Pages

Wednesday 11 May 2016

350 ஆண்டுகள் பழமையான திருப்புல்லாணி கோயில் மரச்சிற்பங்கள் - வே.இராஜகுரு





கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவ மன்னர்களைப் போல மரங்களைக் கொண்டு கலை வண்ணம் படைத்துள்ளார்கள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள். கோயில் தேர்களில் அழகிய மரச்சிற்பங்களை நாம் பல கோயில்களில் பார்த்து இருப்போம். இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கோயில் கோபுரத்தில் அழகிய மரச் சிற்பங்கள் காணப்படுகின்றன.


கோயில் கோபுரங்களை மரம், சுண்ணாம்பு, கருங்கற்களைக் கொண்டு அமைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அப்படி அமைக்கப்பட்ட மரங்களில் சிற்பங்களை செதுக்கி அழகுபடுத்தி உள்ளனர் சேதுபதி மன்னர்கள்.


மண், மரம், கல், உலோகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக்கொண்டு தெய்வ உருவங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பிற இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள் போன்றவற்றை அதன் தன்மை மாறாது நகல் செய்வதை நாம் சிற்பம் என வழங்குகிறோம்.


மரத்தில் சிற்பங்கள் செதுக்கும் கலை சங்க காலந்தொட்டு தமிழகத்தில் வளர்ந்துள்ளது. சில வைணவக் கோயில்களின் மூலத் திருமேனிகளை அத்தி மரத்தால் செய்து தைலக்காப்பு பூசியுள்ளனர். கிராமக் கோயில்கள் பலவற்றில் தெய்வங்கள் மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டு வழிபடப்படுகின்றன. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருமாலின் பல அவதாரங்கள் மரச்சிற்பங்களாக அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இவை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் இராமசாமி கோயிலில் உள்ள இராமாயண மரச்சிற்பங்கள் புகழ் பெற்றவை. இவை திருவிதாங்கூர் மன்னர்களால் உருவாக்கப்பட்டவை.


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் அனைத்தும் சேதுபதி மன்னர்களால் பராமரிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  சேதுபதி மன்னர்களும் நாயக்க மன்னர்களைப் போன்று கோயில் கோபுரங்களில் மரச் சிற்பங்களை அழகுற செதுக்கி உள்ளனர். திருப்புல்லாணி கோயில் கோபுரத்தில் உள்ள மரச்சிற்பங்கள் சேதுபதிகளின் கலைத் திறமைக்குச் சான்றாகப் போற்றப்படுகின்றன.




இராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 21 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், 108  வைணவ திவ்விய தேசங்களில், 44 வது தலமாகப் போற்றப்படுகிறது.



 

தலவரலாறு :

இவ்வூரில் தவமிருந்த புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மூன்று முனிவர்களுக்காக திருமால் அஸ்வத்தமாக (அரசமரமாக) இங்கு காட்சியளித்தார்.  அவரே ஆதிஜெகநாதப் பெருமாளாக பக்தர்களுக்கு இங்கு அருள் பாலிக்கிறார்.


சீதையை மீட்க இராமபிரான் இலங்கைக்குச் செல்லும் வழியில், இத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கி, இராவணனை வதஞ்செய்ய அவரால் கொடுக்கப்பட்ட ‘கோதண்டம்’ என்ற வில்லைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.


பின்பு கடலைக் கடக்க வழி சொல்லவேண்டும் என்று கடலரசனான வருணனை வேண்டி, 7 நாட்கள் நாணல் புல்லைத் தலையணையாகக் கொண்டு படுத்து உறங்கியதால் இது திருப்புல்லணை எனவும் தர்ப்பசயனம் எனவும் அழைக்கப்படுகிறது. வடமொழியில்  தர்ப்பை என்பது புல்லையும் சயனம் என்பது உறக்கத்தையும் குறிக்கிறது. இராவணன் தம்பி விபீடணன் இவ்வூரில் இராமரைச் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.


கி.பி.1646 முதல் கி.பி.1676 வரை போகலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருமலை ரெகுநாத சேதுபதி, திருப்புல்லாணி கோயிலில் உள்ள காங்கேயம் மண்டபம், நுழைவுவாயில் கோபுரம், கண்ணாடி மண்டபம், தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, திருச்சுற்று மதில்கள், இராஜகோபுரம், சக்கரத்தீர்த்தம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களைச் செய்தார் என தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது. அதாவது பட்டாபிஷேக ராமர் ஆலயம் தவிர்த்து ஏற்கனவே இருந்த கோயிலின் பிறபகுதிகள் திருமலை ரெகுநாத சேதுபதியால் புணரமைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.



