Pages

Saturday 14 September 2019

இராமநாதபுரம் பகுதியில் வளர்ந்து வரும் ஆதண்டை வகை மூலிகைத் தாவரங்கள்




ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியும், சீமைக் கருவேல மரங்களும் தான் நம் நினைவுக்கு வரும். இங்கு மருத்துவக் குணம் கொண்ட பல மூலிகைத் தாவரங்களும் இயற்கையாகவே வளர்ந்து வருகின்றன. அதிலும் இவை வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் காணப்படுவதன் மூலம் நம் முன்னோர்கள் அவற்றை மருந்தாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது

 இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு இம்மாவட்டத்தில் காணப்படும் பாரம்பரியத் தாவரங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆவணப்படுத்தி வருகிறார். ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட தாவரங்களை ஆவணப்படுத்தியுள்ள நிலையில், தற்போது துரட்டி ஆதண்டை, கொடுமுள் ஆதண்டை, குழல் ஆதண்டை ஆகிய ஆதண்டை வகை மூலிகைகள் இப்பகுதியில் வளர்ந்து வருவதைக் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,
ஆதண்டையில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பெரும்பாலும்  முட்களுடன் காணப்படும் இவை கெப்பாரிடேசியே எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆதண்டை, ஆதொண்டை எனப்படும் இவற்றின் பெயராலேயே  தொண்டை நாடு அழைக்கப்படுவதாக தேவநேயப் பாவாணர் கருதுகிறார்.
துரட்டி ஆதண்டை
இதன் தாவரவியல் பெயர் கெப்பாரிஸ் டிவாரிகேட்டா (Capparis divaricata). பெரிய முள் செடி. பழுப்பு நிற தண்டுகள். ஒடுங்கிய நீள்வட்டவடிவ இலைகள். சிவப்பு நிற மலர்கள். ஜுன் மாதத்தில் பூப்பவை. இதன் பழங்கள் கோளவடிவில் வளைந்த காம்புகளுடன் சிவப்பு நிறத்தில் மருக்களுடன் இருக்கும். உண்ணக்கூடியவை.
பழங்கள் ருத்திராட்சை போல இருப்பதால் இதை ருத்திராட்ச மரம் என தவறுதலாகக் கூறுகிறார்கள்.  முல்லை நிலத்தில், வறண்ட காடுகளில், கரிசல் மண்ணில், 2500 அடி உயரமான பகுதிகள் வரை வளர்பவை. துரட்டி போன்ற முள்  இலைக்காம்பின் கீழே உள்ளதால் இதை துரட்டி ஆதண்டை என அழைக்கிறார்கள்.
இதன் இலை, பழம், வேர், விதை ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. வலி, சளி, வாதம், சிறுநீர் பிரிப்பு, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சினை போன்ற நோய்களுக்கு இவை மருந்தாகப் பயன்படுகின்றன.
கமுதி அருகே பசும்பொன், உத்தரகோசமங்கை அருகே தெய்வச்சிலைநல்லூர், சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி பாப்பாகுடி ஆகிய ஊர்களில் உள்ள அய்யனார் கோயில்களில் இச்செடி வளர்ந்து வருகிறது. இத்தாவரம் இந்தியாவில் பல பகுதிகளிலும், இலங்கையிலும் காணப்படுகிறது.
கொடுமுள் ஆதண்டை
இதன் தாவரவியல் பெயர் கெப்பாரிஸ் ஸிலானிகா (Capparis zeylanica). முட்கள் மிகுந்த படரும் புதர்க்கொடி. 2.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் கிளைகள் நீளமானவை. மேற்புறம் பளபளப்பான நீள்வட்ட வடிவ இலைகள். கோள வடிவ செந்நிற பழுப்பு நிற காய்கள். இளஞ்சிவப்பு நிற மலர்கள். ஜனவரி முதல் மார்ச்சு வரையில் பூப்பவை.
கமுதி சேதுபதி வட்டக்கோட்டையின் மேல்பகுதியில் இது காணப்படுகிறது. இதன் பழம் உண்ணக்கூடியது. இதன் மரப்பட்டை காய்ச்சலுக்கும், இலைகள் வயிற்றுப்புண், தீப்புண்ணுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
குழல் ஆதண்டை
இதன் தாவரவியல் பெயர் கெப்பாரிஸ் டெஸிடியூ (Capparis decidua). இதன் வேறு பெயர்கள் செங்கம், சிரக்கலி. படரக்கூடிய அடர்த்தியான கிளைகளுள்ள  புதர்ச்செடி. 5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. ஆரம்பத்தில் சிறியதாக நீண்டதாக இருக்கும் இதன் இலைகள், பெரியதாக வளரும் போது உதிர்ந்துவிடும். இதனால் வறட்சியைத் தாங்கி இது வளருகிறது. பச்சை நிறத் தண்டுகள். சிவப்பு நிற பூக்கள். கிளைகளில் கூர்மையுடைய, நேரான முட்கள் நிறைந்து காணப்படும்.

 கமுதி அருகே பேரையூர், திருப்புல்லாணி அரண்மனை, கமுதி சேதுபதி கோட்டை, நரிப்பையூர் செவக்காட்டு அய்யனார் கோயில்,  மதுரை கொங்கர் புளியங்குளம் உள்ளிட்ட இடங்களில் வளர்ந்து வருகின்றன.
ஹரப்பா நாகரிக காலத்தில் இத்தாவரம் இருந்ததற்கான தடயங்கள் அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் பல பகுதிகள், எகிப்து, ஆப்பிரிக்கா, அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இத்தாவரம் காணப்படுகிறது. இதன் பட்டை, இருமல், ஆஸ்துமா, வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்குகிறது. இதன் வேர்கள் காய்ச்சலுக்கு மருந்தாகிறது.
பாரம்பரிய மூலிகைத் தாவரங்களான இவை தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்

 





 


No comments:

Post a Comment