இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பள்ளி அளவிலான பொறுப்பாசிரியர்களுக்கு தொல் தமிழ் எழுத்துகள் பயிலரங்கம் மற்றும் தொல்பொருள்கள் கண்காட்சி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 26.10.2018 அன்று நடந்தது.
தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வே.இராஜகுரு அனைவரையும் வரவேற்றார். தொல்பொருள்கள் கண்காட்சியை மண்டபம் மாவட்டக் கல்வி அலுவலர் க.பாலதண்டாயுதபாணி திறந்து வைத்து பேசும்போது, பள்ளி மாணவர்களிடம் இத்தொல்பொருள்கள் பற்றிய அறிவை ஆசிரியர்கள் வளர்த்தால் கீழடி போன்ற பல தொல்லியல் களங்களை அவர்கள் கண்டுபிடித்துத் தருவார்கள். இக்காலத்து பல பிரச்சினைகளுக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய இயற்கை சார்ந்த பாரம்பரிய முறைகளில் தீர்வு இருக்கிறது. அவற்றை இம்மன்றம் மூலம் நாம் மாணவர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.
பின்னர் நடந்த தொல் தமிழ் எழுத்துகள் பயிலரங்கத்தில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி மு.விசாலி தமிழ் பிராமி எழுத்துகளையும், 9 ஆம் வகுப்பு மாணவி இரா.கோகிலா வட்டெழுத்துகளையும் அவை தோன்றியவிதம், காலம், எழுத்துகளின் அமைப்பு, எழுதும் விதம் பற்றியும் ஆசியர்களுக்கு பயிற்சி அளித்தனர். வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செ.இரவீந்திரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பனைக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் குமார் நன்றி கூறினார். முன்னதாக 2000, 1000, 800, 300 ஆண்டுகள் பழமையான செங்கற்கள் உள்ளிட்ட தொல்பொருள்களை அனைவரும் பார்வையிட்டனர்.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment