதெய்வமாக அவர்களின் வம்சாவளியினரால் தற்போதும்  வழிபடப்பட்டு வருகிறது. இக்கோயிலும் கொக்கரசன் கோட்டை மாலைக்கோயிலும் ஒரே காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது. வேம்பார் நரிப்பையூரில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.
வேம்பார் மாலைக்கோயில்

வேம்பார்மாலைக்கோயில் நடுகல்