Pages

Tuesday 9 November 2021

திருப்புல்லாணி அரசுப்பள்ளி வளாகத்தில் சீனநாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கி.பி.12-13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாட்டுப் பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து அவற்றைப் பாதுகாக்க, 2010 முதல் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் மூலம் பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் மாணவர்கள் அறிந்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளியில் குடிநீர் தொட்டி கட்ட பள்ளம் தோண்டிய இடத்தில் கிடந்த சீனநாட்டுப் பானை ஓடுகள், கருப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், மான் கொம்புகளின் உடைந்த பகுதிகள் ஆகியவற்றை பத்தாம் வகுப்பு மாணவர்கள் து.மனோஜ், மு.பிரவினா, வி.டோனிகா, சீ.பாத்திமா ஷிபா ஆகியோர் கண்டெடுத்து மன்றச் செயலாளரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுருவிடம் கொடுத்தனர். இதை  ஆய்வு செய்தபின் இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,

போர்சலைன், செலடன் ஆகிய இருவகை சீனநாட்டுப் பானை ஓடுகளும் இங்கு கிடைத்துள்ளன. இதில் போர்சலின் ஓடுகளில் வெள்ளையில் சிவப்பு, கரும்பச்சை நிறத்தில் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பாசிநிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மட்பாண்டங்களில் இளம்பச்சை நிறத்தில் ஒரு ஓடு கிடைத்துள்ளது. கருப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகளில் கைவிரல் நகத்தால் உருவாக்கப்பட்ட அழகிய வடிவங்கள் அதன் வாய்ப்பகுதியில் உள்ளன. மேலும் இங்கு கிடைத்த உள்துளையுடன் உள்ள மானின் உடைந்த கொம்புகள் கிளையுள்ள உழை மானின் கொம்புகள் ஆகும். இவை வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்கும், பள்ளிக்கும் இடையில் உள்ள மேடான பகுதியில் இரும்பு உருக்காலை இருந்த தடயத்தை 2014-ல் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கோயில் மேற்குச்சுவர், பள்ளிவளாகம், பொன்னங்கழிக்கானல் ஓடை ஆகியவற்றிற்கு இடையிலான 20 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் பானை ஓடுகள் காணப்படுகின்றன.

எஸ்.பி.பட்டினம் முதல் பெரியபட்டினம் வரையிலான பெரும்பாலான ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரை ஊர்களில் சீன மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சீனநாட்டு வணிகர்களின் வருகைக்கு ஆதாரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்









ஜெயா டிவி




No comments:

Post a Comment