இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரைக்
கோயில்கள் உண்டு. இவை அடுத்தடுத்து
அமைந்துள்ளன.
சிவன் குடைவரை
கருவறையில் உள்ள லிங்கம் பாறையிலேயே குடைந்து
உருவாக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு எதிரில் நிலத்திலிருந்து மேல்வரை நிற்பது போல்
உள்ள லிங்கோத்பவர் சிற்பம் அழகு வாய்ந்தது. துவாரபாலகர் சிற்பங்களும் சிரிப்பது
போன்ற உணர்ச்சியுடன் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாக அமைந்துள்ளது. இக்குடைவரை
கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இங்குள்ள
நந்தியும் பாறையிலேயே குடையப்பட்டுள்ளது. இங்கும் குடுமியான்மலையில் உள்ளது போன்று
இசைக்கல்வெட்டுகள் இருந்திருக்கின்றன. இவை 13 ஆம் நூற்றாண்டளவில்
அழிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சிவனுக்கான குடைவரை மலையின் உச்சிக்கு செல்லும்
வழியில் அமைக்கப்பட்டுள்ளது. தொங்கும் பாறையில் லிங்கம் மட்டுமே குடையப்பட்டுள்ளது.
இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவத்தில் உள்ளது. இது பாண்டியர்
காலத்தில் அமைக்கப்பட்டது.
திருமால் குடைவரை
இக்குடைவரை முத்தரைய மன்னர்களால் கி.பி. 7 ஆம்
நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டது. இங்கு பாம்பின் மீது துயில் கொள்ளும் திருமால்
சிற்பம் மிகப்பெரியதாக உள்ளது. திருமாலின் மார்பில் இலட்சுமி அமர்ந்திருக்கிறாள். திருமாலைச்
சுற்றி கருடன், சித்ரகுப்தன், மார்கண்டேயன், பிரம்மா, தேவர்கள் ஆகியோர் சூழ்ந்து
இருக்கிறார்கள். திருமாலின் காலடியில் பூமாதேவி அமர்ந்திருக்கிறாள்.
கோட்டை
இங்குள்ள கோட்டை இராமநாதபுரத்தை கி.பி.1673 முதல் 1708 வரை ஆட்சி செய்த
கிழவன் சேதுபதியால் கட்டப்பட்டது. ஏழு
வட்ட வடிவ மதில் சுவர்கள் ஒன்றுக்குள் ஒன்றாக கொண்ட கோட்டையின் நான்கு மதில்
சுவர்கள் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. மலை உச்சியில் இயற்கையாக அமைந்த சுனைகள்
காணப்படுகின்றன. மலை உச்சியில் உள்ள கொத்தளத்தின் மீது ஆங்கிலேயர்களது பீரங்கி
ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகு வாய்ந்த இந்த கோட்டை
இப்போது 'காதலர்களால்' நன்றாக பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment