கி.பி. எட்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே கொளச்சல், காயல்பட்டினம், கீழக்கரை, தேவிபட்டினம், தொண்டி, நாகப்பட்டினம்,
பழவேற்காடு போன்ற துறைமுகப்பட்டினங்களில் முஸ்லிம் குடியிருப்புகள்
நிறைந்திருந்தன.
தமிழகத்திலுள்ள காலத்தால் முற்பட்ட
பள்ளிவாசல் சோழர்களின் தலைநகராக விளங்கிய திருச்சி உறையூரில் காணப்படுகிறது. ஹிஜிரி 116 இல் (கி.பி.734) அப்துல்லா பின் முகமது என்பவரால்
கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் 25' × 25' அளவில் ஒரு சிறிய கோயில் மண்டபம் போல
காட்சியளிக்கிறது. இங்குள்ள அரபி கல்வெட்டு இதை
தெரிவிக்கிறது. ஒரு பள்ளிவாசல் கட்டி மக்கள் கூடித் தொழுகின்ற அளவிற்கு இப்பகுதியில் இஸ்லாம் பரவி இருந்தது தெளிவாகிறது.
இஸ்லாமிய பழமைச்
சின்னமாக விளங்கும் இராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரை ஜும்மா (Middle Street )
பள்ளிவாசலை இங்கு
குறிப்பிடலாம். இப்பள்ளிவாசலுக்கு இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1238-1257) கொடையளித்துள்ள தகவலை திருப்புல்லாணி கோயில் கல்வெட்டில் காணலாம்.
ஆரம்பத்தில்
இங்கு எழுப்பட்ட பள்ளிவாசல்கள் அப்போது நடைமுறையில் இருந்த திராவிடக்
கட்டிடக்கலைப் பாணியில் ஒரு கோயில் மண்டபம் போன்று கட்டப்பட்டன. மேற்குச் சுவரின்
உள்பகுதியில் (இது தொழுகும் திசை) ஒரு மாடம் மட்டும் இருக்கும். இது ஒன்றே
பள்ளிவாசலைக் குறிக்கும் அடையாளமாக இருந்தது. உருவங்கள் அனைத்தும்
தவிர்க்கப்பட்டன. கோயில் கட்டிய தச்சர்கள் தான் இந்த பள்ளிவாசல்களையும் கட்டினர்.
அப்போதைய முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய கட்டடக்கலையின் கூறுகள் எதுவும் தெரியாது.
ஆகவே உருவங்கள் தவிர்த்து பள்ளிவாசல்களைக் கட்டிக்கொண்டனர். மிகவும் எளிய
அமைப்பில் இருந்த இவை கல்லுப்பள்ளிகள் என பெயர் பெற்றன.
கீழக்கரை ஜும்மா (Middle Street ) பள்ளிவாசல் உள்பகுதி... |
காயல்பட்டினத்திலுள்ள பழமையான சில பள்ளிவாசல்களில்
காணப்படும் கல்வெட்டுகளில் பாண்டிய மன்னர்கள் இவற்றிற்கு நிலக்கொடைகள் குறித்த
செய்திகள் காணப்படுகின்றன.கருப்புடையார் பள்ளிக்கு வீரபாண்டியனும் (கி.பி.946-966),
கடற்கரைப்பள்ளிக்கு சடையவர்மன் குலசேகரனும் (கி.பி.1190-1224), காட்டு மகதும்
பள்ளிக்கு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் (கி.பி.1216-1244), இறையிலி நிலங்கள் அளித்துள்ள செய்தியை
இப்பள்ளிவாசல்களில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தகவல்கள் ஆதாரம் தமிழக தொல்லியல் துறை வெளியீடான
“தொல்லியல் நோக்கில் தமிழகம்”
No comments:
Post a Comment