Pages

Showing posts with label மாமல்லபுரம். Show all posts
Showing posts with label மாமல்லபுரம். Show all posts

Tuesday, 17 September 2019

மாமல்லபுரம் - வே.இராஜகுரு


     

      சென்னைக்கு அருகில் உள்ளது மாமல்லபுரம். இங்குள்ள பாரம்பரியச் சின்னங்களை குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கற்றளிகள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவை அனைத்தும் பல்லவர்களால் கி.பி.7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். 

இச்சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பாகவும் உள்ளன. கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்றவை சிறப்பு வாய்ந்தவை. எனவே மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களை உலகப் பாரம்பரியச் சின்னமாக 1984 இல் யுனெஸ்கோ அறிவித்தது. 


மலைகளைக் குடைந்து அமைக்கப்படும் கோயில்கள் குடைவரைக் கோயில்கள் எனப்படுகின்றன. பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்து இவை உருவாக்கப்படுகின்றன. 

மாமல்லபுரத்தில் வராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், இராமானுஜ மண்டபம் உள்ளிட்டவை குடைவரைக் கோயில்கள் ஆகும். கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் உள்ள குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி, மகிசனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள ஐந்து இரதங்கள் பஞ்சபாண்டவர்கள் பெயரை பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையன அல்ல. தர்மராஜன் மற்றும் அருச்சுனன் இரதங்கள் மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்துடனும், பீம இரதம் சாலை வடிவிலான சிகரத்துடனும், திரௌபதி இரதம் சதுரமான குடிசை போன்ற சிகரத்துடனும்,  சகாதேவ இரதம் கஜபிருஷ்ட சிகரத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளன.


மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று கட்டுமானக் கோயில்கள் உள்ளன.  இதில் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதன் இரு பக்கங்களிலும் இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் சுமார் 30மீட்டர் உயரமும், 60மீட்டர் அகலமும் கொண்ட பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பத் தொகுதியை அருச்சுனன் தபசு என்கிறார்கள். மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இவற்றைக் குறிப்பிடவேண்டும். ஒரு பாறையில் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.