இக்கோயில் இராஜகோபுரம் ஐந்து தளங்களுடன் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஐந்து தளங்களிலும் சேதுபதி மன்னர்கள் காலத்திய மரச் சிற்பங்கள் உள்ளன.  தேக்குமரங்களைக் கொண்டு மிக நேர்த்தியாக இவை செதுக்கப்பட்டுள்ளன.


முதல் தளத்தில் உள்ள  சிற்பங்கள்
 
இராமர் இராவணன் போர்க்காட்சி

இராவனணின் தம்பி விபீடணன் புல்லாகிய பாம்பு படுக்கையில் கிடந்த நிலையில் இருக்கும் இராமரின் வலதுபுறம் கைகூப்பிச் சரணடைந்த நிலையில் இருக்க, அவரின் இடதுபுறம் வருணபகவான் தன் மனைவியுடன் கைகூப்பிச் சரணடைந்த நிகழ்வுகளை மரச்சிற்பங்களாக வடித்துள்ளார்கள்.


கோதண்டம் வில் பெறும் இராமர்

அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஆதிஜெகநாதப் பெருமாளை இராமபிரான் வணங்கி இராவண வதஞ்செய்ய அவரால் கொடுக்கப்பட்ட ‘கோதண்டம்’ வில்லைப் பெறுவது அழகிய மரச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.



இது தவிர,

கிளி வாகனத்தில் இரதியும் அன்ன வாகனத்தில்  மன்மதனும்

·        கிளி வாகனத்தில் இரதியும் அன்ன வாகனத்தில்  மன்மதனும் எதிரெதிரே அம்பு எய்யும் காட்சி.


·        இராமர் பாம்பில் படுத்த நிலையில் இருக்க, அவரின் தொப்புள் கொடியில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தோன்றும் காட்சி.

·        இராமபிரான் அனுமனின் தோளில் அமர்ந்தும், இராவணன் தேரில் இருந்தும் போர்புரியும் காட்சி.

·        திருமாலின் நரசிம்ம அவதாரம், கிருஷ்ண அவதாரம், வாமன அவதாரம், கல்கி அவதாரம் ஆகிய அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்கள்.

·        கோபியரின் ஆடைகளைத் திருடி மரத்தில் ஒழித்து வைக்கும் கண்ணனின் சிற்பம்.

·        இலங்கை செல்ல சேது பாலம் அமைக்கும் காட்சியில் குரங்குகள் பாலம் கட்ட இராமர் பாலத்தின் மேல் அமர்ந்திருக்கும் காட்சியின் சிற்பம்.

·        கஜேந்திரன் என்னும் யானைக்கு திருமால் மோட்சம் அளிக்கும் கஜேந்திர மோட்சம்.

·        வணங்கிய நிலையில் உள்ள சேதுபதி மன்னர், சிங்கம், யாளி, பூப்போதிகைத் தூண்கள், துவார பாலகர்கள், பத்மாசனித்தாயார் ஆகியோர் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 


350  ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த மரச் சிற்பங்கள் சேதுபதி மன்னர்கள் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. இத்தகைய மரச் சிற்பங்கள் காலத்தால் அழியக்கூடியவை என்றாலும் அவற்றை நல்ல முறையில் தற்போதும் கோயில் தேவஸ்தானத்தினர் பாதுகாத்து வருகின்றனர். தமிழகத்தில் மரத்திலான சிற்பங்கள் மிகச் சில கோயில்களில் மட்டுமே தற்போதும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திர மோட்சம்

கிருஷ்ண, நரசிம்ம அவதாரங்கள்

கோபியர் ஆடை திருடும் கண்ணன்

சேது பாலம் அமைக்கும் காட்சி

சேதுபதி மன்னர்

பாம்பு படுக்கையில் இராமர் தொப்புளில் முப்பத்து முக்கோடி தேவர்கள்

வாமன அவதாரம்

விபீடணன், வருணபகவான் சரணாகதி

நாளிதழ் செய்திகள்

'தினத்தந்தி'

 

 'தி இந்து'


LINK

http://tamil.thehindu.com/tamilnadu/article8460679.ece#.VwxIZJVH0tE.gmail


No comments:

Post a Comment