Pages

Showing posts with label தமிழி. Show all posts
Showing posts with label தமிழி. Show all posts

Tuesday, 27 July 2021

வரிச்சியூர் - குன்னத்தூர் மலை - எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு - வே.சிவரஞ்சனி

 


இயற்கை வாழிடம்!
இறைவன் பூமி!!
தொல்லியல் தேடல்கள்!!!
வரிச்சியூர் - குன்னத்தூர் மலை!!!!
எண் அளவு, நெல் கொடை குறிப்பிடும் முதல் கல்வெட்டு!!!!

வே.சிவரஞ்சனி, ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்
அறிமுகம்
    மதுரை மாவட்டம் வரிச்சியூர் குன்னத்தூர் மலையில் மொத்தம் 4 தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அவை:
1. உதயகிரீசுவரர் குடைவரை
2. தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் உலகநாதீசுவரர் கோயில்
3. அஸ்தகிரீசுவரர் குடைவரை
4. நீலகண்டீசுவரர் குடைவரை
இதில் நீலகண்டீசுவரர் குடைவரை தவிர மற்ற 3 சின்னங்களும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளன.

அமைவிடம்
    சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ளது வரிச்சியூர். வரிச்சியூரிலிருந்து களிமங்கலம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் சாலையின் வலது பக்கம் உதயகிரீசுவரர் கோயில் குடைவரையாக அமைந்துள்ளதைக் காணலாம். அதே சாலையில் கொஞ்சம் முன்னோக்கிப் பயணித்தால் 50 மீட்டர் தூரத்தில் சுற்றுச் சுவருடன் ஒரு கோயில் அமைந்திருக்கும். அதற்குள் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் உள்ள குகையும் உலகநாதீசுவரர் என்ற சிவன் கோயிலும் அமைந்துள்ளது. அதே சாலையில் கொஞ்ச தூரம் பயணித்து வலப் பக்கம் திரும்பும் சாலையில் சென்றால் அந்த மலையின் பின்பகுதியில் அஸ்தகிரீசுவரர் என்ற சிவனுக்கான குடைவரை கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து பார்த்தால் அதன் எதிர்புறம் உள்ள மலையில் உள்ள கோயில்தான் நீலகண்டீசுவரர் கோயில்.

உதயகிரீசுவரர் குடைவரை

    மலையின் கிழக்குச் சரிவில் உதயகிரீசுவரர் எனும் பெயரில் சிவன் குடைவரை கோயில் உள்ளது. அதாவது கதிரவன் உதயமாகும் திசை நோக்கி இக்கோயில் அமைந்ததால் உதயகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் இருக்கும் சமணக்குகை இதன் மிக அருகில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில், கருவறையையும் சிறிய அர்த்த மண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறையில் உள்ள சதுர வடிவ ஆவுடை சிவலிங்கம் தனிக்கல்லாக அமைக்கப்படாமல் தாய்ப் பாறையிலேயே நடுவில் உருவாக்கப்பட்டு உள்ளது. கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. வலப்புற காவலர் கைகளை கட்டியபடியும் இடப்புற காவலர் கையில் கதையுடனும் உள்ளார்கள். அர்த்த மண்டபத்தின் தென் புறச் சுவரில் நின்ற நிலையிலான விநாயகரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

உலகநாதீசுவரர் கோயில், தமிழிக் கல்வெட்டுகள்

    இது உதயகிரீசுவரர் குடைவரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்குகையின் முன்பகுதியில் தொல்லியல் துறையால் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாக 'ட' வடிவில் அமைந்த ஒரு பெரிய குகைத்தளம் உள்ளது. இக்குகைத்தளத்தின் ஒரு பகுதியாக உலகநாதீசுவரர் எனும் சிவன் கோயில் உள்ளது. இங்கு சமணத் துறவிகள் வாழ்ந்தமை நிறுவும் வகையில் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. வடபுறம் உள்ள சிறு குகைத்தளத்தின் நெற்றிப் பகுதியில் ஒன்றும் (1) கிழக்கு நோக்கிய பெரிய குகைத்தளத்தில் நீர்வடி விளிம்பின் மேல் ஒன்றும் (2) கீழ் ஒன்றுமாக (3) மொத்தம் மூன்று தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு கல்வெட்டுகள் பெரிதும் சிதைந்த நிலையில் உள்ளன.


கல்வெட்டுகளின் வாசகம்:

(1). "ப(ளி)ய் கொடுபி...."
இந்த கல்வெட்டில் இப்பள்ளியை அமைத்தவரின் பெயர் கூறப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் பகுதி சிதைந்துவிட்டதால் நபரின் பெயரை அறிய இயலவில்லை.

