Pages

Monday 13 August 2012

சித்தன்னவாசல் – இயற்கை குகையில் சமணர் கற்படுக்கைகள்Ý                சித்தன்னவாசல் மலையின் கீழ்த்திசையில் உள்ள பாறையில் இயற்கையாக அமைந்துள்ள குகை காணப்படுகிறது.
Ý         இக்குகை ஏழடிப்பாட்டம் என அழைக்கப்படுகிறது. இக்குகையில் வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் கூடிய 17 கற்படுக்கைகளைக் காணலாம்.
Ý இவற்றுள் மிகப்பெரியதும், பழமையுமான படுக்கையில் தமிழ்க் கல்வெட்டொன்று தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Ý     கி.மு.3-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு எவுமி நாட்டு குமட்டூர் பிறந்த காவிதி ஈதன்கு சிறுபோசில் இளையான் செய்த அதிட்டானம் (கோயில்) என்று கூறுகிறது.
Ý     இதைத்தவிர கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஓன்றில் கடுந்தவம் புரிந்த சமணத் துறவிகளைப் பற்றியும் அறியமுடிகிறது.
Ý     இந்த இடம் சமணத்துறவிகள் தவம் மேற்கொண்ட இடமாக உள்ளது. இங்கு கி.மு.3  ஆம் நூற்றாண்டு முதல் தவம் இருந்த சமணப்பெரியார்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
Ý     தற்போதைய கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்தும் சமணத்துறவிகள் இங்கு வருகை தந்துள்ளார்கள்.
SITHANNAVASAL HILLOCK 17 STONE BEDS

SITHANNAVASAL HILLOCK STONE BED INSCRIPTIONS

Sunday 12 August 2012

தாராசுரம் - கலைகளின் தாய்வீடு (கட்டடம், சிற்பம், இசை, ஓவியம்)

Darasuram Temple front  view

·       தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் அருகில் இருக்கும் இவ்வூரில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஒரு உலகப் பாரம்பரியக் களம் ஆகும். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜசோழனின் கொள்ளுப் பேரனான இரண்டாம் இராஜராஜனால் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது.
·       கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம்.
·       வெளியிலுள்ள அழகிய நந்தியில் இருந்து கோயிலிற்குள் இருக்கும் தூண்கள் ஒவ்வொன்றிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் வரை அனைத்தும் சிறப்பானவை.
·       தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
·       யானை, காளை ஆகிய இரண்டையும் இணைத்து ஒன்றின் தலையில் மற்றொன்றைக் காணும் தத்ரூப சிற்பமும்,  நடன மாது ஒருவர் இரண்டு தாள வாத்தியக்காரர்களோடு இணைந்து ஒன்றாக ஆடுகின்றனர், ஆனால் 4 கால்களோடு! இப்படியொரு சிற்பம். இக்கோயிலின் மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் குதிரைகள், யானைகள்  இரு பக்கங்களிலும் தேரை  இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம்,  இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அத்தனை அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
·       கோயிலின் முன் உள்ள பலி பீடத்தைத் தட்டினால் பல விதமான ஓசைகள் கேட்கின்றன.  இவை இசைத்தூண்கள் ஆகும்.
·       இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
·       முதன் முதலில் ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது.Saturday 4 August 2012

தமிழகத்தில் இஸ்லாமியர்


கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கொளச்சல், காயல்பட்டினம், கீழக்கரை, தேவிபட்டினம், தொண்டி, நாகப்பட்டினம், பழவேற்காடு போன்ற துறைமுகப்பட்டினங்களில் முஸ்லிம் குடியிருப்புகள் நிறைந்திருந்தன.
தமிழகத்திலுள்ள காலத்தால் முற்பட்ட பள்ளிவாசல் சோழர்களின் தலைநகராக விளங்கிய திருச்சி உறையூரில்  காணப்படுகிறது. ஹிஜிரி 116 இல் (கி.பி.734) அப்துல்லா பின் முகமது என்பவரால் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் 25' × 25' அளவில் ஒரு சிறிய கோயில் மண்டபம் போல காட்சியளிக்கிறது. இங்குள்ள அரபி கல்வெட்டு இதை தெரிவிக்கிறது. ஒரு பள்ளிவாசல் கட்டி மக்கள் கூடித் தொழுகின்ற அளவிற்கு இப்பகுதியில் இஸ்லாம் பரவி இருந்தது தெளிவாகிறது. 
           இஸ்லாமிய பழமைச் சின்னமாக விளங்கும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஜும்மா (Middle Street ) பள்ளிவாசலை இங்கு குறிப்பிடலாம். இப்பள்ளிவாசலுக்கு இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1238-1257) கொடையளித்துள்ள தகவலை திருப்புல்லாணி கோயில் கல்வெட்டில் காணலாம்.
     ஆரம்பத்தில் இங்கு எழுப்பட்ட பள்ளிவாசல்கள் அப்போது நடைமுறையில் இருந்த திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் ஒரு கோயில் மண்டபம் போன்று கட்டப்பட்டன. மேற்குச் சுவரின் உள்பகுதியில் (இது தொழுகும் திசை) ஒரு மாடம் மட்டும் இருக்கும். இது ஒன்றே பள்ளிவாசலைக் குறிக்கும் அடையாளமாக இருந்தது. உருவங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட்டன. கோயில் கட்டிய தச்சர்கள் தான் இந்த பள்ளிவாசல்களையும் கட்டினர். அப்போதைய முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய கட்டடக்கலையின் கூறுகள் எதுவும் தெரியாது. ஆகவே உருவங்கள் தவிர்த்து பள்ளிவாசல்களைக் கட்டிக்கொண்டனர். மிகவும் எளிய அமைப்பில் இருந்த இவை கல்லுப்பள்ளிகள் என பெயர் பெற்றன.
கீழக்கரை ஜும்மா (Middle Street ) பள்ளிவாசல் உள்பகுதி...


