Pages

Wednesday 11 May 2016

கல்வெட்டுக்களில் காணப்படும் சில சொற்களின் விளக்கங்கள் - வே.இராஜகுரு



வெட்டி
மன்னர்கள் காலத்தில், குளம் ஆறு போன்றவற்றின் கரையை அடைத்தல் போன்ற பணிகளை நாட்டின் நலன் கருதி இலவச சேவையாக மன்னர்களின் ஆணைப்படி செய்து தரும் பணி, வெட்டி எனப்பட்டது. இதற்கு கூலி எதுவும் வழங்கப்படுவதில்லை. 

முட்டாள்
மன்னரால் ஆணையிடப்பட்ட சேவைப்பணியை வசதியானவர்கள் மற்றும் வயதானவர்களால் செய்ய இயலாதபோது அவர்களுக்குப் பதிலாக அந்த வேலையை, உணவு, பணம் அல்லது பொருள் போன்றவற்றை பெற்றுக்கொண்டு செய்து தரும் நபர்கள் முட்டுக்குப் போன ஆள் என்ற பொருளில் முட்டாள் எனப்பட்டார்கள். திருவிளையாடல் புராணத்தில் வயதான பாட்டி செய்ய வேண்டிய ஆற்றின் கரையை அடைக்கும் பணியை அப்பாட்டி வழங்கும் பிட்டுக்காக சிவன் செய்வதாக குறிப்பிடப் படுவதை நினைவில் கொள்ளுங்கள்.

மடையர்
ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையை திறந்து மூடும் பணி செய்தவர்கள் மடையர் என கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார்கள்.  இப்பணியை எல்லோராலும் செய்து விட முடியாது. இதில் பயிற்சி பெற்றவர்களே இதை செய்ய முடியும். சில சமயங்களில் இப்பணி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். 

உதிரப்பட்டி
பொதுத்தொண்டு செய்தபோது இறந்த நபரின் குடும்பங்களுக்கு அவரின் உயிரிழப்புக்கு ஈடாக நிலம் கொடுக்கப்பட்டது. இப்படிக் கொடுக்கப்பட்ட நிலம் உதிரப்பட்டி என அழைக்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி கருங்குளத்தைச் சார்ந்த பெருந்தேவப் பள்ளன் என்பவன் இவ்வூரின் குளத்தில் நீர் அதிகமாகி உடைப்பு ஏற்பட்ட சமயத்தில் அதை அடைக்கும் பணியைச் செய்த போது தனது உயிரை இழந்தான். தன் ஊரின் நலனுக்காகத் தன் இன்னுயிரை இழந்த  பெருந்தேவப் பள்ளனுக்கு இவ்வூர் மக்கள் கி.பி.1302 இல் ஒரு நினைவுக்கல்லை நட்டுப் பெருமதிப்பளித்தனர். மேலும் இவனது மக்களுக்கு உதிரப்பட்டியாக நிலமும் கொடுத்தனர்.

No comments:

Post a Comment