(2). "அடா.....றை ஈதா வைக...ஒன் நூறு கலநெல்... "
அதாவது, (இப்பள்ளிக்கு) நூறு கலம் நெல் வழங்கப்பட்டதைக் கூறுகிறது. கொடை அளித்தவரின் பெயர் சிதைவுற்றுள்ளது.

(3). "இளநதன் கருஇய நல் முழஉகை"
அதாவது, இந்த சிறந்த (நல்ல) குகை இளநாதனால் குடைவிக்கப்பட்டது என்று கூறுகிறது.


இக்கல்வெட்டுகளின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு.

1. கல்வெட்டுகளிலேயே "நெல்" கொடையாக வழங்கப்பட்ட‌ செய்தியை முதன் முதலாக இங்கு உள்ள கல்வெட்டு தான் கூறுகிறது.

2. எண் - அளவு கூறும் தமிழகக் கல்வெட்டுகளிலும் இங்குள்ள கல்வெட்டே காலத்தால் முந்தியது என்பது இதன் சிறப்பு.


    மேலும் கிழக்கு நோக்கிய குகைதளத்துப் படுக்கையில் விஜயநகர அரசின் கி.பி.1505ஐச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. விசயநகரப் பெருவேந்தர் இம்மடி நரசிங்கராயரின் ஆட்சிக்காலத்தில், மதுரை மண்டலத்தின் கர்த்தராகப் பணியாற்றி வந்த வீரமாராசய்யன் என்பவன் வரிச்சியூரிலுள்ள வீரபத்திரநாயனார் கோயிலுக்கு மலைக்குடி, புளியங்குளம் போன்ற ஊர்களைத் தானமாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

அஸ்தகிரீசுவரர் குடைவரை

    அதே மலையின் மேற்குப்புறம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட முற்காலப் பாண்டியரின் அஸ்தகிரீசுவரர் குடைவரைக் கோயில் உள்ளது. கதிரவன் அஸ்தமிக்கும் மேற்குத் திசை நோக்கி இருப்பதால் இக்கோயில் இறைவன் அஸ்தகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். அமைப்பில் இந்த கோயிலானது சிறிய கருவறை, திறந்த வெளி அமைப்பில் அர்த்தமண்டபம் கொண்டுள்ளது. கருவறையில் சதுர வடிவ ஆவுடையுடன் சிவலிங்கம் அமைந்துள்ளது. கட்டுமானக் கோயில் மாதிரி வடிவம் இக்குடைவரையின் முன்பக்கச் சுவரில் கோட்டுருவமாக அமைக்கப்பட்டுள்ளது.


நீலகண்டீசுவரர் குடைவரை

    இக்கோயில் அஸ்தகிரீசுவரர் கோயிலின் எதிரே உள்ள சிறு குன்றின் சரிவில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள சப்தகன்னியரின் புடைப்புச் சிற்பங்கள் தாய்ப் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளன. இது திருக்கோளக்குடி குடைவரையில் உள்ள சப்தகன்னியர் சிற்பத் தொகுதியைப் போன்று அமைந்துள்ளது. இதன் முன்புறம் கட்டுமானக் கோயில் உள்ளது. இக்கோயிலின் எதிரில் உள்ள பாறையில் ஒரு சிறிய குடைவரை அமைக்கும் முயற்சி நடந்துள்ளதை அதை குடைந்திருப்பதை பார்க்கும் போது அறியலாம். சப்தகன்னியர் சிற்பம் உள்ள கட்டுமானக் கோயிலின் சுவர்களில் முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய பிற்காலப் பாண்டிய மன்னர்கள் கல்வெட்டுகள் உள்ளன.

 'பூவின்கிழத்தி' எனத் தொடங்கும் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டில், களவழி நாடாழ்வான் அனுப்பிய ஓலையைக் காவனூர் ஊரவையினர் பெற்று நடவடிக்கை எடுத்தது குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு முழுமையாக இல்லை.

      சோணாடு கொண்டருளிய முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில், மாடாபத்தியம் குறித்தும் இறைவனுக்கு நிலக்கொடை வழங்கப்பட்டமை குறித்தும் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை வெட்டிய தச்சாசாரியனின் பெயர் ஒரு துண்டுக் கல்வெட்டின் இறுதியில் காணப்படுகிறது.


    சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் திருக்கோயிலில் நாள்தோறும் நடைபெறும் செலவினங்களுக்காக இறையிலியாக நிலம் வழங்கப்பட்டதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முடிவுரை

    மேலும் இவ்வூரில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் உள்ள ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:
வே.சிவரஞ்சனி

முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம்.

ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.

உதவியவை
1. தொல்லியல் துறை தகவல் பலகைகள்
2. மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் முதல் தொகுதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006.
3. தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006.