சிவலிங்கத்தில் இருந்து தோன்றியவை 64 சிவ மூர்த்தங்கள் (வடிவங்கள்).
இவை அஷ்டாஷ்ட விக்கிரங்கள் என ஆகமங்கள் கூறுகின்றன. இம்மூர்த்தங்களைச் சுருக்கி, சோமாஸ்கந்தர்,
நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், உமா மகேஸ்வரர், வீரபத்திரர்,
பிட்சாடனர் உள்ளிட்ட இருபத்தைந்து மூர்த்தங்களாக
உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும்.
சிவபெருமான் பத்மபீடத்தின் மீது
ஒரே காலுடன் சமபங்கமாக நின்ற நிலையில் இருக்க, அவர்
இடுப்பின் வலப்பக்கம் பிரம்மாவும் இடப்பக்கம் விஷ்ணுவும் இணைந்து தோன்றுவது
ஏகபாத மூர்த்தி திருக்கோலம் ஆகும்.
ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது உலகமே நீரில்
மூழ்கி அழியும். அக்காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையம்மையாகிய சக்தியும் இந்த ஏகபாத மூர்த்தியாகிய சிவபெருமானிடம்
ஒடுங்கிவிடுவார்கள். ஊழிக்காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என
ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாகவும், தஞ்சமடையும் இடமாகவும் ஏகபாத மூர்த்தி இருக்கிறார். ஏகபாதமூர்த்தி சிலைகள்
தென்னிந்தியாவில் தான் அதிகமாக
காணப்படுகின்றன.
பிரம்மாவும்
விஷ்ணுவும் ஒரு கால் வளைந்த நிலையிலும், முன்னிரு கைகள் வணங்கிய நிலையிலும் காணப்படுவதாக ஏகபாத மூர்த்தி சிற்பம்
அமைக்கப்படுவது மரபு. இத்தகைய ஏகபாத
மூர்த்தி சிற்பங்கள் கோயில்
மண்டபத்தூண்களில் அமைக்கப்பட்டிருக்கும்.. திருக்கோகர்ணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபம் ஆகிய
இடங்களில் உள்ள மண்டபத்தூண்களில் ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
இராமநாதபுரம்
மாவட்டம் உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத்
தேவகோட்டத்தில் ஏகபாத மூர்த்தி சிற்பம் உள்ளது. இங்குள்ள ஏகபாத மூர்த்தி சிற்பத்தில்
நின்ற நிலையில் இருக்கும் சிவன், முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரைகளுடனும்,
பின்னிரு கைகளில் மான், மழுவை ஏந்தியும் காட்சியளிக்கிறார். பிரம்மா மூன்று
தலைகளுடன் காணப்படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர்.
விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய முத்திரையுடன் உள்ளது.
மற்றொரு கையில் அவர்களுக்கான ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.
மரகத
நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710
வரை சேது நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த
ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.
உத்தரகோசமங்கையில் உள்ளதைப் போலவே, சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலிலும் நடராஜர் சன்னதியின்
வெளிப்புற வடக்கு தேவகோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது என்பது
குறிப்பிடத்தகுந்தது.
நாளிதழ்செய்திகள்
'தினத்தந்தி'
'தி இந்து'
300 ஆண்டுகள் பழமையான சிவன்,
விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம் - தி இந்து - http://m.tamil.thehindu.com/tamilnadu/300-ஆண்டுகள்-பழமையான-சிவன்-விஷ்ணு-பிரம்மா-இணைந்த-ஏகபாத-மூர்த்தி-சிற்பம்/article8671862.ece
No comments:
Post a Comment