               காயல்பட்டினத்திலுள்ள பழமையான சில பள்ளிவாசல்களில் காணப்படும் கல்வெட்டுகளில் பாண்டிய மன்னர்கள் இவற்றிற்கு நிலக்கொடைகள் குறித்த செய்திகள் காணப்படுகின்றன.கருப்புடையார் பள்ளிக்கு வீரபாண்டியனும் (கி.பி.946-966), கடற்கரைப்பள்ளிக்கு சடையவர்மன் குலசேகரனும் (கி.பி.1190-1224), காட்டு மகதும் பள்ளிக்கு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் (கி.பி.1216-1244), இறையிலி நிலங்கள் அளித்துள்ள செய்தியை இப்பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தகவல்கள் ஆதாரம் தமிழக தொல்லியல் துறை வெளியீடான
“தொல்லியல் நோக்கில் தமிழகம்”

திருமயம் கோட்டை மற்றும் குடைவரை கோயில்கள்

 • இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரைக் கோயில்கள் உண்டு. இவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.
  சிவன் குடைவரை
  கருவறையில் உள்ள லிங்கம் பாறையிலேயே குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு எதிரில் நிலத்திலிருந்து மேல்வரை நிற்பது போல் உள்ள லிங்கோத்பவர் சிற்பம் அழகு வாய்ந்தது. துவாரபாலகர் சிற்பங்களும் சிரிப்பது போன்ற உணர்ச்சியுடன் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது. இக்குடைவரை கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இங்குள்ள நந்தியும் பாறையிலேயே குடையப்பட்டுள்ளது. இங்கும் குடுமியான்மலையில் உள்ளது போன்று இசைக்கல்வெட்டுகள் இருந்திருக்கின்றன. இவை 13 ஆம் நூற்றாண்டளவில் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சிவனுக்கான குடைவரை மலையின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாறையில் லிங்கம் மட்டுமே குடையப்பட்டுள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவத்தில் உள்ளது. இது பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டது.
  திருமால் குடைவரை
  இக்குடைவரை முத்தரைய மன்னர்களால் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டது. இங்கு பாம்பின் மீது துயில் கொள்ளும் திருமால் சிற்பம் மிகப்பெரியதாக உள்ளது. திருமாலின் மார்பில் இலட்சுமி அமர்ந்திருக்கிறாள். திருமாலைச் சுற்றி கருடன், சித்ரகுப்தன், மார்கண்டேயன், பிரம்மா, தேவர்கள் ஆகியோர் சூழ்ந்து இருக்கிறார்கள். திருமாலின் காலடியில் பூமாதேவி அமர்ந்திருக்கிறாள்.   
  கோட்டை
  இங்குள்ள கோட்டை இராமநாதபுரத்தை கி.பி.1673 முதல் 1708 வரை ஆட்சி செய்த கிழவன் சேதுபதியால்  கட்டப்பட்டது. ஏழு வட்ட வடிவ மதில் சுவர்கள் ஒன்றுக்குள் ஒன்றாக கொண்ட கோட்டையின் நான்கு மதில் சுவர்கள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. மலை உச்சியில் இயற்கையாக அமைந்த சுனைகள் காணப்படுகின்றன. மலை உச்சியில் உள்ள கொத்தளத்தின் மீது ஆங்கிலேயர்களது பீரங்கி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகு வாய்ந்த இந்த கோட்டை இப்போது 'காதலர்களால்' நன்றாக பயன்படுத்தப்படுகிறது.
  FORT -  INFORMATION - THIRUMAYYAM

  ROCKCUT SIVA TEMPLE - THIRUMAYYAM

  ROCKCUT SIVA TEMPLE IN BACKSIDE - THIRUMAYYAM PANDYA STYLE

  ROCKCUT TEMPLES & FORT  - THIRUMAYYAM

  THIRUMAYAM LINGOTBAVAR ROCK CUT
  THIRUMAYAM VISHNU ROCK CUT
  ROCKCUT VISHNU TEMPLE - THIRUMAYYAM