போர்,
பூசல் மற்றும் பிற காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள்
நட்டு வழிபாடு செய்வது சங்ககாலம் முதல் தமிழரிடையே காணப்படும் வழக்கம்.
நிரை
கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன்
சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு
அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோயில் மாலைக்கோயில் எனப்படுகிறது.
இது
நடுகற்களின் வகைகளில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் அமைக்கப்படும் நடுகல் சிற்பத்தில்
கணவனுடன் மனைவி இருப்பது போன்று அமைக்கப்படும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள்
என்பதைக்காட்ட சிலையில் அவள் கையை உயர்த்தி இருப்பது போன்று
அமைக்கப்பட்டிருக்கும். கையில் வளையல்
போன்ற அணிகலன்கள் அணிந்தவளாக அப்பெண் காணப்படுவாள். மனைவியின் உருவம் வீரனின்
உருவத்தை விடச் சிறியதாகவோ கைகள் மட்டுமோ அமைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
இத்தகைய
நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோயிலாக அமைத்து வழிபட்டு வருவது வழக்கம். இதை
மாலையீடு, மாலையடி, தீப்பாய்ஞ்ச அம்மன் கோயில், மாலைக்காரி, சீலைக்காரி அம்மன்
கோயில் என்றும் அழைப்பர்.
இறந்த
மனிதனின் உருவத்தை கல்லில் வடிக்கும் போது அவ்வுருவத்துக்குக் காது, கழுத்து, கை,
கால் போன்ற உறுப்புகளில் ஆபரணங்கள் அணிவித்தும் தலையில் அழகான கொண்டையைச்
செதுக்குவதும் இருந்துள்ளது. தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்று சிற்பம்
செதுக்கும் முறை நடுகல்லில் இல்லை. மாலை என்பதற்கு பெண் எனவும் பொருளுண்டு.
நாயக்க
மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் விதவைப்பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள்
வைக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் கணவனுடன் உடன்கட்டை ஏறி
இறந்துபோன பெண்களை தெய்வமாக போற்றிக்கொண்டாடினார்கள்.இதனால் அவர்களாகவே உடன்கட்டை
ஏற விரும்பி இருந்திருக்கலாம். மேலும் மன்னர்கள்,
போர்வீரர்கள் மட்டுமின்றி உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் மனைவியரும் நாயக்க மன்னர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறி
உள்ளனர். கிழவன் சேதுபதி இறந்தபின் அவரின்
47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியதாக வரலாறு உள்ளது.
திருப்புல்லாணி
அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல்
ஆர்வலருமான வே.இராஜகுரு, இராமநாதபுரம் மாவட்டம்
நரிப்பையூரில் நான்குகால் மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த மூன்று பழமையான கட்டடங்களை ஆய்வு
செய்தபோது அவை மாலைக்கோயில்கள் என கண்டறிந்தார்.
நரிப்பையூர் தரவையில் உள்ள 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாலைக்கோயில்
|
பாரதமாதா
உயர்நிலைப்பள்ளி எதிரில் இரண்டு மாலைக்கோயில்களும், கிழக்குக் கடற்கரைச்சாலையில்
தரவைப் பகுதியில் ஒரு மாலைக்கோயிலும் உள்ளன.
இருகோயில்களில் நடுகல் சிற்பம் ஏதுமில்லை.
மற்றொன்றில் பாதி உடைந்த நிலையில் கருங்கல்லிலான நடுகல் உள்ளது.
இந்த
நடுகல்லில், நிற்கும் வீரனின் சிற்பம் உள்ளது. உடைந்து போன பகுதியில் பெண்ணின்
சிற்பம் இருந்திருக்கலாம். உள்ளூர் மக்கள் இக்கோயில்களை மாலையடி என
அழைக்கிறார்கள். இக்கோயில்கள் தற்போது மக்கள் வழிபாட்டில் இல்லை. அது தொடர்பான
தகவல்கள் வேறு எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. இவற்றில் கல்வெட்டுகள் எதுவும் இல்லாததால் இது யாருக்காக கட்டப்பட்ட மாலைக்கோயில்கள் என அறிய முடியவில்லை.
இதில் இரண்டு
கோயில்கள் கோபுரம் போன்ற அமைப்புடனும் ஒன்று மொட்டைக் கோபுரமாகவும் உள்ளன. கோபுரம்
இல்லாத மாலையடி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கட்டடக்கலை அமைப்பில்
உள்ளது. இதன் நடுவில் சிலை இருந்து வழிபட்டதற்கான தடயம் உள்ளது.
பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு
மாலைக்கோயில். இதில் நடுகல் உள்ளது
|
பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு மாலைக்கோயிலில் பாதி
உடைந்த நிலையில் உள்ள நடுகல்
|
மற்ற
இரண்டும் 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம்.
இம்மூன்று கோயில்களும் மணற்கற்களால்
கட்டப்பட்டுள்ளன.
கொக்கரசன்கோட்டை மாலைக்காரி கோயில் |
இதேபோல் சாயல்குடி
அருகே கொக்கரசன்கோட்டை என்ற ஊரில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு
மாலைக்காரியம்மன் கோயில் உள்ளது. இவ்வூரில் வசதி வாய்ப்புடன் இருந்த குடும்பத்தைச்
சேர்ந்த ஒருவர், குதிரையில் வந்தபோது இடறி விழுந்து இறந்துவிட்டார். அவருடன் அவர்
மனைவியும் உடன்கட்டை ஏறினார். இதனால் அப்பெண்ணின் விருப்பப்படி அவருடைய வம்சாவளியினர்
இக்கோயிலைக் கட்டி குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இக்கோயில் 18ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் தற்போதும் வழிபாட்டில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் என்ற ஊரில் சிவபெருங்குன்றம் என்ற
பகுதியில் ஒரு மாலைக்கோயில் உள்ளது. இது வேட்டைக்குப் போன போர் வீரன்
ஒருவன், பாம்பு கடித்து இறந்த பின்பு அவன் மனைவி அவனுடன் உடன்கட்டை ஏறி
இறந்ததின் நினைவாக அமைக்கப்பட்ட மாலைக்கோயில் ஆகும். மறவர்
சமுதாயத்தினரின் குலதெய்வமாக அவர்களின் வம்சாவளியினரால் தற்போதும்
வழிபடப்பட்டு வருகிறது. இக்கோயிலும் கொக்கரசன் கோட்டை மாலைக்கோயிலும் ஒரே
காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது. வேம்பார் நரிப்பையூரில் இருந்து 6 கி.மீ
தூரத்தில் உள்ளது.வேம்பார் மாலைக்கோயில் |
வேம்பார்மாலைக்கோயில் நடுகல் |
No comments:
Post a Comment