Pages

Wednesday 11 May 2016

திருவாடானை அருகே வயல் வரப்பில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுப்பு




இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை அங்குள்ள வயல் வரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரின் வயல் பகுதியில் மிகப்பெரிய கல்சிலை இருப்பதாக தினத்தந்தி தொண்டி செய்தியாளர் திரு மணிமாறன் அவர்கள் கொடுத்த  தகவலின் அடிப்படையில், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு அப்பகுதியில் ஆய்வு செய்து, அது கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் புத்தர் சிலை என்பதைக் கண்டறிந்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் ஏற்கனவே இராமேஸ்வரம் அரியான்குண்டு பகுதியிலும், திருவாடானை அருகே மணிகண்டியிலும், சுந்தரபாண்டியன்பட்டினத்தில் உள்ள சிவன் கோயிலிலும், கிடைத்துள்ளன. இலங்கையின் தொடர்பால் இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் புத்த மதம் செழித்து இருந்ததாக கூறப்பட்டாலும் அதற்கான தடயங்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஏற்கனவே கிடைத்த  சிலைகளும் கடலோரப்பகுதிகளில் கிடைத்துள்ள நிலையில் இச்சிலை மாவட்டத்தின் உள்பகுதியில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
ஐந்தடி உயரம் உள்ள இச்சிற்பத்தில் புத்தர்  அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளார். இதன் கீழ் பகுதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. மார்பில் சீரை என்ற மேலாடையையும், இடுப்பில் ஆடையையும் அணிந்து நீண்ட காதுகளுடன் காணப்படுகிறார். அவர் கையில் உள்ள தர்மச் சக்கரமும், தலையில் உள்ள சுருள்முடியும் சிதைந்த நிலையில் உள்ளன. சுருள்முடிக்கு மேல் உஷ்ணீஷம் என்ற தீச்சுடர் காணப்படுகிறது. அதில் துளை உள்ளது. இது நவரத்தினக் கற்கள் பதிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். புன்னகை புரியும் இதழ்களுடன் மிக அழகாக  சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தவயல் அருகில் உள்ள ஆனந்தூர், காமினி மற்றும் சுத்தமல்லி ஆகிய ஊர்களின் பெயர்கள் புத்தமதம் தொடர்புடையனவாக இருக்கின்றன. இப்பகுதியில் இம்மதம் மிகச் சிறப்பு பெற்று இருந்ததற்கு இவை ஆதாரமாக உள்ளன. புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தரின் பெயரால் ஆனந்தூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அதேபோல சுத்தமல்லி என்பது சித்த மௌலி என்பதன் திரிபு. சித்தர்களாகிய மகாவீரர் அல்லது புத்தரின் உருவத்தைத் தலையில் தாங்கியவர்களைக் குறிப்பிடும் இச்சொல் அவர்கள்  குடியிருந்த ஊருக்கும் பெயராகியுள்ளது. காமினி என்ற சிங்கள சொல்லால் இப்பகுதியில் ஊர் உருவாக்கப் பட்டிருப்பது இதன் இலங்கைத் தொடர்பை உறுதியாக்குகிறது. காமினி என்பது கிராமணி என்ற சொல்லின் சிங்களத் திரிபு  ஆகும். கி.பி. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில், தமிழகத்திற்கும் இலங்கைக்குமிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிகத் தொடர்புகளால் புத்த சமயம் இப்பகுதிகளில் பரவியிருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
அமணவயல் என்பது இவ்வூரின் பழைய பெயர் என இவ்வூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் வடக்கலூர், தீர்த்தான்குளம் ஆகிய ஊர்கள் இதன் அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் சமணமும் செழித்து இருந்திருக்கவேண்டும். 

 இச்சிற்பம் பல ஆண்டுகளாக திறந்தவெளியில் இருந்ததால் தேய்மானம் அடைந்துள்ளது. இச்சிற்பத்தை கோயில் அமைத்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுத்தமல்லியில் சோழர் கால கலைப்பாணியில் அமைந்த சிவன் கோயிலும், உலகம்மன் என்ற காளி கோயிலும் உள்ளன. இவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சிவன் கோயில் எதிரில் உள்ள ஏந்தல் கண்மாய்  நீரை பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் கோயிலின் அருகில் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவை சேதுபதி மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.



No comments:

Post a Comment